மகிழ்ச்சியை பறிக்கும் தேவையில்லாத பத்து பழக்க வழக்கங்கள்!

10 Unnecessary Habits That Rob You of Happiness
10 Unnecessary Habits That Rob You of Happinesshttps://www.uyirpu.com

வ்வொரு நாளையும் அந்த நாள் நன்றாக அமைய வேண்டுமே என்கிற ஆசையோடும் நம்பிக்கையோடுதான் அந்த நாளை எதிர்கொள்ளத் தொடங்குகிறோம். ஆனால், இடையில் ஏதாவது நிகழ்ந்து நமது மனநிலையை மாற்றி நம் சந்தோஷத்தை பறித்து விடுகிறது. சில சமயங்களில் நம்மிடம் இருக்கும் சில பழக்க வழக்கங்கள் கூட அதற்கு காரணமாகி விடுகின்றன. வாழ்க்கையில் சந்தோஷமாகவும் திருப்தியடனும் வாழ விரும்பினால் இந்த பத்து பழக்க வழக்கங்களை கண்டறிந்து அவற்றைத் தவிர்த்து விடுங்கள்.

1. அதீத சிந்தனை: நம்மிடமிருந்து மகிழ்ச்சியை பறிக்கும் விஷயங்களில் முதலிடத்தைப் பிடிப்பது ஓவர் திங்கிங் எனப்படும் அதீத சிந்தனை. இப்படி ஆகிவிட்டால் என்ன செய்வது, அப்படி நடந்து விட்டால் என்ன செய்வது என்று தேவையில்லாமல் அதீதமாக யோசித்து மனதைக் குழப்பிக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

2. சிறிய விஷயங்களை பெரிதுபடுத்துவது: ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களை பெரிதுபடுத்தி பார்த்து மகிழ்ச்சியை தொலைப்பவர்கள் பலர். ‘இந்த உடை நல்லாவே இல்லை’ என்று யாராவது சொல்லிவிட்டால் அன்று முழுவதும் மூட் அவுட் ஆகி உட்கார்ந்து கொண்டு இருப்பதெல்லாம் தேவையில்லை. அந்த கமெண்ட்டை கண்டுகொள்ளாமல் போவதுதான் புத்திசாலித்தனம்.

3. வெறுப்பை சுமந்து கொண்டிருப்பது: கடந்த காலத்தில் நமக்கு தீங்கிழைத்தவர்களை நினைத்துக் கொண்டு அவர் மேல் வெறுப்பையும் உமிழ்ந்து கொண்டு நிகழ்காலத்தை பாழாக்குவார்கள் சிலர். நண்பரோ அல்லது உறவினரோ கடந்த காலத்தில் உங்களிடம் சண்டையிட்டு இருக்கலாம். அதையெல்லாம் பெரிதாக நினைத்துக்கொண்டு குழப்பி இருக்காமல் அவர்களை மன்னித்து மறந்து விடுவது நல்லது.

4. வேலையை தள்ளிப்போடுதல்: இந்த குணம் எப்போதுமே நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்காது. வேலைகளை தள்ளிப்போட்டுக்கொண்டே வந்து மொத்தமாக அவற்றை செய்யும்போது மன அழுத்தமும் மகிழ்ச்சியின்மையும் வந்து சேரும். அந்தந்த நேரத்தில் வேலைகளை சரியாக முடிப்பதே நன்று.

5. பிறருடன் ஒப்புமை: எப்போதும் தன்னை பிறருடன் கம்பேர் செய்துகொண்டே இருப்பது சுய வளர்ச்சியை தடுக்கும். நாம் என்ன செய்ய வேண்டுமோ நமக்கு என்ன வேண்டுமோ அதை மட்டும் நினைத்தால் மட்டுமே முன்னேற முடியும். நிம்மதியாகவும் இருக்க முடியும்.

6. நல்ல பழக்க வழக்கங்களை உடனே கைவிட்டு விடுதல்: முக்கியமான ஆரோக்கியமான நல்ல பழக்க வழக்கங்களை சிறிது சிரமம் எடுத்து செய்ய வேண்டும் என்பதற்காக அதை கைவிட்டு விடுதல் நல்லதல்ல. உடற்பயிற்சி செய்வது அல்லது பொழுதுபோக்குகளை குறைத்துக்கொள்ளுதல் என்று சில நாட்கள் மட்டும் முயன்று விட்டு பின்பு அவற்றை கைவிடுதல் நம்மை மகிழ்ச்சியிடமிருந்து விலக்கி வைத்து விடும்.

7. திருப்தியின்மை: நாம் செய்யும் வேலைகளில், லட்சியங்களில் உடனடி முன்னேற்றம் கிடைக்காவிட்டால் உடனே மனது தளர்ந்துபோவது. திருப்தி இல்லாமல் அந்த வேலையை சரிவர செய்யாமல் இருப்பது. இதுவும் நமது சந்தோஷத்தை தொலைத்து விடும்.

இதையும் படியுங்கள்:
சோர்வுற்ற மனம் புத்துணர்ச்சி பெற ஆலோசனைகள் ஐந்து!
10 Unnecessary Habits That Rob You of Happiness

8. நல்ல தூக்கம் இல்லாமல் இருப்பது: ஒருவர் தினமும் சரியான அளவு தூங்கி எழுந்தால் மட்டுமே அடுத்த நாளைக்கான ஆற்றலும் சக்தியும் கிடைத்து தனது வேலைகளை சரியாக செய்ய முடியும். மூளை நன்றாக ரிலாக்ஸ் ஆகி உடலையும் உள்ளதையும் உற்சாகமாக  வைத்திருக்கும்.

9. நன்றி உணர்வு இல்லாமல் இருப்பது: நமக்கு உதவி செய்தவர்கள், இயற்கை, எல்லாவற்றின் மேலும் நன்றியுடன் இருக்க வேண்டும். அந்த உணர்வு இல்லை என்றால் மனிதர்களால் எப்போதும் சந்தோஷமாக இருக்கவே முடியாது.

10. எதிர்மறை எண்ணங்களால் சூழப்பட்டிருப்பது: எப்போதும் இந்த உலகத்தைப் பற்றி எதிர்மறை கருத்துக்களை வைத்துக்கொண்டு இருந்தால் ஒருவரால், தானும் சந்தோஷமாக இருக்க முடியாது, சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷப்படுத்த முடியாது. எனவே, மற்றவர்கள் மேல் நேர்மறையான எண்ணத்துடன் இருப்பது அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com