ஆண்கள் ஏன் வாட்ச் அணிய வேண்டும் என்பதற்கான சுவாரஸ்யமான 10 காரணங்கள்!

Men who wear watches
Men who wear watcheshttps://ta.quora.com
Published on

முதலாம் உலகப் போர் நடக்கும் வரை கைக்கடிகாரம் என்பது பெண்களுக்கான அணிகலனாக மட்டுமே இருந்தது. முதலாம் உலகப் போரில் பணியாற்றிய சிப்பாய்கள், சரியான நேரத்திற்கு போர்முனையை சென்றடைவதற்காக தங்கள் பாக்கெட்டுகளில் சிறிய கடிகாரங்களை வைத்துக் கொண்டார்கள். பின்னர் ஆண்களுக்கான வாட்சுகள் தயாரிக்கப்பட்டு, அதை மணிக்கட்டுகளில் அணிய ஆரம்பித்தார்கள். ஆண்கள் ஏன் வாட்ச் கட்ட வேண்டும் என்பதற்கான பத்து சுவாரஸ்யமான காரணங்களை குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. அலங்கார அணிகலன்: விசேஷங்களின்போது பெண்கள் கை நிறைய வளையல்கள் அடுக்கிக்கொண்டு அலங்காரமாக காட்சியளிப்பார்கள். ஆனால், ஆண்களுக்கு அதுபோல சாய்ஸ் இல்லை. பிரேஸ்லெட் அல்லது வாட்ச் மட்டுமே அணிய முடியும். ஆண்கள் அழகான வார் அல்லது பட்டையுடன் கூடிய கைக்கடிகாரங்கள் அணியும்போது பார்ப்பதற்கு அழகான அணிகலனாக தோற்றமளிக்கும்.

2. ஸ்டைலிஷ் லுக்: ஆண்களுக்கு வாட்ச் என்பது ஒரு முக்கியமான அணிகலன் மட்டுமல்ல, அது ஸ்டைலிஷ் லுக் தரும். நீட்டாக பேண்ட் சர்ட் அணிந்து கையில் வாட்சும் கட்டியிருந்தால் பார்க்க அழகாக இருப்பதுடன் மட்டுமல்லாமல், ஒரு நாகரிகத் தோற்றத்தையும் தருகிறது.

3. வசதி: செல்போன்களில் நேரம் பார்க்கும் வசதி இருந்தாலும் ஒவ்வொரு முறையும் பாக்கெட்டில் இருக்கும் செல்போனை எடுத்து நேரம் பார்ப்பதை விட, மணிக்கட்டில் இருக்கும் வாட்சில் பார்ப்பது வசதியாகவும் சுலபமாகவும் இருக்கும். மீட்டிங்கில் இருக்கும்போது செல்போனை வெளிப்படையாக எடுத்து நேரம் பார்த்தால் அது பிறருக்கு முகச்சுழிப்பை ஏற்படுத்தும். ஆனால், கைக்கடிகாரத்தில் நேரம் பார்க்கும்போது அது பிறருக்குத் தெரியாது.

4. நினைவூட்டல்: வாட்ச் கட்டியிருக்கும்போது ஒரு இடத்திற்கு நேரத்திற்குச் செல்ல வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது. அலுவலக சம்பந்தமான வேலையாக இருந்தாலும் சரி அல்லது பிரத்யேகமான மீட்டிங்காக இருந்தாலும் வாட்ச் அவருக்கு அந்த சந்திப்பை பற்றி நினைவூட்டுகிறது.

5. ப்ரொஃபஷனல் டச்: தான் சார்ந்து இருக்கும் தொழிலுக்கு ஏற்ற வாட்ச் அணிந்திருப்பது மிகவும் சரியாக இருக்கும். ஒரு மீட்டிங் அட்டென்ட் செய்யும்போது, மீட்டிங் நடத்தும்போது, இன்டர்வியூ அட்டென்ட் செய்யும்போது அது ஒருவிதமான நேர்மறை அபிப்பிராயத்தை உருவாக்குகிறது ஒரு ப்ரொஃபஷனல் டச் தருகிறது.

6. சென்டிமென்டல் வேல்யூ: சிலர் தன் தந்தையின் வாட்சை கட்டியிருப்பார்கள். மனதுக்குப் பிடித்தவர்கள் பரிசளித்ததாக இருக்கும். அதை கட்டியிருக்கும்போது பழைய இனிய நினைவுகள் மனதை வருடலாம்.

7. செயல்பாடு: தற்போது கடிகாரங்கள் வெறும் மணி பார்ப்பதற்கு மட்டும் அல்லாமல் வேறு சில சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. அதில் தேதி பார்க்கலாம். அலாரம் வைக்கலாம். ஏவியேட்டர் கடிகாரங்கள் அணிந்திருந்தால் அதில் பலவிதமான வசதிகள் இருக்கும்.

இதையும் படியுங்கள்:
அதிகமாக வறுக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்கள் ஜாக்கிரதை!
Men who wear watches

8. அலைபேசியில் இருந்து சிறு விடுதலை: பொதுவாக அலைபேசியை கையில் எடுக்கும் யாரும் அவ்வளவு சீக்கிரம் கீழே வைக்க மாட்டார்கள். மணி பார்க்க எடுத்தால் கைகள் தன்னால் வாட்ஸ் அப், பேஸ்புக், ஈமெயில் என்று நேரத்தை வீணடிக்கும். வாட்சில் மணி பார்த்தால் அலைபேசியின் பயன்பாடு குறைக்கப்படுகிறது.

9. தனிப்பட்ட அடையாளம்: கைக்கடிகாரங்கள் பலவித டிசைன்களில் வருகின்றன. அவை அணிந்திருக்கும் மனிதனின் ஆளுமைத்தன்மை மற்றும் ரசனையை பிரதிபலிக்கும். அவை கிளாசிக் டிசைன், பாரம்பரிய ஸ்டைல் என அவரது ரசனையின் வெளிப்பாடாக அமைந்திருக்கும்.

10. ஆடம்பர சின்னம்: சிலர் மிக அதிக விலையில் ஆடம்பரமான வாட்ச் வாங்கி அணிந்திருப்பார்கள். அவை அந்த குறிப்பிட்ட பிராண்ட்களின் அந்தஸ்து மற்றும் ஆடம்பரத்தை பறைசாற்றும். செல்வத்தின் அடையாளமாக விளங்குகின்றன. மேலும் சிலர் சென்டிமென்டலாக அவற்றை அணிந்தால் வெற்றி என்று கருதுவார்கள்.

மொத்தத்தில் வாட்ச் அணிவது ஆண்களுக்கு அழகு மட்டுமல்ல, அத்தியாவசியமாகவும் ஆகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com