குழந்தைகள் சிறந்த மனிதர் என்று பெயரெடுக்க 10 வாழ்க்கைப் பாடங்கள்!

10 Life Lessons for Children
10 Life Lessons for Children
Published on

‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே; அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே’ இவை சத்தியமான வார்த்தைகள். ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோரை கவனித்தே வளர்கின்றன. நாம் அவர்களுக்கு சிறு வயதில் கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடங்கள் அவர்கள் பெரியவர்களானதும் தங்கள் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ள உதவும் என்பது நிச்சயம்.

தாய்மொழிப் பற்று: ஒவ்வொரு மனிதனுக்கும் தாய்மொழியின் மீது அன்பும் பற்றும் அவசியம் இருக்க வேண்டும். தற்காலத்தில் பல பெற்றோர்கள், ‘எங்க பையனுக்கு தமிழே தெரியாது’ என்பதை பிறரிடம் பெருமையாகச் சொல்வதை நாம் காண நேரிடுகிறது. இப்படிச் சொல்வது பெருமை அல்ல. அவமானம் என்பதை நாம் உணர வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பிறரிடம் உரையாடப் பயன்படுவது தாய்மொழியே. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குத் தாய்மொழியின் அருமை பெருமைகளைச் சொல்லி வளர்க்க வேண்டும்.

மரியாதையாக நடத்தல்: வீட்டிற்கு நம்மைத் தேடி யாராவது வந்தால் வந்தவர்களிடம் சிரித்த முகத்தோடு, ‘வாங்க வாங்க’ என்று சொல்லி வரவேற்க கற்றுத் தர வேண்டும். பிறருக்கு மரியாதை கொடுத்தால்தான் நமக்கு மரியாதை கிடைக்கும் என்பதை குழந்தைகள் உணர வாய்ப்பாக அமையும். இந்த செயல் நம்மை பிறருக்குப் பிடிக்கவும் வழிவகுக்கும்.

மூத்தவர்களை மதித்தல்: தற்காலத்தில் தாத்தா, பாட்டிகளை பெரும்பாலான சிறுவர், சிறுமியர் மதிப்பதே இல்லை. பெற்றோர், தாத்தா, பாட்டிகளின் அருமை பெருமைகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களை மதித்து நடக்கக் கற்றுத் தர வேண்டும். தாத்தா, பாட்டிகளை மதிக்கும் குழந்தைகளே பெற்றோர்களிடம் பாசமாக நடந்து கொள்ளுவார்கள்.

சேமிப்பு: ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் சேமிப்பு என்பது மிக அவசியமான ஒன்று. சிறு வயதிலிருந்தே உண்டியலை வாங்கித் தந்து அவர்களுக்கு பாக்கெட் மணியைக் கொடுத்து அதில் ஒருபகுதியை சேமிக்கப் பழக்க வேண்டும். இது பிற்காலத்தில் அவர்களின் வாழ்க்கை செம்மையாக அமைத்துக்கொள்ள பெரிதும் பயன்படும்.

நேர்மை: எந்தசூழ்நிலையிலும் நேர்மையாக நடக்க வேண்டும் என்பதை அவ்வப்போது எடுத்துக் கூற வேண்டும். நேர்மையாக நடந்து மிகப்பெரிய தலைவரானவர்களின் கதைகளை குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். நேர்மையின் வலிமையை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

நேரம் தவறாமை: எந்த ஒரு விஷயத்தையும் நேரம் தவறாமல் செய்யப் பழக்க வேண்டும். நேரம் தவறினால் அதனால் நமக்கு ஏற்படும் இழப்புகளை குழந்தைகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். பள்ளிக்கு காலையில் சரியான நேரத்திற்குள் அவர்களாகவே புறப்பட பழக்க வேண்டும்.

பிற உயிர்களை நேசித்தல்: நாய், பூனை, அணில், கோழி மற்றும் பறவைகள் முதலான உயிர்களை நேசிக்கக் கற்றுத் தர வேண்டும். பல சிறுவர்கள் நாய்களையும் பிற உயிர்களையும் கல்லால் அடிக்கும் வழக்கத்தை வைத்திருகிறார்கள். அத்தகைய சிறுவர்களிடம் இதுபோலச் செய்வது தவறு என்று அன்பாக எடுத்துக் கூறி அவர்களைத் திருத்த வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மரத்தை பாமாவுக்கும் மலரை ருக்மிணிக்கும் அருளிய பரந்தாமன்!
10 Life Lessons for Children

எளிமை: எளிமை என்பது சிறுமை அல்ல, அது வலிமை. எப்போதும் எளிமையாக இருப்பது நமக்கும் நல்லது நமது குடும்பத்திற்கும் நல்லது. நம் நாட்டில் வாழ்ந்த எளிமையான வலிமைமிக்க தலைவர்களைப் பற்றிய வரலாறுகளை குழந்தைகளுக்குக் கூற வேண்டும்.

நல்ல நட்பு: ஒருவர் வாழ்நாள் முழுக்க வெற்றிகரமான மனிதராகத் திகழ அவருக்கு நல்ல நட்பு மிகவும் அவசியம். ஒரு நல்ல நண்பன் நமக்கு அமைந்து விட்டால் அதனால் நமக்கு பல நன்மைகள் கிடைக்கும். நண்பன் தவறானவனாக இருந்தால் அதனால் பல சிக்கல்கள் உருவாகும். நல்ல நட்பின் அவசியத்தை உங்கள் குழந்தைகளிடம் எடுத்துக் கூறுங்கள். நமது நண்பரை வைத்துத்தான் இந்த சமுதாயம் நம்மை எடைபோடும் என்பதை அவர்களுக்குப் புரியும்படி கூறுங்கள்.

சிக்கனம்: சிக்கனத்தைக் கடைப்பிடிக்காததால் பல பெரிய பணக்காரர்கள் அனைத்தையும் இழந்து பெரும் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். சிக்கனத்தைக் கடைபிடித்து வாழும் எளிய மனிதர்கள் கடைசி வரை நிம்மதியாக வாழ்ந்திருக்கிறார்கள். தேவையின்றி பணத்தை செலவழிப்பது தவறு என்பதை உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துக் கூறுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com