பூசணி விதையில் இவ்வளவு நன்மைகளா?

பூசணி விதையில் இவ்வளவு நன்மைகளா?

பூசணிக்காயை ஒரு சிலர் தவிர, பல வீடுகளில் உணவில் சுவைக்காகவும், மருத்துவ குணத்துக்காகவும் பயன்படுத்துகிறார்கள். சமைப்பதற்கு பூசணிக்காயை நறுக்கியவுடனேயே விதைகளை அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள். அதனுள் இருக்கும் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கிறது. பூசணிக்காய் பல்வேறு நன்மைகளை கொண்டது.

பூசணி விதைகளை தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால், தைராய்டு பிரச்சனையை போக்கி, ஆழ்ந்த உறக்கத்தையும் அளிக்கிறது. தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவில் பத்தில் ஒருவர் பாதிக்கப்படுகிறார்கள்.

மூளை, இதயம், தசைகள் மற்றும் பிற உறுப்புகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான ஹார்மோன்களை தைராய்டு சுரப்பி வெளியிடுகிறது. உடல் தனக்குக் கிடைக்கும் ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும் கதகதப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது

2021ஆம்ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்றிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற பெண்களுக்கு மகப்பேறுக்கு பிந்தைய முதல் மூன்று மாத காலத்தில் 44.3 சதவீதம் பேருக்கு தைராய்டு சுரப்பி குறைபாடு உண்டாகிறது.

அயோடின் போன்ற சில ஊட்டச்சத்துக்களின் குறைபாடு தைராய்டு செயலிழப்புக்கான காரணங்களில் ஒன்றாகும். ஆரோக்கியமான தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை பராமரிக்க ஒரு சீரான உணவை உட்கொள்வது முக்கியமாகும்.

தைராய்டு நோயைக் கட்டுப்படுத்த, பழங்கள் மற்றும் காய்கறிகள், பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை மற்றும் இறைச்சி ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அந்த வகையில், தைராய்டு செயல்பாட்டை உறுதி செய்வதிலும், தைராய்டு அளவை ஒழுங்குபடுத்துவதிலும் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக தைராய்டுதிசுக்களைப் பாதுகாப்பதிலும் முந்தரி பருப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.

பூசணி விதைகளில் துத்தநாக சத்து அதிகளவு உள்ளதால், இது தைராய்டு சுரப்பியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. பூசணி விதைகளில் உள்ள டிரிப்டோபானின், தூக்கத்தை ஊக்குவிக்கும் அமீனோ அமிலமாகும். வறுத்த பூசணி விதைகளை தினமும் உட்கொண்டு வந்தால் ஆழ்ந்த உறக்கத்தை அளித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. வறுத்த பூசணி விதைகளை இரவில் சாப்பிட்டு வருவது நல்லது.

பூசணி விதையில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி பார்ப்போம்...

பூசணி விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ‘இ’ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

ப்ரோஸ்டேட் வீக்கம், நீரிழவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்றுமே ஆண்களை பாதிக்கும் நோய்களாகும். இந்த மூன்று நோய்களியயும் குண்மாக்கும் சக்தி பூசணிக்காயில் உள்ளது.

பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த விதையில் மிகவும் முக்கியமான குயூகர்பிட்டேசின் உள்ளது. இது புரோஸ்டேட் விரிவைக் குணப்படுத்துவதுடன் மற்ற பிரச்சனைகளையும் குணமாக்கும்.

பூசணி விதையில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும்.

பூசணி விதையில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து ஒரு தம்ளர் பாலில் கலந்து பருகி வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் புத்துணர்ச்சியோடும் இருக்கும்,

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com