திருமணமாகி ஒரு வருடத்திற்குள்ளேயே இப்பொழுதெல்லாம் கணவன் மனைவிக்கு இடையே ஒரு வெறுமையும், சலிப்பும் வந்துவிடுகிறது. நின்று நிதானமாக ஒரு வார்த்தை பேசுவதற்குக் கூட சிலருக்கு நேரமும் இல்லை, மனமும் இல்லை. திருமண உறவு நீடித்திருக்க சில முக்கியமான விஷயங்களை கடைப்பிடிப்பது அந்த உறவை வலுப்படுத்தும். சில உறவுகள் ஏன் தோல்வியில் முடிகின்றன? சில உறவுகள் மட்டும் ஏன் காலம் கடந்தும் வலுவாக நிற்கின்றன என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
1. வெளிப்படையாக இருப்பது: மகிழ்ச்சியான உறவுக்கு தாம்பத்தியம் தவிர பிற விஷயங்களும் முக்கியமானவையாக உள்ளன. துணையுடன் வெளிப்படையாக இருப்பது அவசியம். இருவருமே முடிந்தவரை தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது முக்கியம். தினமும் சிறிது நேரமாவது ஒன்றாக அமர்ந்து மனம் விட்டுப் பேச வேண்டும்.
2. அன்பை வெளிப்படுத்துதல்: சிலர் தங்கள் அன்பை வெளிப்படுத்தத் தவறி விடுகிறார்கள். பரஸ்பரம் இருவரும் அன்பை பரிமாறிக்கொள்ள வேண்டும். நாம் நம் துணையை எப்படி உணர்கிறோம் என்பதை அன்பான வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்த உறவு வலுப்பெறும். அன்பை வெளிப்படுத்துவது ஒருதலைபட்சமாக இருக்கக் கூடாது. இருவருமே சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் காதல் வார்த்தைகளால், கனிவான பார்வையால் அன்பை வெளிப்படுத்திக்கொள்ளுதல் வேண்டும்.
3. பரஸ்பர ஆதரவு உணர்வு: நம் துணைக்கு சில விஷயங்கள் மீது ஆர்வங்கள் இருக்கும். உதாரணமாக, கணவருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தால் நமக்கு அதில் ஆர்வம் இல்லாவிட்டாலும் அவர்களுக்காக ஆர்வமுடன் அவருடன் அமர்ந்து மேட்ச் பார்க்கலாம். இல்லையென்றால் அவர்களுடைய விருப்பத்தை ஆதரிக்கலாம். ஒருவருக்கொருவர் மற்றவருடைய ஆர்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது பரஸ்பரம் சுவாரஸ்யமானவர்களாகக் காட்டும். இந்தப் போக்கு உறவை நன்கு வலுப்படுத்த உதவும்.
4. பாராட்டுதல்: கணவன், மனைவிக்கிடையே பாராட்டுதல், தட்டிக் கொடுத்தல் என்பது மிகவும் அவசியம். இதுதான் கணவன், மனைவி உறவை உயிர்ப்போடு வைத்துக்கொள்ள உதவும். வெறும் பேச்சுக்காக உதட்டசைவில் பாராட்டாமல் உண்மையான அக்கறையுடன் ஆழ்மனதிலிருந்து பாராட்ட வேண்டும். தன் துணை தன் மீது காட்டும் அக்கறையை பாராட்டுவதில் கஞ்சத்தனம் கூடாது.
5. நட்பு கொள்ளுதல்: கணவன், மனைவி உறவு எலியும் பூனையும் போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு நண்பரைப் போல் பழகலாம். துணையுடன் நட்புக் கொள்வது என்பது நீண்ட காலத்திற்கு உறவு வலுப்பெற்று இருக்க உதவும். நண்பர்களைப் போல் இருந்து புரிந்துகொள்வதும், எல்லா விஷயங்களிலும் ஒத்துழைப்பதும் உங்களை சிறந்த ஜோடியாகக் காட்டும்.
6. நம்பிக்கை: கணவன், மனைவிக்கிடையே நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். ஒருவரையொருவர் நம்புவதும், ஏமாற்றாமல் இருப்பதும், சந்தேகம் கொள்ளாமல் உண்மையாக இருப்பதும் உறவு வலுப்பெற உதவும்.
7. மதிப்பும் மரியாதையும்: ஒருவருக்கொருவர் மதிப்பும் மரியாதையும் கொடுப்பது, இருவருமே சொல்லிலும் செயலிலும் கண்ணியம் காப்பது அவசியம். ஒருவருடைய உணர்வை மற்றவர் மதிக்கக் கற்றுக்கொள்வது என்ற மனநிலை இருவருக்கிடையே மிகுந்த நெருக்கத்தை கொடுக்கும்.
8. பாதுகாப்பான உணர்வு: நம்முடைய துணை பதற்றப்படும் சின்ன விஷயங்கள் பற்றி தெரிந்து கொண்டு அதை செய்யாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே அச்சுறுத்தலோ, வேறு பாதுகாப்பற்ற நிலையோ இருத்தல் கூடாது. இருவரும் ஒன்று சேர்ந்து வாழும்பொழுது பாதுகாப்பான உணர்வு இருவருக்கும் மேலோங்கி இருக்க வேண்டும்.
9. ஈகோ இன்றி விட்டுக் கொடுத்தல்: கருத்து வேறுபாடு ஏற்படும்போதும், வாக்குவாதம் ஏற்படும் பொழுதும் யாரேனும் ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது உறவை செழிக்க வைக்கும். எந்த பிரச்னையையும் துணையின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கவும், சிந்திக்கவும் பழக வேண்டும். ஈகோ பிரச்னையால் தம்பதிகளுக்கு இடையே சண்டை வருவது சகஜம். ஒருவர் தரப்பில் தவறு இருக்கிறது என்று தெரிந்தால் உடனே அவர்கள் ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு என்பது வாய் வார்த்தையாக இல்லாமல் மனதாரக் கேட்க பிரச்னைகள் எழாது.
10. மகிழ்ச்சியான தருணங்களை உண்டாக்குவது: துணையின் எண்ணங்களுக்கும், ஆர்வங்களுக்கும், உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து பழகுவது, அக்கறை கொள்வது நல்லது. இருவருமே மகிழ்ச்சியான தருணங்களை அவ்வப்பொழுது ஏற்படுத்திக் கொள்வதும், பகிர்ந்து கொள்வதும், ஒருவரை ஒருவர் கொண்டாடுவதும், தன் துணையிடம் தனக்கு எது அதிகம் பிடித்தது என்பதை மனம் விட்டு ஒருவருக்கொருவர் கூறுவதும் உறவை ஆழமாக வலுப்படுத்தும்.
மனம் விட்டு சிரிப்பதும், ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக இருப்பதும் தம்பதியினரிடையே அன்பைப் பெருக்கும்.