நோய் நாடி, நோய் முதல் நாடி...

நோய் நாடி, நோய் முதல் நாடி...

ஆரோக்கியம்

ர்க்கரை நோய் என்பது நோயே அல்ல. அது ஒரு குறைபாடு. நமது விந்தையான உடலுக்குள் கணையம் (pancreas) என்று ஒரு நாளமில்லா சுரப்பி இருக்கிறது. அதிலுள்ள 'பீட்டா' ஸெல்கள் மூலம், 'இன்சுலின்', (insulin) எனும் திரவம் சுரக்கிறது. இந்த இன்சுலின் குறைபாட்டால்,  ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடும். இது  'சர்க்கரை நோய்' என அழைக்கப்படுகிறது

மாவுப்பொருட்களிலிருந்து, 'மால்டோஸ்' (maltose) எனும் சர்க்கரையும், பால் பொருட்களிலிருந்து, லாக்டோஸ்' (lactose) எனும் சர்க்கரையும், பழங்களிலிருந்து, ' ப்ரக்டோஸ்'(fructose) எனும் சர்க்ரையும், சர்க்கரை மற்றும் இனிப்புப் பொருட்களிலிருந்து, 'சுக்ரோஸ்'(sucrose)  எனும் சர்ககரையும் பெறப்படுகின்றது. (இதற்கு  'குளுகோஸ்' என்ற பெயரும் உண்டு.)

இப்படிப் பெறப்படும் சர்க்கரை, வந்த வேலை முடிந்ததும், கழிவுகள் வழியாக வெளியேற வேண்டும். அப்படி வெளியேறாமல் ரத்தத்தில் கலந்து விடுமேயானால், பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.  இந்த நேரத்தில் கணையத்தில் சுரக்கின்ற இன்சுலின், சர்க்கரையைப் பார்த்து, 'அப்பா, நீ வந்த வேலை முடிந்தது. இனி உடலில் தங்க வேண்டாம். போய்வா', என சிறுநீர், வியர்வை மூலமாக அதனை வெளியேற்றும்.  சுரக்கின்ற இன்சுலின் போதுமானதாக இல்லையெனில், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கூடி பல துன்பங்களை ஏற்படுத்தும். இந்த நிலையைத்தான் 'சர்க்கரை வியாதி' (diabetes) அல்லது 'நீரிழிவு நோய்' என்கிறோம்.

சர்க்கரை நோய் காரணங்கள்
1. பரம்பரை (heridorrity)
தாய்க்கு சர்க்கரை நோய் இருந்தால் ஐம்பது சதவீதமும், தாய் தந்தை இருவருக்குமிருந்தால், தொண்ணூறு சதவீதம் இந்நோய் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, அவர்களின் வாரிசுகள், முப்பது வயது முதலே ரத்த சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். அப்போது முதலே உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று பழகிக்கொண்டால், சர்க்கரை நோய் தாக்கமின்றி நீண்ட நாள் வாழலாம்.

2. உடற்பயிற்சியின்மை.
ன்றைய நாளில் உடல் உழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. தொலைக்காட்சி, கைப்பேசி, கணிணி வரவுகளால்,  அமர்ந்த  இடத்திலேயே, மணிக்கணக்காக வாழ்க்கை. அலுவலகம் செல்வோர் வாகனங்களைப் பயன்படுத்துகிறார்கள். நடக்கவே அஞ்சுகிறார்கள்.  இதுபோன்ற காரணங்களால், அதிகப்படியான, சர்க்கரை, கொழுப்புப் போன்ற கழிவுகள் முழுவதுமாக வெளியேறாமல், பல பிரச்னைகளை ஏற்படுத்திவிடும்.

3. உடற்பருமன். (obesity)
சில குழந்தைகள் பிறக்கும்போதே  பருமனாகப் பிறந்துவிடுகின்றன. பலபேருக்கு, அதிக கொழுப்பு சார்ந்த உணவுகள், உடற்பயிற்சியின்மை, சோம்பிக்கிடத்தல் போன்றவை காரணமாக உடல் பருமனாகி விடுகிறது. கழுத்து, வயிற்றுப் பகுதிகளில் அதிகமாக கொழுப்புத் தங்கி விடுகிறது. இந்தக் கொழுப்பு, கணையத்தில் சுரக்கின்ற இன்சுலின், திசுக்களில் செல்லத் தடையாக இருக்கின்றன. இதை 'இன்சுலின் தடை'(insulin resistance) என்றழைக்கப்படுகிறது. இதனாலும் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

4. உணவு பழக்க வழக்கம்
ணவு  செரிப்பதற்கு வாய்ப்பில்லாமல் உண்பது, உண்டு விட்டு, ஒரு வேலையும் செய்யாமல், உறங்குவது,  உடலுக்குத் தேவையில்லாத உணவு வகைகளை (நொறுக்குத் தீனி வகைகள்)  உண்பது போன்றவை தீமைத் தரக்கூடியவை. தேவையான அளவு நீர் அருந்தாமலிருப்பதும் ஒரு காரணமாகும்.

5. மன அழுத்தம்.(stress)
டன் பிரச்னை, தொழிலில் பிரச்னை, கண்டதிற் கெல்லாம் அதிகக் கவலைப்படுவது போன்றவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதன் காரணமாக, அட்ரீனலின், நார் அட்ரீனலின், கார்டிஸால், கரோட்டின் போன்றவை அதிகமாக சுரந்து, இன்சுலின் பணியைத் தாமதப் படுத்திவிடும் அல்லது தடுத்து விடும். இதன் விளைவாக நீரிழிவு நோய் ஏற்படும்.

6. விபத்து
விபத்து போன்றவற்றால் கணையம் பாதிக்கப்படுதலால், இன்சுலின் சுரப்பில் வேறுபாடு ஏற்பட்டு, இந்நோய் ஏற்படுகிறது.

7. அதிக அளவு குழந்தைகளைப் பெறுதல்.
களிருக்கு கர்ப்பக் காலத்தில் தற்காலிகமாக, சர்க்கரை நோய் வரலாம். குழந்தை பிறந்ததும் சரியாகிவிடும். ஆனால், மூன்று கிலோ எடைக்கு மேல் குழந்தை பெறும் தாய்மார்கள், தலை பெரிதான குழந்தை  பெறும் தாய்மார்களுக்கெல்லாம்  சிலசமயம் இது நிரந்தர நோயாகி விடும்.  'ஹார்மோன்' பிரச்னைகளாலும், பெண்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும்.

சிகிச்சை முறைகள்
நீரிழிவு நோய் ஒருமுறை வந்துவிட்டால், 'உயிருள்ளவரை உஷா'.தான்.  குணப்படுத்த இயலாது. ரத்தச் சர்க்கரை  அளவைக்கட்டுக்குள், வைத்துக் கொண்டால் நீண்டநாள் நலமுடன் வாழலாம். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருந்தால் நீ எஜமானன். கட்டுப்பாடின்றி விட்டு விட்டால் அது எஜமானன். இதனால் நீரிழிவு நோய் உன்னை ஆட்டிப் படைக்கும்.

1. முறையாக ரத்தத்தில் சர்க்கரை அளவை  பரிசோதனைக் கூடங்களில் பரிசோதிக்க வேண்டும். அதாவது காலை வெறும் வயிற்றில்,  சாப்பிடுமுன்(fasting) ஒரு முறையும், ஆகாரம் சாப்பிட்டபின்(post prandial) ஒரு முறையும் எடுக்க வேண்டும். இரத்தத்தில்  சர்க்கரையின் மூன்றுமாத சராசரியைக் கணக்கிட, HB1AC பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும். தற்காலத்தில் வீட்டிலேயே பரிசோதித்துக்கொள்ள பல தரமான 'குளுகோமீட்டர்கள்' (glucometere) வந்து விட்டன.

2. ந்த முடிவுகளை, நீரிழிவு மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும். அவர் உங்களுக்கு, மருந்து மாத்திரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குவார். அங்கேயே உணவு நிபுணர் (nutrition expert) இருப்பார்கள். அவர்களின் அறிவுறுத்ததல் படி உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நீங்களாக மருந்துக் கடையில் போய்,"ஏன் ஸார் தலை வலிக்கிறது, ரெண்டு ஸாரிடானோ, ஆஸ்ப்ரோவோ குடுங்கள்", என்பது போல் சர்க்கரை வியாதிக்கு மருந்துகள் வாங்கி உண்ணக்கூடாது. அது ஆபத்தில் போய் முடியும். 'வாட்ஸ் ஆப்', ஃபேஸ்புக்', போன்ற சோசியல் மீடியாக்களில் வரும் அறிவுரைகளையும், மருந்துகளையும் ஒதுக்கித்தள்ள வேண்டும்.

3. வேளை தவறாது சரியான முறையில் மருந்து, மாத்திரை, ஊசி ஆகியவைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.  ஒரு நாள்தானே, ஒருவேளைதானே என மாத்திரை, மருந்துகளை எடுப்பதில் அலட்சியம் காட்டினால், பின்விளைவுகள் மோசமாகவேயிருக்கும். மாத்திரைகள் கணையத்தைத் தூண்டி, இன்சுலினை சுரக்கச் செய்கின்றன. இன்சுலினை  திசுக்களில் சேர்க்கின்றன. இன்சுலின் மருந்து ஊசிமூலம் உட்செலுத்தப்படுவதால், இன்சுலின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப் படுகிறது.

மாத்திரைகளை, ஊசி மருந்துகளை குறிப்பிட்ட அளவிற்கு மேல் எடுத்துக்கொள்வதால், 'தாழ்நிலை சர்க்கரை'(hypo sugar) என்பது ஏற்பட்டு மயக்கத்தில் கொண்டுபோய் விடுபவதோடல்லாமல், மரண ஆபத்தையும் ஏற்படுத்தும்.

4. நீரிழிவு நோய்க்கு ஒவ்வாத உணவுகளை, அறவே சாப்பிடக்கூடாது. அரிசி, கோதுமை போன்றவைகளை உண்பதால், உருவாகும் 'கார்போஹைட்ரேட்' (carbohydrate) ரத்த சர்க்கரை அளவை உயர்த்தும். எனவே, அவைகளை குறைவாகச் சாப்பிடவேண்டும்.   அதற்குப் பதிலாகக்  காய்களை நிறைய சேர்த்துக் கொள்ளலாம். வரகரிசி,  திணை, சாமை, கவுனி அரிசி போன்றவற்றை  சமைத்து சாப்பிட்டால், ரத்தச் சக்கரையின் அளவு கட்டுக் குள்ளிருக்கும். இனிப்பு வகைகளான, சர்க்கரை, வெல்லம், நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம் , தேன்,  ஆகியவற்றையும், அவைகளால் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள் ஆகியவைகளையும் சேர்க்கக்கூடாது. நல்ல சத்தான பச்சைக் காய்கறிகள், (vegetable salad) கீரை வகைகள், நார்ச்சத்து மிகுந்தவை, போன்றவற்றை எண்ணெயில் வதக்காமல், பொரிக்காமல்,  கூட்டுப் போல் செய்து சாப்பிடலாம்.   பழங்களில் சர்க்கரை அளவு குறைவான (low gycemic index) வைகளை எடுத்துக் கொள்ளலாம். புரோட்டின் சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவும்.  முளைகட்டிய பயறு வகைகள், பருப்பு வகைகளை,  தினம் சேர்த்துக்கொள்ளலாம்.  கொழுப்பு மிகுந்த உணவுகளில் கவனம் தேவை. பரோட்டா, சமோசா, பிட்ஸா, பர்கர் போன்ற மைதா மாவில் செய்யப்பட்ட பலகாரங்களை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. மைதாவில் உள்ள 'குளூடான்' (glutan) எனும் நச்சுப்பொருள், ரத்தசக்கரை அளவை வேகமாக அதிகரிக்கும்.  உப்பைக் குறைத்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உணவை குறைந்த அளவாக சாப்பிட வேண்டும். நன்றாகப் பசித்தபின் புசிப்பது நலம். ஏனெனில் அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு அதிகமாகும். சர்க்கரை அதிகமானால் பசியும் அதிகமாகும். உணவை அதிகமாக சாப்பிடத் தூண்டும். குறைவாகச் சாப்பிடும்போது, சர்க்கரையின் அளவு குறைவாக இருப்பதால், பசியும் அதிகமாக இருக்காது.

அசைவப் பிரியர்கள் கோழியிறைச்சியைத் தோலுரித்து மாதமிரு முறை எடுத்துக் கொள்ளலாம். முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு, சாப்பிடலாம். கடல் மீன்களில், நன்மை பயக்கும், ஒமேகா3  கொழுப்பு (omega fat) இருப்பதால்,  அளவோடு சாப்பிடலாம்.  இறால், நண்டு  போன்ற கூடு இனங்களில் கொழுப்பு அதிகமிருப்பதால் அவைகளை சாப்பிடக்கூடாது. ஆட்டிறைச்சி மாட்டிறைச்சி கூடவே கூடாது. 

மது, புகை விலக்குவது மிக நல்லது.  ஊறுகாய், அப்பளம், கருவாடு போன்றவைகளும் கூடாது. விருந்து விசேஷங்களில் வைக்கப்படும் இனிப்பு, கிழங்கு வகைகளை ஒதுக்க வேண்டும். பக்கத்திலிருக்கும் அதிமேதாவி, "அட சாப்டு மாப்ளே, சக்கரை ஏறுனா மாத்திரையைக் கூட போட்டுக்கலாம்" என தூண்டுவார்.

5. நீரிழிவிற்கு, உடற்பயிற்சி மிக மிக அவசியம். விளையாட்டுக்கள், நடைப்பயிற்சி போன்றவை மிகச் சிறந்தவையாகும். நடைப்பயிற்சியால், இறந்த திசுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன. கழிவுகள் விரைவாக  வெளியேற்றப்படுகின்றன. நல்ல சிந்தனையும், தெளிவும் ஏற்படுகிறது.  மன அழுத்தம் குறைகிறது. காலையில் , பிரம்ம முகூர்த்தத்தில், நாலரை மணிமுதல் ஆறு மணிக்குள்ளாக நடைப்பயிற்சி சென்று வருவது நலம்.  சூரியன் உதயமான பிறகு சென்றால் அதிக வியர்வை வெளியேறுவதால், நீர்ச்சத்து குறைபாடு(dehydration) ஏற்படும். கடுமையான உடற்பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனைப்படியே செய்ய வேண்டும். இதனால் ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். ஒரு டீஸ்பூன் சர்க்கரையை சாப்பிடுவதால், ரத்தத்தில் கலக்கும் சர்க்கரையைக் குறைக்க, இரண்டு, மூன்று நாட்களாகும்.  ஆனால் நடைப் பயிற்சியின மூலம் ஒருநாளிலேயே குறைத்து விடலாம்.

6. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனைகளையும், ஆண்டிற்கொருமுறை, கண், கால், இதயம், சிறுநீரகம், பாதம் போன்றவற்றின் பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். பிரச்னைகளிருந்தால், தாமதிக்காமல், மருத்துவ நிபுணரை அணுகுவது சிறந்த வழியாகும்.
தற்போது அரசுப் பொது மருத்துவமனைகளில், நீரிழிவு நோய்க்கு, சிறந்த சிகிச்சை அளிப்பதுடன், மாத்திரை களையும், ஏழைகளுக்கு இன்சுலின் ஊசி மருந்து களையும், இலவசமாகக் கொடுக்கிறார்கள். எனவே, தயங்காமல் அரசுப் பொது மருத்துவமனைகளை அணுகலாம்.
'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்’

-வள்ளுவம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com