முட்டை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

முட்டை அதிகம் சாப்பிட்டால் என்ன ஆகும்?

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்யத்துக்கு நல்லது தான். ஆனால், முட்டை என்று இல்லை எந்த ஒரு உணவுமே அதை அளவுக்கு மீறி உட்கொள்ளும் போது நஞ்சாகத்தானே மாறக்கூடும்.

கெட்ட கொலஸ்டிராலை அதிகரிக்கச் செய்யும்.

ஒரு பெரிய முட்டையில் 186 மிகி கொலஸ்ட்ரால் இருக்கிறது. இது நமது உடலுக்கு வழக்கமாகத் தேவைப்படக் கூடிய அளவைக் காட்டிலும் அதிகம். எனவே ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகளை நாம் தினமும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் உடலில் கொலஸ்டிரால் அளவு கன்னா பின்னாவென எகிறி விடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதயத்திற்கு நல்லதில்லை...

அதிகமாக முட்டை சாப்பிட்டால் கொலஸ்டிரால் லெவல் எகிறும் என்றால் அது நம் உடல் உள்ளுறுப்புகளில் அதிகப்படியான கொழுப்புகளைப் படியச் செய்யும் என்று அர்த்தம். அதிலிருந்தே நாம் புரிந்து கொண்டிருக்க வேண்டும் அது அடுத்தபடியாக எதில் கொண்டு விடும் என்பதை. ஆம், எப்போதெல்லாம் கொலஸ்டிரால் அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் அடுத்தபடியாக அது இதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்க வைக்கிறது என்பதையும் நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.

வயிற்று உபாதைகள்...

ஒரு நாளில் ஒன்றிரண்டு முட்டைகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால் வயிற்று வலி வரவும் வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் அஜீரணக் கோளாறு வந்தால் கூடவே வரக்கூடிய மற்றொன்று வயிறு உப்பிசம். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை நரகம் தான் போங்கள். எந்நேரமும் எதை வயிற்றுக்குள் போட்டாலும் உடனே வயிறு உப்பிக் கொண்டு பசி மந்தித்தது போல உணரத் தொடங்கி விடுவோம். அப்புறம் வேளா வேளைக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆர்வமே கூட மந்தமாகி விடும்.

சருமப் பிரச்சனைகளைத் தூண்டி விடும்...

அதிகமாக முட்டை சாப்பிட்டால் அது நம் உடலில் புரோஜெஸ்டிரோன் எனும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து முகத்தில் பருக்களும், கொப்புளங்களும் தோன்ற வழிவகுக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

சரி அப்போ ஒரு நாளைக்கு எத்தனை முட்டை தான் சாப்பிடுவது? முட்டையே சாப்பிடக் கூடாதா? என்கிறீர்களா?

முட்டை நல்லது தான். சிறுவர், சிறுமிகள் என்றால் இரண்டு முட்டைகள் சாப்பிடலாம், பெரியவர்கள் என்றால் நாளொன்றுக்கு ஒரு முட்டை மட்டுமே சாப்பிடும் பழக்கம் உத்தமம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com