மழைக்கால சிரமங்களைத் தவிர்க்க சுலபமான 10 வழிகள்!

Monsoon difficulty protection
Monsoon difficulty protection
Published on

ழைக்காலம் தொடங்கி விட்டது. எங்கும் மழை பெய்யத் துவங்கி விட்டது. அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் கடும் மழை கொட்டித் தீர்க்கும். பெருநகர சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். வாகனங்களை நீரில் மூழ்காமல் பாதுகாப்பது சற்று சிரமமான காரியமாகும். தற்காலத்தில் மழை, புயல் முதலானவை வருவதை முன்கூட்டியே அறிவித்து நம்மை எச்சரிக்கை செய்து விடுகிறார்கள். இந்த சூழலில் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். இனி, மழைக்காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

மழைக்காலத்தில் தேவையின்றி வெளியில் செல்லுவதை கூடுமானவரை தவிர்க்க வேண்டும். நடைபாதைகளில் பாதாள சாக்கடை மூடிகள் திறந்திருக்கலாம். அல்லது பள்ளங்கள் இருக்கலாம். மின்சார ஒயர்கள் அறுந்து கீழே விழுந்திருக்கலாம். நடக்கும்போது கீழே பார்த்து மிக கவனமாக நடக்க வேண்டும்.

மழைக்காலங்களில் மாலை ஆறு மணிக்கு மேல் வெளியே செல்லுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்து விடுங்கள். அப்படியே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் கையில் குடையோடும் ஒரு டார்ச் லைட்டோடும் செல்லுங்கள். சிறுவர்களும் வயதானவர்களும் கட்டாயம் வெளியே செல்லவே கூடாது.

தினமும் சாப்பிட வேண்டிய மருந்து மாத்திரைகளை முன்கூட்டியே வாங்கி வைத்து விடுங்கள். மழைக்காலங்களில் இத்தகைய அவசியமான மருந்துகளை வாங்க வெளியே செல்லுவதைத் தவிர்க்க இது உதவும்.

வீட்டில் உள்ள கல்விச் சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்களை ஸ்கேன் செய்து உங்கள் கணினியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரிஜினல் சான்றிதழ்களை ஒரு பெரிய பாலீதீன் கவரில் போட்டு நீர் புகாதவாறு நன்றாக செல்லோ டேப் கொண்டு ஒட்டி வையுங்கள். ஒருவேளை மழைநீர் வீட்டினுள் புகுந்தால் பீரோவின் கீழ்ப்புறத்தில் மட்டுமே தண்ணீர் புக வாய்ப்பு உள்ளது. சான்றிதழ்களை உங்கள் பீரோவின் மேற்புற அடுக்கில் வைத்துவிடுங்கள்.

போதிய அளவு குடிநீரை பாத்திரங்களில், குடிநீர் பாட்டில்களில் பிடித்து சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். முடிந்தால் குடிநீரை நன்றாகக் காய்ச்சி பின்னர் அதை சேமித்து வைத்துப் பயன்படுத்துங்கள். காய்ச்சாத குடிநீர் மூலமாகவே பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன.

மொபைல் போன்களை மின்சாரம் உள்ளபோது முழுவதுமாக சார்ஜ் செய்து வைத்து விடுங்கள். பவர் பேங்க்குகளையும் போதிய மட்டும் சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மின்சாரம் தடைபட்டால் இதன் மூலம் எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம்.

மின்சாரம் எந்நேரத்திலும் தடைபடலாம். எனவே டார்ச் லைட் மற்றும் மெழுகுவர்த்திகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் ஸ்ட்ரோக் வரும் அபாயத்தைக் குறைக்கும் வழிகள்!
Monsoon difficulty protection

ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் கெடாத, பிரிட்ஜ்ஜில் வைக்கத் தேவையில்லாத காய்கறிகளான கருணைக்கிழங்கு, உருளைக்கிழங்கு, வாழைக்காய், சேப்பங்கிழங்கு முதலான காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். மின்சாரம் தடைபட்டாலும் கவலையில்லை.

மழைக்காலங்களில் சிறிய அளவிலான பால் பவுடர் பாக்கெட்டுகளை வாங்கி வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் பால் வாங்க வெளியே செல்வதைத் தவிர்க்கலாம்.

இடி, மின்னல் போன்றவை ஏற்படும்போது தொலைக்காட்சி பார்ப்பதைத் தவிர்த்து விடுங்கள். தொலைக்காட்சியின் டிடிஎச் மற்றும் கேபிள் இணைப்புகளை தற்காலிகமாக தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து அகற்றி வையுங்கள். இடி மின்னல் போன்றவற்றினால் எலெக்ட்ரானிக் சாதனங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

மழைக்காலங்களில் இதுபோன்ற விஷயங்களை முன்கூட்டியே கவனமாகச் செய்து பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் முக்கியம். இந்த சமயங்களில் அலட்சியம் கூடாது. மேலும், மழை பெய்யும் சமயங்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சூடான உணவுகளை சாப்பிட்டு மனம்விட்டுப் பேசி மகிழுங்கள். இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் நமக்கு பேசி மகிழ நேரம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com