பாட்டி வைத்தியம் – கை மருத்துவம்

பாட்டி வைத்தியம் – கை மருத்துவம்

அதிமதுர அற்புதம்!

திமதுரத்தைப் பொடியாக்கி நீரில் ஒரு ஸ்பூன் போட்டு இரவு முழுவதும் வைத்து, மறுநாள் அரிசி கஞ்சியுடன் சேர்த்து,  இந்த நீரைக் குடித்து வர வயிற்று புண் (அல்சர்) குணமாகும். இதனையே கஷாயமாக செய்து குடிக்க மூட்டு வலிக்கு மிகவும் சிறந்தது.

அதிமதுரத் துண்டு ஒன்றை சிறியதாக எடுத்து, வாயில் அடக்கிக்கொள்ள உமிழ்நீர் சுரக்கும் அல்லவா... அதனை மெல்ல மெல்ல விழுங்கி வர தொண்டைக் கமரல், கரகரப்பு, தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து, வெளிவந்துவிடும். பொதுவாக அதிமதுரம் சாப்பிட இருமல், வயிற்றுப்புண், சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் போன்றவை குணமாகும்.

தோள்பட்டை வலி நீங்க:

ரு வாணலியில் மணலைப் போட்டு, நன்கு சூடாகும் வரை வறுத்து, ஒரு துணியில் சிறு மூட்டையாகக் கட்டி, வலியுள்ள தோள்பட்டை பகுதியில் ஒத்தடம் கொடுக்க வலி நீங்கும். இதே போல் கோதுமைத் தவிடு, அரிசி தவிடு கொண்டும் ஒத்தடம் கொடுக்கலாம்.

ஐஸ் கட்டிகள் கொண்டு ஒரு முறை ஒத்தடம், மறுமுறை சூடான ஒத்தடம் என மாறி மாறிக் கொடுக்க, விரைவில் தோள்பட்டை வலி குணமாகும்.

விளக்கெண்ணையை சிறிது சூடு செய்து, மிதமான சூட்டில் மசாஜ் செய்ய வலி நன்கு குறையும்.

சளி இருமலுக்கு:

வாய் ஓயாமல் இருமுபவர்கள்  5,6 மிளகு எடுத்து வாயில் போட்டுக்கொண்டு மெள்ள கடித்து ஒதுக்குங்கள். உமிழ் நீர் கலந்த அதன் சாறை மெதுவாக உள்ளே இறக்க இருமல் குறையும். 

சளி இருமலுக்கு கஷாயம்:

துளசி 20 இலைகள்,  மிளகு 10,   இஞ்சி ஒரு துண்டு தோல் நீக்கியது, கற்பூரவல்லி ஐந்தாறு இலைகள் சேர்த்து வெறும் வாணலியில் சூடு வர வதக்கி ஒரு தம்ளர் நீர் சேர்த்து மஞ்சள் தூள் அரை ஸ்பூன் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டி குடிக்க சளி வெளியேறும். இருமலும் கட்டுப்படும்.

குதிகால் வலி குணமாக:    

திகமாக நடப்பது, அதிக எடையைத் தூக்குவது, முறையற்ற காலணிகளை அணிவது, உடல் எடை அதிகமாக இருப்பது ஆகியவைதான் குதிகால் வலி  வரக் காரணமாக இருக்கும். இதற்கு நொச்சி இலைகள் 10, வாதமுடக்கி ஐந்தாறு இலைகள் எடுத்துக்கொண்டு இவற்றை வாணலியில் சிறிது விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பொறுக்கும் சூட்டில் குதிகாலில் வைத்து கட்ட வலி குணமாகும். அதேபோல் எருக்கன் செடி இலைகளை ஐந்தாறு எடுத்து வந்து நெருப்பில் வாட்டி குதிகாலில்  போடலாம். அல்லது புது செங்கல் ஒன்றை எடுத்து காஸ் அடுப்பின் மேல் வைத்து நன்கு சுட்டவுடன் எடுத்து அதில் எருக்கன் இலைகளை வைத்து அதன் மேல்  நிற்க குணமாகும்.

சிறு குழந்தைகளுக்கு:

சிறு குழந்தைகள் சில சமயம் விடாமல் அழும். நமக்குக் காரணம் புரியாது விழிப்போம். அதற்குச் சிறந்த பாட்டி வைத்தியம் ஒன்று உண்டு. இரண்டு வெற்றிலைகளை எடுத்து, விளக்கெண்ணையை ஒரு பக்கம் தடவி, லேசாக சூடு செய்து குழந்தையின் வயிற்றின் மேல் போட சில நொடிகளில் அழுகை நின்று குழந்தை சிரிக்க ஆரம்பித்து விடும்.

சிறு குழந்தைகளுக்கு வசம்பை (பிள்ளை வளர்ப்பான்) ஒரு துண்டு எடுத்து நல்லெண்ணெயில் முக்கி விளக்கில் காட்டி நன்கு கருக்கி அதன் பொடியை சிறிது நாக்கில் தேய்த்துவிட வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், பேதி போன்றவை குணமாகும்.

வசம்பு ஒரு சிறந்த கிருமி நாசினி. இதனைச் சுட்டு அதன் கரியைத் தேங்காய் எண்ணெயில் குழைத்து நெற்றி, கன்னம், காலின் மேல்புறம் பொட்டு வைக்கும் பழக்கம் இன்றைக்கும் நம் தாய்மார்களிடம் உண்டு.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com