பணமா? நல்ல துணையா? எது முக்கியம்? உங்கள் துணை சரியாக அமைய இந்த 10 செயல்கள் அவசியம்..!

life partner
Husband and wife
Published on

உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் சரியான துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் அரசர் என்றாலும் சரியான அரசி கிடைக்காவிட்டால் உங்கள் வாழ்க்கையின் மதிப்பு குறைந்து விடும். பெண்களுக்கும் இது பொருந்தும். தன் வீடுகளில் ராணி போல இருந்து விட்டு, அதன் மதிப்பு, புகுந்த வீட்டில் இல்லாத போது அவள் வாழ்க்கை நரகமாகி விடும். 

வாழ்க்கையில் பணத்தின் மதிப்பை விட துணைக்கு அதிக மதிப்பு உள்ளது. "உனக்கென்னடா கவலை? உன் மனைவி நன்றாக பார்த்துக் கொள்கிறாள்" என்ற சொல் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

நான் "நல்லா சமைக்கிறேன், அழகாகவும் இருக்கிறேன், மாச மாசம் லட்சக்கணக்கில் சம்பாதிச்சு கொட்டியும், கணவர் என்னைக் கண்டுக் கொள்ளவே மாட்டேங்கிறார்" என்ற வார்த்தைகள் மிகவும் வலி மிகுந்தவை. அந்த பெண் அனைத்து விதத்திலும் தகுதி படைத்தவளாய் இருந்தும் தகுதியான துணையை தேர்ந்தெடுக்க தவறி விட்டாள்.

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான முடிவு. இது இருவரின் வாழ்நாள் முழுவதும் விளைவுகளை தரும் பெரிய முடிவு. அதில் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்றைய காலத்தில் பெண்களும் ஆண்களும் சிறிய மனஸ்தாபங்களுக்கு கூட பிரியும் முடிவை எடுக்கின்றனர்.

உங்கள் துணை சரியாக அமைய இந்த 10 செயல்களை செய்யுங்கள்:

1. முதலில் திருமணம் நிச்சயம் ஆகும் முன்பே, ஒரு நாள் முழுக்க எதிர்காலத் துணையிடம் பேசுங்கள். நேரிலோ அல்லது போனிலோ பேசுங்கள். அவருடைய குண நலன்களை பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

2. அவரது ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் ஆகியவற்றை கேளுங்கள். உங்களால் முடியும் என்றால் அதற்கு உதவ தீர்மானியுங்கள். 

3. அவருக்கு பிடித்த உணவுகள், உடைகள், உறவுகள், கலாச்சாரங்கள், பொழுது போக்குகள் ஆகியவற்றை தெரிந்து கொள்ளுங்கள். இதில் உங்களுக்கு சில விஷயங்கள் பிடிக்காவிட்டாலும் அதை உங்களால் சகித்துக் கொள்ள முடியுமா? என்று பாருங்கள். முடியாவிட்டால் அவரை விட்டு விடுங்கள். முடியும் என்றால் தொடருங்கள்.

4. அவருக்கு பிடிக்காத விஷயங்கள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அந்த விஷயத்தில் உங்களுக்கு ஈடுபாடு இருந்தால் தவிர்த்து விடுங்கள் அல்லது அவரிடம் சில விஷயங்களில் முரண்படுகிறேன் என்று சொல்லுங்கள். இந்த முரண்பாடுகளை ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லலாம். அனைவருக்கும் 100% சரியான பொருத்தமான மனிதர் கிடைக்க மாட்டார். ஆனால் , பொருத்தமான மனிதராக மாற்றிக் கொள்வது கடினமல்ல. 

5. வேலை, பணப்பகிர்வு, இருப்பிடம் ஆகியவற்றில் பொதுவாக முடிவை எடுங்கள். பரஸ்பரம் சமமாக பேசி இரு உடன்பாட்டுக்கு வாருங்கள். ஒரு வேளை, தீடிரென்று வேலை இழந்தால், புதிய வேலை கிடைக்கும் வரை உங்களது மதிப்பைக் குறைக்கக் கூடாது என்றும் அப்போது பணத்தேவை ஏற்பட்டால் முழு மனதோடு பகிர வேண்டும் என்ற உடன்பாட்டுக்கும் வாருங்கள். வேலை என்பது என்றும் நிரந்தரமல்ல. வேலை இழப்பாலும் புதிய வேலை கிடைக்க தாமதம் ஆவதாலும் தான் பெரும்பாலான விவாகரத்துகள் நடைபெறுகின்றன. 

6. பரஸ்பரம் குடும்ப உறுப்பினர்களை மதிப்போம் என்ற உறுதி கொள்ளுங்கள் .

7. தங்களுக்குள் ஈகோவை முற்றிலும் புறக்கணிப்போம் என்ற முடிவுக்கு வாருங்கள். 

8. ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்வோம் என்ற மன நிலைக்கு வாருங்கள். 

9. சண்டைகள் வந்தாலும் அதில் மூன்றாம் நபருக்கு இடமில்லை. அன்றே சமாதானம் செய்வோம் என்று பேசிக் கொள்ளுங்கள். 

10. எப்போதும் இன்பம் துன்பம் எதிலும் இணைபிரிய மாட்டோம் என்று இறுதியாக உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு சரியான வாழ்க்கை துணை அமைந்து, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com