
குழந்தைகள் விளையாடுவது, பேசுவது, மற்ற விஷயங்களை கற்றுக் கொள்வதுபோல பொய் சொல்லவும் கற்றுக்கொள்கிறார்கள். குழந்தைகள் பொய் சொல்லும்போது பெற்றோர்கள் அடிப்பது திட்டுவது போன்ற செயல்களை செய்வது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அதே சமயம் வார்த்தைகளுக்கு வலிமை உண்டு என்பதால் அவர்களின் பொய் சொல்லும் எண்ணத்தை மாற்ற பெற்றோர்கள் கூறவேண்டிய 4 வார்த்தைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
”நான் உன்னை நம்பறேன், நீ உண்மையைச் சொன்னா அந்த நம்பிக்கை இன்னும் அதிகமாகும்."
இந்த வார்த்தைகளை நீங்கள் சொல்லும்போது முதலில் குழந்தைகள் நம்மை நம்புகிறார்கள் என்று புரிந்து கொள்ளும். பின்பு குழந்தைகள் பொய் பேச நினைக்கும்போது நம்மைப்பற்றி இரண்டு முறை யோசிப்பார்கள். அதன் பிறகு நேர்மையால் உறவுகள் வலுப்படும்போது, குழந்தைகளிடம் பயப்படாமல் தங்கள் மனதில் உள்ளதை பேசலாம் என்பதை பெற்றோர்கள் சொல்லி புரிய வைக்கவேண்டும்.
"நான் உன் பேச்சைக் கேட்கத்தான் இங்க இருக்கேன், உன்னைக் குறை சொல்ல இல்ல."
குழந்தைகள் பொய் சொல்வதே, தங்களது தவறை மறைக்கத்தான். அத்தகைய நேரத்தில் பெற்றோர்கள் தங்களை திட்டுவார்கள் அல்லது குறை சொல்வார்கள் என்று பயப்படும்போது இது போன்ற வார்த்தைகளை சொல்லி உறுதியளிக்கும்போது அவர்கள் உண்மையை சொல்ல ஒரு பொழுதும் தயங்க மாட்டார்கள். தவறு செய்வதால் ஒருவர் கெட்டவராக மாட்டார் என்றும், நாம் ஒன்றாகச் சேர்ந்து பிரச்னையைத் தீர்க்க முடியும் என்றும் அவர்களுக்கு நம்பிக்கை அளித்தால், அவர்கள் பொய் சொல்வதற்குப் பதிலாக உண்மையைச் சொல்லப் பழகுவார்கள்.
"நீ சொல்றது எல்லாமே எனக்கு முக்கியம், நான் உன் பேச்சைப் புரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன்."
இந்த வார்த்தைகள் குழந்தைக்கு, அவர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் உண்டு என்பதை உணர்த்தும். அவர்களின் பேச்சைப் புரிந்துகொள்கிறீர்கள் என்று அவர்கள் உணரும்போது, அவர்களுக்குப் பொய் சொல்ல வேண்டிய அவசியமே எப்போதும் இருக்காது.
"தைரியமா உண்மையைச் சொல்றது உன்ன நல்ல தலைவனா மாத்தும்."
உண்மையை சொல்வதால் அடுத்தவர்கள் மனதில் நேர்மறையான எண்ணங்கள் தோன்றி குழந்தைகளின் பிம்பம் மேம்படும் என்றும், அப்பொழுதுதான் மக்கள் அவர்களை நம்புவார்கள் என்பதையும் குழந்தைகளுக்கு எடுத்துரைக்கும்போது, அவர்கள் ஒரு நல்ல மனிதராகவும் தலைவராகவும் மாற நினைத்து அதற்கான முயற்சியில் இறங்குவார்கள்.
வார்த்தைகள் வலியை குறைத்து, எண்ணத்தை மாற்றி, வாழ்வை மேம்படுத்தும் என்பதால் குழந்தைகளிடம் மேற்கூறிய நான்கு வார்த்தைகளை மனதில் விதைத்து நல்வழிப்படுத்துங்கள்.