பெருகிவரும் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம்.

பெருகிவரும் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம்.

ன்று வீடுகளில் நுழைந்தால் அம்மா ஆசையாக அவித்த இட்லிகளின் மணத்துடன் பருப்பு சாம்பாரின் மணம் நாக்கில் நீரை வரவைத்து சாப்பிடும் ஆசையைத் தூண்டும். ஆனால் இன்றோ அறிவியல் முன்னேறி கல்வியில் பெண்களும் சாதித்து சுயசார்புடன் இருவரும் பணிக்குச் செல்லும் சுழலில் சமையல் செய்வதென்பதே சுமையாகிப் போனது அந்த இடைவெளியில் உள்ளே நுழைந்து இன்று இவைகள் இல்லாமல் நம் உணவு இல்லை எனும் நிலையில் நம்மை அடிமைப்படுத்தி வைத்துள்ளது துரிதஉணவு எனப்படும் ஃபாஸ்ட்புட் வகைகள்.
        நம் முன்னோர்களின் அன்றாட உணவாக கேழ்வரகு, கோதுமை, சோளம், சாமை, திணை, குதிரைவாலி, வரகு, கம்பு உள்ளிட்ட தானியங்களே இருந்து வந்தன. காலப்போக்கில் பணக்காரர்கள் உணவுகளில் அவ்வப்போது அரிசிச் சோறு  இடம் பிடித்தது. பொங்கல் தீபாவளி போன்ற முக்கியப் பண்டிகைகளில் அரிசி உணவுகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. அதிலும் மாற்றத்துடன்  காலையில் இட்லி, தோசை, மதியம் பொரியல், சாம்பார், ரசம், மோருடன் அரிசி சோறு  இரவில் இட்லி, சப்பாத்தி போன்ற உணவுகள் உட்கொள்ளப்பட்டது. சர்க்கரை நோய்க்கு தகுந்த உணவு என்ற நோக்கில் வடநாட்டு சப்பாத்தி நம்மிடையே திணிக்கப்பட்டது.

       இந்த நிலையில் 1990 ஆம் ஆண்டு வாக்கில் உணவகங்களில்   மேலைநாட்டு உணவு பழக்க வழக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் நூடுல்ஸ் பிரதானமாக இருந்தது. அதன் பின் மாறியதுதான் நம் உணவுக் கலாச்சாரங்கள். அசைவத்தில் நாட்டுக் கோழிகளுக்குப் பதில் விரைவாக வளர்ந்து விரைவில் ஜீரணம் ஆகும் செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட சத்தற்ற போந்தாக்கோழிகள் இடம் பிடித்து அவற்றினை உற்பத்தி செய்யும் கறிக்கோழி பண்ணைகள் அதிக அளவில் வந்தது.

      ரெடிமேடு சிக்கன் உணவு வகைகள் மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியது. அதில் பலவிதமான கண்டு பிடிப்புகளுடன் நாடு முழுவதும் ஃபாஸ்ட் புட் கடைகளின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஊரிலும் தெருவுக்குத் தெரு ஃபாஸ்புட் கடைகள் மற்றும் சில்லி சிக்கன் கடைகள் உள்ளன. உடலுக்கு நலன் தரும் பழக்கடைகளும் சிறு தானிய உணவுக்கடைகளும் இருந்தாலும் மக்கள் கூட்டம் செல்வதென்னவோ நலனைப் பாதிக்கும் சில்லி சிக்கன் கடைகளை நோக்கித்தான். அந்த அளவுக்கு அந்த உணவுகளின் ருசியினை சில பொருள்கள் மூலம் அதிகரித்து நாக்குகளை அடிமைப் படுத்தி உள்ளது துரித உணவுகளின் பெருக்கம். அதிகரித்துள்ளது.

       இது குறித்து நகரமெங்கும் உள்ள உணவியல் நிபுணர்களும்,  மருத்துவர்களும் கவலை தெரிவித்து வருகின்றனர்.

     இரவு நேர உணவகங்களில் மக்கள் அதிகமாக துரித உணவுகளையே விரும்பி உட்கொள்கின்றனர். கலாச்சார மோகத்தில்  தொடங்கிய உணவுப் பழக்கத்திற்கு அடிமையாக மாறிய மக்கள் காலப்போக்கில் கையில் பணம் குறைவாக உள்ளபோதும், அதற்கு ஏற்ப சாதாரண சாலையோர ஃபாஸ்ட்புட் கடைகளுக்கு சென்று அங்கு தயாரிக்கப்படும் நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், மஞ்சூரியன் வகைகளை மலிவாக வாங்கி உண்கின்றனர். ஆனால் இந்த துரித உணவுகளைத்  தயாரிக்கும் போது சுவைக்காக மிளகாய், தக்காளி, சோயா சாஸ்கள், இஞ்சி பூண்டு பேஸ்டுகள் டேஸ்ட் மேக்கர் பவுடர் அஜினோமோட்டோ ஆகியவற்றை உணவில் சேர்க்கின்றனர். மக்களை கவரும் வகையில் வண்ணம் சேர்க்க செயற்கை நிற மூட்டிகள் அதிக அளவு சேர்க்கப்படுகிறது. இப்படி சேர்க்கப்படும் பொருள்களில் உள்ள ரசாயனங்களால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் ஏற்படுகிறது.

      அஜினோமோட்டோவைப் பற்றிய விழிப்புணர்வு வரத்துவங்கிய பின் இதை உபயோகிப்போரின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனாலும் இதன் மீதான முழு விழிப்புணர்வு இன்னும் மக்களிடையே இன்னும் முழுமையாக வரவில்லை  இது போன்ற செயற்கை சுவையூட்டிகளால் தொண்டையில் சதை வளர்வது, ஒவ்வாமை,  குடல்புண்கள், இரைப்பை பாதிப்புகள் கேன்சர் கட்டிகள், போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படுகிறது. துரித உணவுகளை இரண்டு முறை உணவு வேக வைக்கப்படுவதால் அதை சாப்பிடும்போது  உடல் சூடேறி ஜீரண உறுப்பு பாதித்து பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் இரண்டு முறை சமைத்த உணவு சாப்பிடும்போது ஜீரண உறுப்பில் இருக்கும் சுரக்கும் அமிலம் ஜீரணம் செய்வதற்கு போராடி களைத்துவிடும் . இதனால் உடல் சோர்வு போன்றவைகள் ஏற்படும்.

     மேலும் ஜங்க் ஃபுட் உணவுகளை அதிக அளவில்  உட்கொள்வதால் மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு மன அழுத்தம், பதட்டம், உடல் பருமன் போன்றவைகள் ஏற்படுகிறது. இந்த வகை உணவுகள் அதிகம் கொழுப்புச்சத்து கொண்டதால் குழந்தைகளுக்கு கற்றல் குறைபாடு, மறதி, விழிப்பு நிலை குறைபாடு புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் ஆகியவையும் ஏற்படுகிறது.  இதனால் உடல் பருமனில் துவங்கி எல்லா வகையான வியாதிகளும் வரிசை கட்டி நிற்கிறது. பொதுவாக நம் உணவில் சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த எம்.எஸ்.ஜி வகை உப்பை உபரியாக பயன்படுத்தும்போது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக துரித உணவுகளை சாப்பிடுவதால் மூளையின் அளவு 2 மில்லி மீட்டர் குறைவதாக மருத்துவ ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. நல்ல ஊட்டச்சத்து நிரம்பிய உணவை சாப்பிடுபவர்களின் மூளை 3.6 மில்லிமீட்டர் அளவுக்கு கூடுதல் வளர்ச்சி பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் மூளை வளர்ச்சி குறையுடன் மட்டும் விட்டுவிடுவதில்லை துரித உணவுகள். இதன் மூலம் சீக்கிரமே முதுமையும் ஏற்படுகிறது என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே பதப்படுத்தப் பட்ட இருமுறை  வேக வைக்கப்படும் ஃபாஸ்போர்ட் உணவுகள் மதுவை விட அதிக தீங்கைத் தரக்கூடியது. ஆனால் மதுப்பிரியர்களின் சைட் டிஷ் ஆகவும் துரித உணவுகளே உள்ளது. விரைவில் உடல் நலன் கெடும் வழியைப் பின்பற்றி தங்கள் ஆயுளைக் குறைத்துக் கொள்கின்றனர் இன்றைய இளைஞர்கள்.

       கூடிய வரை ஃபாஸ்ட்புட் கலாச்சாரத்தை தவிர்த்து நம் பிள்ளைகளுக்கு பாரம்பரிய உணவான அரிசி, கேழ்வரகு, கம்பு சோளம், சாமை, திணை உள்ளிட்டவைகளை சாப்பாட்டில் தந்து அவர்களின் எதிர்காலத்தை ஆரோக்கியத்துடன் வாழ வைக்க ஒவ்வொரு பெற்றோரும் முன் வரவேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com