இருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கும் பாட்டி வைத்திய முறை பஞ்சரத்ன கஷாயம்!

இருமலுக்கு மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கும் பாட்டி வைத்திய முறை பஞ்சரத்ன கஷாயம்!

வெயில் காலம் இத்தனை கிட்டே நெருங்கியும் கூட கிளைமேட்டில் ஈரப்பதம் இன்னும் குறையவே இல்லை. பகலில் சூரியன் உச்சிக்கு வரும் போது வெயில் உறைத்தாலும் அதிகாலையிலும் பின்னிரவிலும் இன்னும் அதிகக் குளிர் நிலவத்தான் செய்கிறது. அதன் விளைவு தான் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலரும் இன்னனும் இருமல், சளி, மர்மக் காய்ச்சல் என்று அவதிப்பட வேண்டியதாகிறது.

சரி செய்து கொள்வோம் என்று டாக்டரை அணுகினால் அவரோ இருமலுக்கு நீங்கள் என்ன தான் டானிக், மாத்திரை என்று சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் அது முற்றிலும் குணமாக 7 நாட்களாவது ஆகும் என்று விடுகிறார். அவர் சொல்வது நிஜம் தான் என்பது பலருக்கும் இப்போதெல்லாம் அனுபவப் பாடமாகி இருக்கும். அந்த அளவுக்கு இந்த இருமலும், சளியும் ஒவ்வொருவரையும் வாட்டி வதைத்து விட்டுத்தான் ஓயும்.

ஒருமுறை சளி பிடித்தால் போதும் அது மெதுவே மூக்கடைப்பு, தொண்டை வறளுதலில் தொடங்கி தலைவலி, கண்களில் நீர் வடிதல், கண் எரிச்சல், வறட்டு இருமல், நெஞ்சு இரைச்சல், நல்ல தூக்கத்திலும் கூட கர்,கர்ரெனும் ஓசையுடன் மூச்சுக்குழாய்க்கும், தொண்டைக்கும் இடையே சளி அடைத்திருக்கும் உணர்வு, காது வலி என்று ஏகப்பட்ட உபத்திரவங்களில் கொண்டு விட்டு விடும். இத்தனை அவஸ்தையையும் எந்த வித நிவாரணமும் இன்றி தாங்கிக் கொள்ளத்தான் வேண்டுமா என்ன?! தேவையே இல்லை.

இந்தத் தொல்லையிலிருந்து உடனடியாக விடுபட முடியாவிட்டாலும் சற்றே இதமாக உணர இருக்கவே இருக்கிறது பாட்டி வைத்திய முறைகளில் ஒன்றான பஞ்ச ரத்ன கஷாயம். இதை என் பாட்டி வீட்டில் யாருக்கு சளித்தொல்லை, இருமல் என்றாலும் தொன்று தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பர்ய வழக்கமாக வைத்திருந்தார். அதன் செய்முறை ரகசியத்தைத் தான் இப்போது உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.

தேவையான பொருட்கள்:

சுக்கு - 3 சிறு துண்டுகள்

மல்லி - 8 டேபிள் ஸ்பூன்

மிளகு - 1 டேபிள் ஸ்பூன்

நயமான பனங்கல்கண்டு - 1/4 கிலோ

ஏலக்காய் - 5

செய்முறை:

சுக்கு, மல்லி, மிளகு, ஏலக்காயைத் தனியாக வெறும் வாணலியில் வாசம் வரும் வரை லேசாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். நயமான பனங்கல்கண்டு என்றால் பொதுவாக கற்கள் இருக்காது. எதற்கும் ஒருமுறை கல், தூசு சுத்தம் பார்த்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்போது வறுத்து ஆற வைத்த பொருட்களோடு பனங்கல்கண்டையும் சேர்த்து மிக்ஸியில் இட்டு அரைகுறையாக அல்லது சற்று கரகரப்பான பதத்தில் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த சூடு ஆறிய பின் இந்தப் பெளடரை ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு சளி, இருமல் தாக்கம் இருக்கும் போது ஒவ்வொரு நாளும் இரவில் தூங்கச் செல்லும் முன் வெறும் தண்ணீரில் இந்தப் பொடியை 1 டீஸ்பூன் கலந்து நன்றாகக் கொதிக்க விட்டு இறக்கிப் பின் நாக்கு பொறுக்கும் சூட்டுக்கு வந்ததும் அருந்தலாம்.

பால் சேர்க்கக் கூடாது.

இந்த பாட்டி வைத்திய முறை இப்போது மட்டுமல்ல கொரோனா பாதிப்பில் உலகே திணறிக் கொண்டிருக்கும் போது கூட எங்களுக்கு நன்றாக கை கொடுத்து நிவாரணம் அளித்தது.

நீங்களும் இதே முறையில் செய்து அருந்தி பயன்பெறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com