தண்ணீர் (பாட்டில்) போராட்டம்.

தண்ணீர் (பாட்டில்) போராட்டம்.

கோடைக் காலமானாலும் சரி, மழைக்காலம் ஆனாலும் சரி, தண்ணீர் எப்போதும் தண்ணி பட்ட பாடுதான்.

பணம் கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலமை தான் அனைவருக்கும்.  மளிகைக் கடைகளில் பொருட்கள் விற்பனையை விட தண்ணீர் விற்பனைதான் லாபகரமாக உள்ளது. அப்படி விற்கப்படும் கேன் வாட்டர் எந்த அளவுக்கு சுகாதாரமாக கிடைக்கிறது என்பது கேள்விக்குரியதே. 

மக்களைப் பொருத்தவரை தட்டுப்பாடில்லாமல் தண்ணீர் கிடைப்பதே பெறும் பேறு என்று நினைக்கின்றனர். இந்நிலையில் நாம் தினந்தோறும் அருந்தும் தண்ணீரைப் பற்றி அடிப்படை விஷயங்களைக் கூட பலர் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை. கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீரை எப்படி, எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம். 

* கடைகளில் மினரல் வாட்டர் என்று விற்கப்படும்  தண்ணீரின் தூய்மையைத் கண்டறிவது கஷ்டம். பல பாட்டில்களில் தயாரித்த தேதி, எக்ஸ்பயரி தேதி போன்ற விவரங்கள் எதுவுமே குறிப்பிடப்பட்டு இருக்காது. இத்தகைய‌ விவரங்கள் உள்ள பாட்டில் தண்ணீரை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

* பாட்டிலின் லேபிளில், ஐ.எஸ்.ஐ முத்திரைக்குக் கீழ் ஏழு இலக்க எண்கள்,  ஐ.எஸ்.ஓ தரச் சான்றிதழ் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், அவை உண்மையா எனக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.  கூடுமானவரையில் வெளியிடங்களுக்குச் செல்லும்போது ஒரு வாட்டர் பாட்டிலை கைவசம் எடுத்துச் செல்வது நல்லது. அல்லது நல்ல தரமான கம்பெனி எது வென்று தெரிந்து, அதையே தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தலாம்.

* பாட்டிலில் விற்கப்படும் குடிநீரை அதன் மூடியைத் திறந்த 24 மணி நேரத்திற்குள் பயன்படுத்தி விடவேண்டும். ஏனெனில்,  பாட்டிலில் தண்ணீர் அடைக்கப்பட்ட பிறகு, ஏற்படும் கிருமித் தொற்றை அழிக்கவல்ல கிருமி நாசினி (குளோரின் போன்றவை) இல்லாததால் பாட்டிலில் ஏற்படும் சிறு நுண்துளைகள்கூடக் கிருமித்தொற்றுக்கு வழிவகை செய்துவிடும்.

* பாட்டிலில் கிடைக்கும் நீரைவிட குளோரினால் சுத்தம் செய்யப்பட்டு வரும் குழாய் நீர் பல மடங்கு சுத்தமானது.  இரண்டு நாள் வரை கிருமிகள் வளராது. 3 நாட்களுக்கு மேல் மிக மெதுவாக 7 நாட்கள் வரை கிருமிகள் வளர ஆரம்பிக்கும். 7 நாட்களுக்கு மேல் வேகமாக வளர வாய்ப்புண்டு. எனவே, குழாயில் பிடித்ததும், வடிகட்டி, 20 நிமிடம் தளதளவெனக் கொதிக்க வைத்து நன்றாக ஆறியப் பிறகு பருகுவது நல்லது. 

* கொதிக்க வைத்த நீருடன் குளிர்ந்த நீரை கலப்பதும், நீரைக் கொதிக்க வைக்காமல் வெது வெதுப்பாக சூடுபடுத்திக் குடிப்பதும் நீரில் உள்ள கிருமிகளை மிக வேகமாக வளர வைக்கும். அப்படிச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

* தண்ணீரை வடிக்கட்டிக் கொதிக்க வைத்து அதே பாத்திரத்தில் வைத்திருந்தால்  24 மணி நேரம் வரை குடிக்க மிகப் பாதுகாப்பாக இருக்கும். ஆனால், வேறு பாத்திரத்துக்கு மாற்றும்போது கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு.

* வீடுகளில் சாதாரண ஃபில்டரின் மூலம் நீரை வடிகட்டினாலும், பாக்டீரியாவையும், அதன் ஸ்போர்களையும் வடிகட்டுமே தவிர வைரஸ் கிருமிகளை வடிகட்டாது. வைரஸ் கிருமிகளைக் கொல்ல, குடிநீரை 20 நிமிடம் நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.

* கேன்களை வாரம் ஒருமுறை, கடினமான பிரஷ் கொண்டு சுத்தம் செய்து, வெயிலில் காயவைத்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

* கொதிக்க வைத்து ஆறிய பிறகு, ப்ரிட்ஜில் வைத்திருந்தாலும் 48 மணி நேரத்துக்கு மேல் அதைப் பயன்படுத்தக்கூடாது. 

-லதா, கோவை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com