நம்மை நாமே  கவனித்துக்கொள்ள வேண்டும்.

நம்மை நாமே  கவனித்துக்கொள்ள வேண்டும்.

உடல் நலம்

டிக்கடி மருத்துவர்களைத் தேடி ஓடாமல் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தக்க முன்னெச்சரிக்கைகள் எடுத்துக்கொண்டு நம்மை நாமே கவனித்துக்கொள்ள வேண்டும். “டாக்டரிடம் போக வேண்டும் என்ற அவசியத்தை உணர்ந்தால் மட்டுமே அவரிடம் போனால் போதும்” என்கிறார் டக்டர் ரோகிணி.

என்ன செய்ய வேண்டும்?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக் காலம்தொடங்கிவிட்டது. மழைக்காலங்களில் காய்ச்சல், சளி, இருமல் என உடல் நல பிரச்னைகளும் ஏற்படும். சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் பரவலாக ஏற்பட்டது. இந்நிலையில், வட கிழக்கு பருவ மழையையொட்டி, நாம் நம்மை எப்படி காய்ச்சல் உள்ளிட்ட மழைக்கால உடல் நல பிரச்னைகளிலிருந்து தற்காத்துக்கொள்வது என்பது குறித்து பொதுநல மருத்துவர் பிகாஷ் ரெட்டியிடம் பேசினோம்.

"மிகப்பெரும் அளவில் பாதிப்பு இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டில் வைரஸ் காய்ச்சல், ஃப்ளூ காய்ச்சல், டெங்கு காய்ச்சல் உள்ளிட்டவை ஆங்காங்கே ஏற்பட்டு வருகின்றது. ஆனால், கொரோனா தடுப்பூசியை மக்கள் பரவலாக எடுத்துக்கொண்டதால், குறிப்பிட்ட தொற்று நமக்கு வந்துபோயிருந்தால் அதனுடன் இணைந்த இணை தொற்றுக்கும் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அதனால், டெங்கு உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகள் ஏற்படும் நிலை இல்லை" என்றார்.

மழைக்காலத்தில் காய்ச்சல் வருவது மிகவும் இயல்பு. காய்ச்சலின் முதல் நாளில் முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யக்கூடாது. காய்ச்சல் ஏற்பட்ட குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. பருவமழை காலத்தில் ஏற்படும் காய்ச்சல் 2 நாட்கள் நீடிக்கும். ஒருவாரம் உடல் சோர்வு இருக்கும். இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவர்களை சென்று பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

நீர்ச்சத்து அதிகமான உணவுப்பொருட்கள், பாரசிட்டமால் எடுத்துக்கொண்டால் சரியாகிவிடும். ஆனால், காய்ச்சலுடன் சளி, இருமல், வாந்தி உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் காலம் தாழ்த்தாமல் அருகாமை மருத்துவர்களை சந்திக்க வேண்டும்

எனினும் பருவமழை காலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

• தினமும் காலை, மாலை குளிக்க வேண்டும்.

• ஆரோக்கியமான சரிவிகித உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். வீட்டு உணவுகளையே உண்ண வேண்டும். உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். உணவகங்கள் பயன்படுத்தும் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றால் உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுவிடவோ அல்லது ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கோ வாய்ப்பு அதிகம்.

• வீட்டில் அசைவ உணவுகள் சமைத்து சாப்பிடும்போது அதிக காரம், எண்ணெய் சேர்க்காமல் இருப்பது நல்லது.

• போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். தண்ணீரைக் காய்ச்சி அருந்துதல் சிறந்தது. குளிர்காலத்தில் தாகம் அதிகமாக எடுக்காது. இருந்தாலும், தினமும் குறைந்தது 2-3 லிட்டர் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிறுநீர் தொற்று ஏற்படும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

• உணவில் புரோட்டீன் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காய்ச்சல் இருக்கும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டார், நெல்லை அரசு மருத்துவமனை மருத்துவர் அஷ்ரஃப் அலி.

• நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும், கஞ்சி உள்ளிட்ட உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். பழங்கள், பழச்சாறு அருந்தலாம். மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும்.

• காய்ச்சலுடன் அதிகப்படியான தலைவலி, உடல் வலி ஏற்படும்போது மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

• டெங்கு காய்ச்சல் என்றால், முன் நெற்றி வலி, முழங்கால் வலி, வயிற்று வலி இருக்கும். ரத்தம் உறையும் தன்மை குறைவதால், மலத்தின் நிறம் கருப்பு நிறமாகும். இந்த அறிகுறிகளை உதாசீனப்படுத்தக் கூடாது.

• தாமாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக் கூடாது. சில மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்திவிடும். சாதாரண விஷயம் பெரும் பிரச்னையாகிவிடும் .

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com