தசை சுருக்கப் பிரச்னைக்குத் தீர்வு தரும் கற்பூரவள்ளி தேனீர்!

தசை சுருக்கப் பிரச்னைக்குத் தீர்வு தரும் கற்பூரவள்ளி தேனீர்!

வீட்டில் சிறு தொட்டிகளில் வைத்து வளர்த்தாலே புதராக மண்டிப்போகும் ஓர் அற்புத மூலிகை கற்பூரவள்ளி செடியாகும். நல்ல வாசனையோடு இருக்கும் இந்தச் செடியின் இலைகள் தடிப்பாக நீர்ப்பிடிப்புடன், கசப்பு சுவையும், காரத்தன்மையும் கொண்டு விளங்குகின்றன. இன்றைக்கு ஆண், பெண் என பாகுபாடில்லாமல் பலருக்கும் இருக்கும் பிரச்னை தசை சுருக்கம். அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இந்த தசை சுருக்கம் என்பது, உடலளவிலும் மனதளவிலும் பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த தசை சுருக்கத்துக்கு சிறந்த மருத்துவ நிவாரணியாக திகழ்கிறது கற்பூரவள்ளி தேனீர். அதோடு, சளி மற்றும் வறட்டு இருமலைப் போக்குவதிலும் இதன் பயன்பாடு மிகப்பெரியதாக உள்ளது.

இனி, பல்வேறு உடல் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் கற்பூரவள்ளி தேனீர் எப்படி தயாரிப்பது என்பதைக் காண்போம்.

ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் ஒரு டேபிள் ஸ்பூன் டீ தூளை போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். பிறகு அதில் நன்கு கழுவிய கற்பூரவள்ளி இலைகள் ஐந்தை போட்டு மேலும் கொதிக்க விடுங்கள். பிறகு அதில் சிறிது இஞ்சியை துண்டு துண்டாக வெட்டி போடுங்கள். அதனுடன் ஒரு ஏலக்காயை பொடித்துப் போட்டு நன்கு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு அதை கோப்பை ஒன்றில் ஊற்றி சூடாக இருக்கும்போதே அதனுடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு தேன் கலந்து பருகி வர, தசை சுருக்கம் மற்றும் சளி இருமல் பிரச்னைகள் விரைவில் காணாமல் போகும். இந்த கற்பூரவள்ளி மூலிகை தேனீரை மாலை வேளைகளில் அருந்து வருவது மிகவும் சிறப்பு. இந்த கற்பூரவள்ளி மூலிகை தேனீர் மிகச் சிறந்த வியர்வைப் பெருக்கியாகவும் காய்ச்சல் தீர்க்கும் மருந்தாகவும் திகழ்கிறது. ரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு அபூர்வ மூலிகையாகவும் இது விளங்குகிறது.

இரண்டு மி.லி கற்பூரவள்ளி இலை சாறை, எட்டு மி.லி. தேனுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வர நாட்பட்ட மார்பு சளி வெளியேறும். மேலும், குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்துவதிலும் நன்றாக செயல்படுகிறது. மேலும், குழந்தைகள் பருகவென கொதிக்கவைக்கும் குடிநீரில் நன்கு சுத்தம் செய்யப்பட்ட நான்கு அல்லது ஐந்து கற்பூரவள்ளி இலைகளைப் போட்டு சிறிது நேரத்தில் எடுத்து விடுங்கள். இப்படிச் செய்வதால் அந்த இலையின் சாறு அந்த நீரில் கலந்து பச்சை நிறத்தோடு காணப்படும். அந்தத் தண்ணீரில் சிறிது சர்க்கரைக் கலந்து குழந்தைகளுக்கு இரண்டு நாட்கள் கொடுத்து வர, குழந்தையின் சளி, இருமல் கட்டுக்குள் வரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com