அச்சுறுத்தும் ஆரோக்கிய கேடுகள்!

புகை மற்றும் மது, போதை வஸ்துகளால் இறப்பதை விட உலகில் இனிப்பு கலந்த உணவுகளால் அதிகம் பேர் இறந்து போகிறார்கள் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அன்றாட வாழ்வில் காலையில் குடிக்கும் காபி, டீ முதல் பல தரப்பட்ட உணவுகள் வரை பலவும் வெள்ளை சர்க்கரை கொண்டுதான் தயாரிக்கப்படுகின்றன. அந்த சர்க்கரை விரைவாக இரத்தத்தில் கலந்து உடலில் பலவித எதிர்வினை ஆற்றும் இதனால கணையம் அதிக அளவில் இன்சுலினை சுரக்கும், தோலுக்கு அடியில் கொழுப்புகள் குவியும் இதனால் குடல், கல்லீரல், கணையம் ஆபத்தை சந்திக்கும்.
அதிகப்படியான சர்க்கரை சிறுநீரில் அதிகப்படியான யூரிக் அமிலத்தை உருவாக்கி சிறுநீரகத்திற்கு அதிக பிரச்சனை கொடுக்கும். அதோடு உடலின் வளர்சிதை மாற்றத்தில் சுனக்கம் ஏற்படுத்தி உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கிறது என்கிறார்கள் லண்டன் எம்.ஆர்.சி மெடிக்கல் இன்ஸ்டியூட் ஆராய்ச்சியாளர்கள்.
வெள்ளை சர்க்கரையிலுள்ள அமிலங்கள் உடலுள்ள கால்சியத்தை உறிஞ்சிக்கொண்டு எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலவீனத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் ஆஸ்டிரோபொராசிஸ் மற்றும் பற்சிதைவு நோய்கள் உருவாகுகின்றன என்கிறார்கள்.
உங்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சின்னச்சின்ன மாற்றங்கள் உதவும். அதில் ஒன்று நாம் உபயோகிக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது.
சிகரெட் பிடித்து இறப்பவர்களை விட இரவி்ல் சரியாக தூங்காமல் இறப்பவர்கள் அதிகமாம். தூக்கமின்மை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடல் பருமன், இதயம் தொடர்பான பிரச்சினை, சர்க்கரை நோய், வாழ்நாள் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம் என்று இங்கிலாந்தின் தேசிய சுகாதார அமைப்பு எச்சரிக்கிறது.
நீங்கள் கம்பியூட்டர் திரை முன் வேலை செய்யும் போதோ அல்லது காரை ஓட்டும் போதோ ஒரு நிமிடம் கண்ணை மூடி அசருகிறோமே அதை மைக்ரோசிலிப் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். அந்த கண் அசரும் ஒரு நிமிடம் நம் மூளை எந்த வேலையையும் செய்வதில்லையாம். உலகில் நடக்கும் 16 சதவீத விபத்துகளுக்கு இந்த மைக்ரோ சிலிப்தான் காரணம் என்கிறார்கள். இதற்கு காரணம் இரவில் சரிவர தூங்காததே என்கிறார்கள். ஒரு நாள் இரவில் நீங்கள் 16 நிமிடங்கள் தூக்கத்தை இழந்தாலே அது மறுநாள் உங்கள் பணியின் வேகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள். அதே போல சராசரி இரவு தூக்கத்தில் தினமும் ஒரு மணி நேரம் குறைகிறவர்களுக்கு வரும் நாட்களில் 24 சதவீதம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதோடு உங்களின் தூக்கம் குறைய குறைய உங்களின் ஆயுளும் குறைகிறது என்கிறார்கள்.
அதிகளவு உண்பது, புகைப்பிடிப்பது, மதுபானம் அருந்துவது மற்றும் செல், டி வி களில் அதிக நேரம் செலவழிப்பது போன்றவைகள் தூக்கத்திற்கு தடை. இரவு உறக்கத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன் அளவாக உண்பது, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒவ்வொரு நாளும் படுக்கச்செல்வது போன்றவை தூக்கம் வரும் வாய்ப்பை அதிகரிக்கும். உடல் நலனைக் காப்போம்.