பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான விஷயங்களை செய்து கொடுக்கிறார்கள் என்றாலும், சில நேரங்களில் தங்கள் குழந்தைகளின் மோசமான நிலைமைக்கும் காரணமாகிவிடுகின்றனர். ஆனால் பெரும்பாலான பெற்றோர்களுக்கு, எதுபோன்று விஷயங்களை குழந்தைகள் முன் செய்யக்கூடாது என்பது தெரிவதில்லை. எனவே இப்பதிவில் அதைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம்.
1. யாருக்கும் தீமை செய்யாதீர்கள்: முதலில் பெற்றோர் தன் குழந்தைகளுக்கு சொல்லித் தர வேண்டியது என்னவென்றால், யாருக்கும் எப்போதும் தீமை செய்யக்கூடாது என்பதைதான். குறிப்பாக பெற்றோர்கள் யாருக்கும் தீங்கு செய்யாத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் உங்களைப் பார்த்துதான் உங்கள் பிள்ளைகள் அனைத்துமே கற்றுக் கொள்வார்கள் என்பதால, நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அப்படிதான் பிள்ளைகளும் இருப்பார்கள். எனவே யாருக்கும் தீங்கு செய்யக்கூடாது என்பதை வலியுறுத்துங்கள்.
2. பொய் பேசக்கூடாது: பொய் என்பது எப்போதுமே நமக்கு பிரச்சனையைத்தான் ஏற்படுத்தும். இது மனிதர்களின் மிகப்பெரிய எதிரி எனலாம். எனவே பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு ஒருபோதும் பொய் பேச சொல்லித் தரக்கூடாது. அதேநேரம் பெற்றோர்களும் அப்படியே நடந்துகொள்ள வேண்டும். சில நேரங்களில் பெற்றோர்கள் தங்களுக்கானதை சாதித்துக் கொள்ள குழந்தைகளிடம் பொய் சொல்வார்கள். ஆனால் எதிர்காலத்தில் இந்த விஷயம் அவர்களுக்கு எதிராகவே மாறலாம்.
3. கெட்ட வார்த்தை பேசக்கூடாது: பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம் அன்புடன் இருக்க வேண்டும். ஒருபோதும் அவர்களுக்கு எதிரே கெட்ட வார்த்தை பேசக்கூடாது. குழந்தைகளின் மனம் எளிதில் காய்மடைந்துவிடும் என்பதால், நீங்கள் பேசும் வார்த்தைகள் அவர்கள் மனதில் நீங்காத வடுவாக மாறிவிடும். எனவே எதுவாக இருந்தாலும் குழந்தைகளுக்கு அன்பாகவே எடுத்துச் சொல்லும் மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
4. மோசமாக நடந்து கொள்ளாதீர்கள்: பெற்றோர்கள் எப்போதுமே அன்புடன் ஒருவரை ஒருவர் மதித்து நடக்க வேண்டும். உங்கள் குழந்தைகள்தானே என அவர்களை தரக்குறைவாக நடத்தாதீர்கள். எந்த சூழ்நிலையிலும் குழந்தைகளை தவறாக நடத்தாதீர்கள். அவர்களை பிறர் முன்பு அசிங்கப்படுத்தாதீர்கள். இப்படி நீங்கள் சரியாக நடந்து கொண்டால், குழந்தைகள் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பு இரு மடங்காகும்.
5. யாரையும் குறை சொல்லாதீர்கள்: பிறரை குறை சொல்பவர்களை யாருக்கும் பிடிப்பதில்லை. குறிப்பாக உங்களது பிரச்சினைகளுக்கு உங்கள் குழந்தைகளை காரணம் காட்டி குறை சொல்லாதீர்கள். நீங்கள் தான் உங்கள் குழந்தைகளை பூமிக்கு கொண்டு வந்தீர்கள், எனவே அவர்களுக்கான முழு பொறுப்பையும் நீங்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் எந்த வகையிலும் உங்களுக்கு கடமைப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்காதீர்கள்.