உங்கள் சமயலறையில் அடிக்கடி மாற்றப்பட வேண்டிய 6 அத்தியாவசிய பொருள்கள்...

Kitchen Essentials
Kitchen Essentials

சமைக்கும் சமையலும், அதற்கு பயன்படுத்தும் உணவுப் பொருள்களும் ஆரோக்கியமானதாக, சுத்தமானதாக இருக்க வேண்டும் என்பதில் பலருக்கு அதீத அக்கறை உண்டு. அதேபோல், சமையல் செய்யும் இடமான சமையல் அறையையும், சமைப்பதற்கு உபயோகப்படுத்தும் சாதனங்களையும் சுத்தமானதாக சுகாதாரமானதாக வைத்துக் கொள்வதும் அவசியமானது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு உணவுப் பொருள்களுக்கும் காலாவதி நாட்கள் என்பது கட்டாயம் இருக்கும். அதேபோல்தான், சமைக்கப் பயன்படுத்தும் ஒரு சில கருவிகளையும் ஒரு குறிப்பிட்ட கால அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கு பின்னும் தொடர்ந்து பயன்படுத்தினால் அது நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். அதனடிப்படையில், சமையல் அறையில் அடிக்கடி மாற்றக்கூடிய, மாற்றவேண்டிய பொருள்களைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. நான்ஸ்டிக் பாத்திரங்கள் :

நான்ஸ்டிக் பாத்திரங்கள்
நான்ஸ்டிக் பாத்திரங்கள்

நான்ஸ்டிக் பாத்திரங்களில் சமைக்கும்பொழுது அதில் உணவுகள் ஒட்டாமல் இருத்தல், சுத்தம் செய்வதில் எளிமை மற்றும் குறைந்த அளவு எண்ணெய் பயன்பாடு போன்ற காரணங்களால் இவை பல சமையல் அறைகளில் தனித்துவம் பெற்று விளங்கி வருகிறது. ஆனால், இந்த நான்ஸ்டிக் பாத்திரங்களில் ஏதேனும் சேதம், கீறல்கள் தென்பட்டாலோ அலலது அதன் மேற்பூச்சு உரிந்து வந்தாலோ அல்லது சரியான பயன்பாட்டிற்குப் பிறகும் உணவு பாத்திரத்தின் மேற்பரப்பில் ஒட்டிக்கொண்டாலோ அவற்றை மாற்றுவதற்கான நேரம் இது என்பதற்கான அறிகுறிகளாகும். இதுபோன்ற, அறிகுறிகள் தென்படாவிட்டாலும் நான்ஸ்டிக் பாத்திரங்களை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி விடுவது நல்லது.

2. கத்திகள்:

கத்திகள்
கத்திகள்

பெரும்பாலான வீடுகளில் குறிப்பாக சமையல் அறைகளில் கத்திகள் பெரும்பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வெவ்வேறு அழகழகான வடிவங்களில் வெட்டுவதற்கு, அவற்றின் தோள்களை உரிப்பதற்கும் என பலவகையான கத்திகள் தற்போது கிடைக்கின்றன. தொடர் பயன்பாட்டினால் இந்தக் கத்திகள் அடிக்கடி மழுங்கிப்போவதுண்டு. கூர்மைப்படுத்துதல் பலனளிக்காத போதும், கத்தியின் பிளேடு சீரற்றதாகவோ, சில்லுகளாகவோ அல்லது சிதைந்ததாகவோ, துருப்பிடித் இருந்தால் அவற்றை உடனடியாக மாற்றிவிட வேண்டும். பொதுவாக சமையலறை கத்திகள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு, அவற்றின் பயன்பாடு மற்றும் பராமரிப்பைப் பொறுத்து மாற்றப்பட வேண்டும்.

3. ஸ்பான்ஜஸ் மற்றும் டிஸ்க்லோத்ஸ்:

ஸ்பான்ஜஸ் மற்றும் டிஸ்க்லோத்ஸ்
ஸ்பான்ஜஸ் மற்றும் டிஸ்க்லோத்ஸ்

பாத்திரங்களையும், கவுண்டர்டாப்புகள் அல்லது பிற மேற்பரப்புகளை சுத்தம் செய்ய ஸ்பான்ஜஸ், ஸ்க்ரப் மற்றும் டிஸ்க்லோத்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவோம். பயன்படுத்திய பிறகு, அவற்றில் சில உணவு துகள்கள், கிரீஸ் மற்றும் ஈரப்பதம் அப்படியே இருக்க வாய்ப்புள்ளது. இது காலப்போக்கில், அதில் பாக்டீரியாக்கள் செழிக்க ஒரு சிறந்த சூழலை உருவாக்குகிறது. பாக்டீரியாவைக் கொல்ல தண்ணீரில் கொதிக்க வைத்து பயன்படுத்தலாம். இதன் மூலம் அவற்றின் ஆயுளை சிறிது நீட்டிக்க முடியும், ஆனால் இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே. சில நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒரு முறையாவது அவற்றை மாற்றப்பட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் ஆனால்..?
Kitchen Essentials

4. காய்கறி நறுக்கும் பலகைகள்:

காய்கறி நறுக்கும் பலகைகள்
காய்கறி நறுக்கும் பலகைகள்

இவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வரும்போது, அதில் திரவங்கள், உணவுத் துகள்கள் அவற்றின் நுண்துளைகளில் சென்று காலப்போக்கில் அதில் பாக்டீரியா வளர வழிவகுக்கிறது. எண்ணெய் போன்றவற்றை கொண்டு சுத்தப்படுத்தினாலும் அதில் உள்ள ஆழமான நுண்பள்ளங்கள் வரை சென்று சுத்தப்படுத்துவது என்பது கடினமான செயல். பயன்படுத்திய உடனேயே அவற்றை சுத்தம் செய்வதாலும், தொடர்ந்து எண்ணெய் தடவி பராமரிப்பதன் மூலமும் அவற்றின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும். இவற்றை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை என மாற்ற வேண்டும். சுத்தம் செய்த பிறகும் நீடித்த துர்நாற்றம் மற்றும் வாசனையை நீங்கள் கவனித்தால் விரைவில் மாற்ற வேண்டியது அவசியம்.

5. பிளாஸ்டிக் உணவு சேமிப்பு கொள்கலன்கள்:

பிளாஸ்டிக் உணவு சேமிப்பு கொள்கலன்கள்
பிளாஸ்டிக் உணவு சேமிப்பு கொள்கலன்கள்

பிளாஸ்டிக் உணவு சேமிப்புக் கொள்கலன்கள் எஞ்சிய உணவுப் பொருள்களை வைப்பதற்கு பயன்படுத்தியிருப்போம். ஆனால் அவை காலப்போக்கில் கறைகள், நாற்றங்கள் மற்றும் சிதைவை உருவாக்கலாம், மேலும் உங்கள் உணவில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் கூட கலக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக அவை குறைந்த தரம் வாய்ந்த பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டால் அல்லது BPA (Bisphenol A) இருந்தால். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை என இந்த பிளாஸ்டிக் கொள்கலன்களை மாற்ற வேண்டும். அதுபோக, நிறமாற்றம், துர்நாற்றங்கள் ஏற்படுதல், விரிசல் மற்றும் சேதம் ஏற்படுதல் போன்றவை அவற்றை மாற்ற வேண்டிய நேரம் இது என்பதை குறிக்கும் அறிகுறிகள் ஆகும்.

6. வடிகட்டிகள்:

வடிகட்டிகள்
வடிகட்டிகள்

காஃபி, டீ, ஜூஸ் போன்றவற்றை வடிகட்டுவதற்கு Stainless Steel-ஆல் ஆன வடிகட்டிகளை பயன்படுத்தினால், அவற்றில் வடிகட்டிய உணவுப் பொருள்களின் சக்கைகள் சிக்கிக் கொள்வதுண்டு. சுத்தம் செய்தும் அந்த சக்கைகள் போகாமல் ஆங்காங்கே ஒட்டி இருந்தால், அது பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் அதில் தோன்ற வாய்ப்புள்ளது. வடிகட்டியை அவை ஒழுங்காக வடிகட்டாத பொழுதும், சுத்தம் செய்தும் அசுத்தங்கள் போகாதபோதும் மாற்றுவது அவசியமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com