தற்கால வாழ்வியல் சூழலில் ஆணோ, பெண்ணோ இருவரும் சரிசமமாக குடும்ப சுமைகளைத் தாங்குகிறார்கள். ஆனாலும், 40 வயதிலேயே ஆண்கள் முதுமை மனப் பக்குவதற்கு வந்து விடுகிறார்கள். ஏனெனில், குடும்ப சுமை, வேலை சுமை என அனைத்தையும் ஆண்களும் பகிர்ந்து கொள்வதால் தங்கள் உடல் நலனை கவனித்துக்கொள்ள மறந்து விடுகிறார்கள். ஆம், பெரும்பாலான ஆண்கள் 40 வயதைத் தொட்டவுடன் உறுதி குறைந்த உடலாலும் மரத்துப்போன மனதாலும், ‘இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது’ என்று தவறாக நினைத்து கொண்டு விரக்தி அல்லது ஓய்வு மனநிலையை நோக்கிப் பயணிக்கின்றனர்.
ஆனால், கல்வி, பணி, திருமணம், குழந்தைகள் போன்ற இளம் வயது அழுத்தங்களைத் தாண்டி 40 வயதுக்கு பிறகுதான் தெளிவான, அதேசமயம் பலமான அறிவோடு இயங்க முடியும். அது மட்டுமின்றி, பல விஷயங்களில் அனுபவப்பட்டு புரிந்து, தெளிந்து வாழ்க்கையை எச்சரிக்கையுடன் பார்க்கும் என்பது 40 வயதுதான். 40 வயதுக்கு மேல் உற்சாகமான மனநிலையோடு வாழ்க்கையை வாழ தயார்படுத்திக் கொள்ளவதற்கான 5 வழிமுறைகளை இந்தப் பதிவில் காண்போம்.
1. புதியதை சிந்தித்துத் தேடுங்கள்: தினமும் செய்வதையே செய்து அலுத்துக் கொள்வதை விட்டு, புதியதாகத் தேடுங்கள். அதற்காக மெனக்கெட்டு சிந்தியுங்கள். நீங்கள் விரும்பும் வகையிலான உற்சாகம் பெற புதிய உந்துசக்தியை உருவாக்க புதிதான ஒன்றைத் தேர்ந்தெடுத்து செயல்படுத்துங்கள். மாற்றி யோசிப்பது சுறுசுறுப்பைத் தரும்.
2. வயதில் இளையவர்களுடன் பழகுங்கள்: ‘40 வயசாயிடுச்சு, இனி என்னப்பா?’ என்று புலம்பும் நபர்களிடமிருந்து விலகுங்கள். உங்களை விட வயதில் குறைவானவர்களோடு பழகுங்கள். அவர்களிடம் இருக்கும் அந்த எனர்ஜி உங்களுக்கும் கிடைத்து வாழ்வை ரசிக்க வைக்கும்.
3. அழகான உடை அணியுங்கள்: 40 வயதில்தான் நமக்கு எந்த உடை பொருந்தும் என்பதை கண்டுபிடித்திருப்போம். அதை மனதில் கொண்டு அழகான உடைகளை தேர்வு செய்து அணியுங்கள். உற்சாகத்துடன் செயல்படும் தன்னம்பிக்கை தருவது நேர்த்தியான கம்பீரம் தரும் ஆடைகளும்தான். 40 வயதில் தோன்றும் முதல் நரையும் முன் வழுக்கையும் அழகுதான் என்று நினையுங்கள்.
4. பயணத்தில் ஆர்வம் கொள்ளுங்கள்: 40 வயதில் கிடைக்கும் நேரங்களை வீணாக்காமல் இளைஞர்கள் செல்லும் குழுவில் இணைந்து புதிய புதிய இடங்களுக்குச் சென்று வாருங்கள். வித்தியாசமான இடங்களுக்குச் சென்று விதவிதமான மனிதர்களோடு பழகும்போது உலகம் புதியதாக தோன்றும். இருக்கும் இடமே சொர்க்கம் என்று இருந்தால் உண்மையான சொர்க்கத்தை இழந்து விடுவீர்கள். முதுமையும் சீக்கிரம் உங்களைக் காதலிக்கும்.
5. நிறைய கேளுங்கள், நிறைய படியுங்கள்: அறிவார்ந்த அல்லது பிடித்த விஷயங்களைக் கேட்பதில் ஆர்வம் கொள்ளுங்கள். தற்போது இருக்கும் இணைய உலகில் நாம் தேடுவதற்கும் மேல் அறியாத விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தேடும் மூளைக்கு தீனிபோட நல்ல புத்தகங்களை தேர்வு செய்து நிறைய படியுங்கள். நவீன சிந்தனையாளர்களின் புத்தகங்களைப் படித்தால் இன்றைய அப்டேட்டுகளை அறியலாம்.