சிறு தானியங்கள் தரும் பெரும் நன்மைகள் !

சிறு தானியங்கள் தரும் பெரும் நன்மைகள் !

சிறு தானியங்கள் ஆண்டான இந்த ஆண்டில் சிறுதானியங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

பசிக்கும்,ருசிக்கும் உணவருந்திய நம் தலைமுறை தற்போது தன் அடுத்த தலைமுறையின் உணவு பழக்கத்தை கண்டு வருத்தப்படுவதாக உள்ளது. சிறுதானியங்கள் என்று சொல்லப்படும் கம்பு, தினை முதலான தானியங்களை உண்ட போது இல்லாத பலவிதமான நோய்கள் தற்போது இளவயதிலேயே வந்து விடுகிறது. நாம் உண்ணும் உணவில் சத்துக்களை விட தற்போது நச்சுக்களே அதிகம் உள்ளதால் உணவே நஞ்சாகி விடுகிறது.

கையில் சிறுதானியங்கள் என்ற வெண்ணெய் இருக்க ஆரோக்யம் என்ற நெய்யை தேடி அலைய வேண்டியதில்லை. ருசியாக பக்குவமாக சமைக்க இளம் வயதினரும் அன்றாடம் உணவில் விரும்பி உண்பர். அதில் உள்ள சத்துக்கள் எல்லா வயதினருக்கும் ஏற்றதாக உள்ளது.

தினை: இந்த தானியம் உலக அளவில் பயிரிடப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. சமைப்பது எளிது. செரிமானமும் எளிதில் ஆகி சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

சாமை: சாமை அதிக மருத்துவ குணம் கொண்டது. வயிற்றுப் புண்ணை ஆற்றும் சக்தி வாய்ந்தது. மலச்சிக்கல் வராமல் தடுக்கும். எல்லா வயதினரும் உண்ண ஏற்றது.

வரகு: வரகு தண்ணீர் அதிகம் இல்லாமல் நன்கு வளரக் கூடியது. உடல் எடையை குறைக்க வல்லது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தருவது. கண் பார்வை தெளிவைத் தந்து ஆரோக்கியமான தேகத்தை கொடுக்கும்.

கம்பு: கம்பு உடலுக்கு குளிர்ச்சி தரும். பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றது. வயிற்றுப் புண், குடல் புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. இரும்புச் சத்து, மாவுச்சத்து அதிகம் உள்ளதால் வளர் பருவத்தினர் உணவாக உட்கொள்ள ஆரோக்யம் மேம்படும்.

கேழ்வரகு அல்லது ராகி: கேழ்வரகில் கால்சியம் மற்றும் பலவித சத்துக்கள் நிறைந்துள்ளன. நீரிழிவை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் . குழந்தைகளுக்கு மிகச் சிறந்த உணவு. வயது அதிகமானோர் கேழ்வரகை ரெகுலராக எடுத்துக் கொள்ள எலும்புகள் வலுவாக்கி, அவர்களின் ஆரோக்யத்தை மேம்படுத்தும்.

குதிரை வாலி: இந்த தானியம் உடல் உறுப்புகளை தூய்மைப் படுத்தும் நற்குணம் கொண்டது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமான மண்டலத்தை சுத்தம் செய்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும். புரதச்சத்து, இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

சோளம்: சோளம் நம் முன்னோர் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்டு உணவில் இடம் பெற்றது. மாவுச்சத்து, நார்ச்சத்து அதிகம் உள்ளது . சிறிது சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு தருவதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள சத்துக்கள் முழுமையாக கிடைப்பதோடு உடல் எடையையும் குறைக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

கொள்ளு: கொள்ளு தானியம் சளி, இருமலுக்கு நல்லது. மலச்சிக்கல் வராமல் தடுக்கும். வயிறு உபாதைகளை தீர்த்து உடல் எடை குறைப்பிலும் உதவி புரிகிறது.

இவ்வாறு பல மருத்துவ குணங்கள் கொண்ட சிறுதானியங்களை உணவாக எடுத்துக் கொள்ள பலன்கள் பல கிடைக்கும்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com