மாற்ற முயற்சிப்பதை விட ஏற்றுக்கொள்வது மிகுந்த மகிழ்ச்சி தரும் - எதில்? எங்கே? எப்போது?

Happy married life
Couple
Published on

மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொள்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வதில்லை. அவர்கள் சிறு சிறு அற்ப விஷயங்களில் ஈடுபாடு கொண்டு இல்லறம் என்ற மகிழ்வை துயரமாக எண்ணுகின்றனர். திருமண வாழ்க்கை எப்போதும் மகிழ்வாக இருக்க சில செயல்களை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும். இரு தரப்பிலும் பரஸ்பர அன்பு , மரியாதை, நம்பிக்கை, புரிதல் மற்றும் நேர்மை இருந்தால் அவர்களை விட மகிழ்ச்சியான ஜோடி இல்லை.

முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்:

நாம் மகிழ்ச்சியாக இருந்தால்தான், சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும். இது திருமண வாழ்க்கைக்கும் பொருந்தும். உங்கள் மகிழ்ச்சி உங்கள் இணைக்கும் மகிழ்ச்சியை தரும். எப்போதும் உங்களுக்கு மனநிறைவைத் தரும் விஷயங்களைச் செய்து ஆத்ம திருப்தியைப் பெறுங்கள். உங்கள் துணையை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள். அவரும் பரஸ்பரம் உங்களை மகிழ்விக்க முயற்சி செய்வார்.

உங்கள் துணையை பாராட்டுங்கள்:

உங்கள் துணை செய்யும் ஒவ்வொரு முயற்சிகளையும் நீங்கள் கவனிக்க வேண்டும். பாராட்டவும் வேண்டும். "உன்னை விட சிறப்பாக சமைக்க முடியாது. நீ கார் ஓட்டும் அழகே தனி தான். நீ இல்லாவிட்டால் எனது வளர்ச்சி இந்த அளவுக்கு இருந்திருக்காது. உன்னை போன்ற கணவர்/மனைவி யாருக்கும் கிடைக்க மாட்டார்கள்...." என்று அவ்வப்போது பாராட்டுங்கள். இந்த பாராட்டுக்கள் நிச்சயம் வாயிலிருந்து வரக்கூடாது மாறாக இதயத்திலிருந்து வர வேண்டும். உங்களின் பாராட்டுக்கள் அவரை இன்னும் உங்கள் அருகாமைக்கு இழுத்து வரும்.

துணைக்கு முன்னுரிமை  :

காதல் என்பது உங்கள் துணையை நீங்கள் எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்களோ, அவருடன் அந்த அளவுக்கு அதிக நேரத்தை செலவிடுங்கள். நீங்கள் இருவரும் தனியாக நேரத்தை செலவிடுவதால் உங்களுக்கிடையேயான காதல் மற்றொரு உயரத்திற்கு வளர்கிறது. இவை அனைத்தும் உங்கள் உறவை பலப்படுத்தும்.

ஒப்பீட்டை நிறுத்துங்கள்:

எல்லோருடைய திருமண வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. உங்கள் கணவன்/மனைவியை நீங்கள் உண்மையிலேயே மதிக்கிறீர்கள் என்றால், முதலில் உங்கள் திருமண வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்த வேண்டும். அவர்கள் நன்றாக இருக்கிறார்கள். அவர்களைப் போல் நாம் வாழவில்லை என்று குறை கூறுவது உங்கள் திருமண வாழ்க்கையின் மகிழ்ச்சியைப் பறித்துவிடும். ஒவ்வொருவரின் வாழ்க்கைக் கதையும் வித்தியாசமானது. உங்களிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். 

இதையும் படியுங்கள்:
தம்பதிகளுக்கு இடையே அன்பு குறைய இதுதான் காரணம்! 
Happy married life

ஒருவருக்கொருவர் மாற்ற முயற்சிக்காதீர்கள்:

உங்கள் துணையின் அனைத்து குணங்களையும் நீங்கள் விரும்ப முடியாது. உங்கள் செயல்கள் அனைத்தும் உங்கள் துணையை மகிழ்விக்காது. நீங்கள் நினைப்பதை போல அவரை மாற்ற நினைத்தால் அவர் வேறு மாதிரியாகவும் மாற வாய்ப்பு உள்ளது. பிடிவாதமாக இருப்பதும் உங்கள் துணையிடம் மாற்றங்களைக் கோருவதும் தவறு. சில மோசமான செயல்களை மாற்றுதல் சரி தான். ஆனால் மொத்தமாக மாறுவது கடினம். எனவே ஒருவரையொருவர் மாற்ற முயற்சிப்பதை விட ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும்

எவரிடமும் துணையை விட்டுக்கொடுக்காதீர்கள்!

உங்களிடையே ஆயிரம் மனக்குறைகள் எழுந்திருக்கலாம். தாராளமாக உட்கார்ந்து பேசி சரி செய்ய வேண்டும். அதைத் தவிர, உங்கள் பந்தத்தில் மூன்றாவது நபரை அனுமதிக்கக் கூடாது. மூன்றாவது நபர் உங்களுக்கு எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும், உங்கள் குடும்ப ரகசியங்களை அவர்களிடம் சொல்லக்கூடாது. உங்கள் துணையை மற்றவர்கள் முன்னிலையில் விமர்சிக்கக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் என் துணையை விட்டு பிரிந்து செல்ல மாட்டேன் என்ற உணர்வு உங்களுக்கு இருந்தால் அது மகிழ்ச்சியான இல்லறத்திற்கு போதுமானது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com