
இன்றைய காலகட்டத்தில் நல்ல வேலை கிடப்பது என்பது குதிரைக்கொம்புபோல் ஆகிவிட்டது என்று வேலை தேடுபவர்கள் கூறுகின்றனர். பல்வேறு நிறுவனங்கள் வெளியிடும் வேலைவாய்ப்புகளுக்காகவே வேலைவாய்ப்பற்றோர் பலரும் காத்திருக்கின்றனர். இதனைச் சாதகமாக்கிக் கொண்ட பல நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு இருப்பதாக போலி விளம்பரங்களை வெளியிடுகின்றனர்.
ஒரு நிறுவனம் பல மாதங்களாக ஒரே பணியிடத்துக்காக மீண்டும் மீண்டும் விளம்பரப்படுத்தினால் அது ஒரு போலி வேலைவாய்ப்பாக கூட இருக்கலாம். எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்த வேலைக்கான இடம் அந்த நிறுவனத்தில் இப்போதும் இல்லை, இதற்கு முன்னரும் இருந்தது இல்லை, இனி இருக்கப்போவதும் இல்லை.
வேலைவாய்ப்பு தேடுபவர்கள், இந்த போலி வேலைவாய்ப்புகளை நம்பி, அதனில் நேரத்தை வீணடித்து மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர், இந்த மாயை வேலைவாய்ப்பு விளம்பரங்களில் அறிவித்திருக்கும் திறமைகளைக் கற்கவும் முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
மாயை வேலைவாய்ப்புகளைத் தவிர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரியைத் தொடர்பு கொண்டு, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
போலி வேலைவாய்ப்பு அறிவிப்புக்கான காரணம்?
போலி வேலைவாய்ப்புகள் பல்வேறு காரணங்களுக்காக உருவாக்கப்படுகின்றன. முதல் காரணம், வேலை தேடுபவரை திசை திருப்பி அவர்களை சுரண்டுவதற்காக விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த விளம்பரத்தைப் பார்த்து அனுப்பப்படும் விண்ணப்பங்களை நிறுவனங்கள் தங்களின் எதிர்கால தேவைக்காக சேமித்து வைத்துக் கொள்கின்றன. சிலர் தங்களின் நிறுவன மதிப்பை இணையவெளியில் பிரபலப்படுத்தவும் இதனைச் செய்வதால், வேலை தேடுவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்னர் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தின் நம்பகத்தன்மையை அறிந்து விண்ணப்பித்தால் இதுபோன்ற போலி வேலைவாய்ப்பு வலையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் இருந்து தப்பிக்க 5 வழிகள்:
உங்களின் பொன்னான நேரத்தையும், உழைப்பையும் இத்தகைய போலி வேலைவாய்ப்பு அறிவிப்புகளுக்காக வீணடித்துவிடக் கூடாது. நீங்கள் தெளிவுடன் அவற்றை அணுக இதோ 5 டிப்ஸ் உங்களுக்காக...
1. உங்களை பணியமர்த்துபவரின் புரொபைல் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். அவரின் ‘லிங்க்ட்இன்’ புரொபைல் பற்றி ஆராய்ந்து தெரிந்து கொள்ளலாம். அதன் மூலம் அவர்கள் தொடர்ச்சியாகவே இதுபோல் வேலைவாய்ப்புகளைப் பட்டியலிட்டு வேலையில் அமர்த்துகிறார்களா என உறுதிப்படுத்தலாம்.
2. உங்களுடைய தனிப்பட்ட விவரங்களைப் பற்றி கேட்டால் நீங்கள் உஷாராக வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்க இருக்கும் வேலைக்குத் தேவையான தகவல்களை மட்டும் பகிருங்கள். வங்கிக் கணக்கு விவரம் போன்ற எந்தவொரு தனிப்பட்ட விவரத்தையும் பகிராதீர்கள்.
3. வேலைக்கு அழைப்பு விடுத்த அதிகாரி அது பற்றி விளக்கவும் பொறுப்பு கொண்டவரே. ஆதலால் விண்ணப்பிக்கும் நிறுவனத்துக்கே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும். ஒருவேளை சம்பந்தப்பட்ட நபர் அந்த வேலைவாய்ப்பு பற்றி தெளிவான, உங்களுக்குத் தேவையான தகவலைத் தரவில்லை என்றால் அது நிச்சயமாக போலி வேலைவாய்ப்பு அறிவிப்பாக இருக்கலாம்.
4. நம்பகத்தன்மை மிகுந்த வேலைவாய்ப்புத் தளங்கள் மூலமாகப் பெறப்படும் வேலைவாய்ப்பு விளம்பரங்களையே கருத்தில் கொள்ளுங்கள். அவை நிஜமான வேலைவாய்ப்புத் தரவுகளையே பட்டியலிடும். ஆகையால் நம்பகத்தன்மை கொண்ட இணையதளங்கள், பிரத்யேக தளங்களை மட்டும் வேலைவாய்ப்பு தேடும்போது நாடுங்கள்.
5. நீங்கள் வேலைக்கு விண்ணப்பிக்கவிருக்கும் நிறுவனம் பற்றி ‘லிங்க்ட்இன்’ போன்ற தளங்களில் தேடி அதிலிருக்கும் பின்னூட்டங்கள், ரேட்டிங்க்ஸ் எல்லாம் பாருங்கள். அது உங்களுக்கு அந்த விளம்பரத்தின் மீது புரிதலை உண்டாக்கும். கூடுதலாக, அந்த நிறுவனத்தின் இணைய பக்கத்துக்குச் சென்று அங்கே அச்சில் வெளியான அதே விளம்பரம் அங்கேயும் பதிவிடப்பட்டுள்ளதா என உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்திய வேலைவாய்ப்பு சந்தையில் கூட இப்போது இதுபோன்ற போலிகள் ஊடுருவல் அதிகரித்துவிட்டது. எனவே, போலியாக வரும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை கவனமாக கையாளுங்கள்.