நெய் VS ஆலிவ் ஆயில்… இந்திய சமையலறைகளைப் பொருத்தவரை எது உகந்தது?
நாம் சமையலறையில் பலவிதமான வழிகளில் எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். வறுக்கவும், நெய் தடவி வாட்டவும், பதப்படுத்தவும், சுடவும், பொரிக்கவும் என எண்ணெயின் பயன்பாடு தென்னிந்திய சமையலறைகளில் சற்று அதிகமாகத்தான் இருக்கிறது. இந்தியாவில், பல சமயங்களில் நெய்க்கு மாற்றாகக் கூட எண்ணெயைப் பயன்படுத்துகிறோம். அது உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையை வழங்குவது மட்டுமல்லாமல், நெய் சேர்ப்பதால் அந்த உணவுக்கு இன்னும் கூடுதலாகப் பல நன்மைகள் கிடைத்து விடுவதாகவும் பரவலாக அறியப்படுகிறது. ஆனால் அதற்காக எண்ணெய் பயன்பாட்டை முற்றிலும் ஆரோக்கியமற்றது என்றும் சொல்லி விட முடியாது. அது நீங்கள் எந்த வகையான எண்ணெயைத் தேர்வு செய்கிறீர்கள் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
குறிப்பாக ஆலிவ் எண்ணெய் பயன்பாடு தற்போது அதிகரித்து வருவதால், ஆலிவ் எண்ணெயின் பல நன்மைகளைப் பற்றி நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது என்பதையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டும். இந்தக் கட்டுரை வாயிலாக அதைப் பற்றிய மேலும் சில தகவல்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
நெய் VS ஆலிவ் ஆயில் - எது சிறந்தது?
பிரபல ஊட்டச்சத்து நிபுணர்களின் கருத்துப்படி, "பெரும்பாலான எண்ணெய்களை விட நெய் அதிக புகைப் புள்ளியைக் (Smoke Point)கொண்டுள்ளது, அதாவது அது உடைந்து தீங்கு விளைவிக்கும் கலவைகளை உருவாக்கத் தொடங்கும் முன் அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்படலாம். வறுக்கவும் அல்லது வதக்கவும் போன்ற அதிக வெப்பநிலையில் சமைப்பதற்கு இது ஒரு சிறந்த தேர்வாகும்." இதுவே இந்திய உணவுகளை சமைப்பதற்கு நெய் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. மறுபுறம், நெய்யோடு ஒப்பிடும் போது "ஆலிவ் எண்ணெய் குறைந்த புகை புள்ளியைக் (Smoke point) கொண்டுள்ளது என்பதோடு அதை அதிகம் சூடாக்கவும் முடியாது" என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
உதாரணமாகச் சொல்வதென்றால் சாலட் டிரஸ்ஸிங்கில் ஆலிவ் எண்ணெய் ஏன் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
ஏனென்றால், சாலட்டைச் சேர்க்கும் போது அது சூடாகாது. எனவே, அதிக வெப்பநிலையில் உணவை சமைக்க ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. நீங்கள் அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை வேறு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நெய் ஆரோக்கியமானதா?
நெய்யின் முக்கிய நன்மைகள்: உங்கள் உணவில் நெய்யை ஏன் சேர்க்க வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன:
1. ஆற்றலை அதிகரிக்கிறது: நெய்யில் நடுத்தர மற்றும் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது உங்களுக்கு ஆரோக்கியமான ஆற்றலை வழங்குகிறது. இதனால்தான் குளிர்காலங்களில் நெய்யை உட்கொள்வதால் உங்கள் உடலை சூடாக வைத்திருக்க முடிகிறது.
2.செரிமான அமைப்பை ஆதரிக்கிறது: நெய்யில் பியூட்ரிக் அமிலம் உள்ளது, இது உங்கள் வயிற்றில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்களுக்கு நல்லது. இந்த அமிலம் உங்கள் குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நெய் உங்கள் குடல் அமைப்பைச் சுத்தப்படுத்துவதாகவும், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் தருவதாகவும் கூறப்படுகிறது.
3.சருமத்திற்கு சிறந்தது: நெய்யில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஈ யின் உள்ளடக்கம் சருமத்திற்கு உகந்த பொருளாக அமைகிறது. உணவாக உட்கொள்ளப்படுவது தவிரவும், சருமத்தை மிருதுவாக மாற்ற நெய் வெளிப்புறமாகவும் பயன்படுத்தப்படுகிறது. சருமத்தில் நெய் தடவி ஊற வைத்து குளிக்கிறார்கள் சிலர். சிலர் கை நகங்களுக்கு நெய் பூசி பளபளக்கச் செய்கிறார்கள்.
4.இதயத்திற்கு நல்லது: நெய் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும், அதன் முழு பலனையும் அறுவடை செய்ய மிதமாக உட்கொள்ள வேண்டும். நெய்யில் உள்ள நிறைவுற்ற கொழுப்புச் சத்தும் சிலருக்கு பிரச்சனையாக இருக்கலாம், எனவே உங்களுக்கு ஏற்கனவே கொலஸ்ட்ரால் பிரச்சனைகள் இருந்தால் நெய் பயன்படுத்தும் முன் அளவை அறிந்து பயன்படுத்த தேர்ந்த ஒரு நிபுணரை அணுகவும்.
5. எடை இழப்புக்கு உதவலாம்: நெய்யில் இணைந்த லினோலிக் அமிலம், ஒமேகா-6 கொழுப்பு அமிலம் உள்ளது, இது தொப்பை கொழுப்பை எரிக்க உதவும். நெய்யில் கொழுப்பு-கரையக்கூடிய வைட்டமின்கள் மற்றும் பிற ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன.
அனைத்து கொழுப்புகளும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம்.
ஆக, வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் தயாரித்து உண்ணக்கூடியவர்களான நாம் ஆலிவ் எண்ணெயோடு ஒப்பிடும் போது நெய்யைத்தான் அதிகம் பயன்படுத்தத் தகுதியானவர்களாக இருக்கிறோம். இந்திய சமையலறைகளைப் பொருத்தவரை ஆலிவ் எண்ணெயை
அதிகபட்சமாக சூடுபடுத்தி அதன் நன்மைகளைக் குறைப்பதைக் காட்டிலும் நெய்யைப் பயன்படுத்தி அதிக பலன்களை அடையலாம் என்பது தான் சாத்தியமான தீர்வாக இருக்க முடியும்.