ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க வேண்டும், அவர்கள் எதிர்காலத்தில் நன்றாக இருக்க வேண்டும் என்பதைத்தான் பெரிதும் விரும்புகிறார்கள். ஆனாலும், சில சமயங்களில் பெற்றோர்கள் செய்யும் தவறுகளால் குழந்தைகள் படிப்பில் பின்தங்கி விடுகிறார்கள். அத்தகைய தவறுகளை பெற்றோர்கள் திருத்தினாலே குழந்தைகள் படிப்பில் கெட்டியாக இருப்பார்கள். இது சம்பந்தமாக பெற்றோர்கள் செய்யும் 4 தவறுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
குழந்தைகள் படிப்பில் பின்தங்குவதற்கான காரணங்கள்:
1. ஊக்கமின்மை: குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க பெற்றோர்களின் ஊக்கம் மிகவும் முக்கியம். பெற்றோர்கள் குழந்தையை திட்டி, பயமுறுத்தாமல் படிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்த, குழந்தைகளின் சிறு சிறு செய்கைகளை கூட ரசித்து பாராட்டுவதோடு, ஊக்கப்படுத்தினாலே படிப்பில் குழந்தைகளுக்கு நாட்டம் ஏற்பட்டு, அவர்கள் விரும்பிப் படிக்க ஆரம்பிப்பார்கள்.
2. அதிக அழுத்தம்: குழந்தைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைத்து அவர்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வதால் குழந்தைகள் படிப்பை சுமையாக கருதுவதால் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என்பதால் குழந்தைகள் மீது அழுத்தம் கொடுக்கும் தவறை பெற்றோர்கள் ஒருபோதும் செய்யக்கூடாது.
3. முன்னுரிமைகளை புரிந்துகொள்: ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு வாய்ந்தவர்கள். பல பெற்றோர்கள் குழந்தைகள் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்று மட்டும்தான் நினைத்து படிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். ஆனால், அவரவர் குழந்தைகள் ஆர்வமான, பிடித்த செயல்களைச் செய்யும்போது அதனை பெற்றோர்கள் புரிந்து கொண்டு முன்னுரிமை கொடுத்து ஊக்கப்படுத்துவதால் குழந்தைகளின் தனித்திறமையோடு கல்வியும் முன்னேற்றம் அடையும்.
4. அதிகப்படியான கட்டுப்பாடு: குழந்தைகளை அதிகக் கட்டுப்பாடுடன் வளர்ப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். சுதந்திரமே இல்லாமல் கட்டுப்பாடுடன் படிப்பதை குழந்தைகள் பெரும்பாலும் விரும்ப மாட்டார்கள். குழந்தைக்குப் படிப்பை தண்டனையாகக் கொடுக்காமல் அவர்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து சுதந்திரமாக விட்டாலே அவர்கள் நன்குப் படித்துத் தேர்ச்சி அடைவர்.
பெற்றோர்கள் மேற்கூறிய நான்கு தவறுகளை தவிர்த்தாலே குழந்தைகள் எதிர்காலத்தில் மிகச்சிறந்தவர்களாக சமூகத்தில் வலம் வருவார்கள் என்பதில் சற்றும் ஐயமில்லை.