பெண்கள் கடக்க விரும்பும் 6 தடைகள்!

பெண்கள் கடக்க விரும்பும் 6 தடைகள்!

வீடு முதல் விண்வெளி வரை ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் சாதித்து வருகிறார்கள். நவீன வசதிகளும், சமூக மாற்றங்களும் பெண்களுக்கு எதிரான அத்தனை தடைகளையும் உடைத்து நொறுக்கி உள்ளன. ஆனால், இந்த தொழில்நுட்ப யுகத்திலும் கூட வீட்டிலும் பொதுவெளியிலும் சில சமூகத் தடைகளை பெண்கள் சிரமப்பட்டு கடந்து வரவேண்டிதான் உள்ளது. அவை:

வாழ வழி விடுதல்: சில பெண்கள் கல்வியிலோ அல்லது வேலையிலோ தங்கள் இலக்கை அடையும் வரை திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். இதற்கிடையே தன் தங்கைக்கு ஏதாவது வரன் வந்தாலோ, தங்கை காதலித்தாலோ, கிட்டத்தட்ட சம வயதில் இருக்கும் சகோதரனுக்கு திருமண வாய்ப்பு வந்தாலோ வழிவிட்டு ஒதுங்குகிறார்கள். ஆனால், அது மற்றவர்களுக்கு வாயில் போட்டு மெல்லும் அவலாக போய்விடுகிறது. இவளுக்கு ஏதாவது பிரச்னையா? அக்காவை விட்டு விட்டு தங்கைக்கு கல்யாணம் செய்கிறார்கள் என்றால், இவளைப் பெண் பார்த்தவர்கள் எல்லாம் தட்டிக் கழித்து விட்டார்களா? என்றெல்லாம் சமூகம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்லி குடும்பமே ஓய்ந்து போகிறது.

துரத்தும் கேள்விகள்: பெண்கள் தங்களுக்கு என்று சில இலக்குகளை நிர்ணயித்துக் கொள்கிறார்கள். உயர் கல்வி என்பது இப்போது நீண்ட காலத்தை எடுத்துக்கொள்கிறது. பட்டம், மேற்படிப்பு, ஆராய்ச்சி, நிர்வாகவியல் படிப்பு என தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ள பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. 25 வயது வரை படிக்கும் பெண்களை சாதாரணமாக பார்க்க முடிகிறது. ஆனால், 20 வயதைத் தொட்டாலே,  ‘பெண்ணுக்கு இன்னும் மாப்பிள்ளை பார்க்கவில்லையா?’ என துரத்தும் கேள்விகளை அந்தப் பெண்ணும் பெற்றோர்களும் எதிர்கொள்ள நேரிடுகிறது. உறவுகள் அக்கம் பக்கத்தினர், நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் என்று எல்லோருமே இப்படிப்பட்ட கேள்விகளோடு எப்போதும் தயாராக இருக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகும் இது நிற்பதில்லை. தங்கள் பணியில் ஏதோ ஒரு இலக்கை நோக்கி நகரும்போது தாய்மையைத் தள்ளி போடுகிறார்கள் பெண்கள். ஆனால், ‘என்ன ஆச்சு? ஏதும் பிரச்சனையா? உனக்கா? உன் கணவருக்கா? எனக்குத் தெரிந்த ஒரு டாக்டர் இருக்காரு போய் பார்க்கிறீர்களா?  இந்தெந்த கோயிலுக்குப் போனால்  குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிட்டும்’ என்று கேள்விகளும் ஆலோசனைகளுமாக துரத்துகிறார்கள்.

நீளும் வேலை நேரம்: காலை 10 மணிக்கு வேலைக்கு போய் ஆறு மணிக்கு வீட்டுக்குத் திரும்பும் நடைமுறை இப்போது பெரும்பாலும் மாறிவிட்டது. வங்கிகள், ஐ.டி. அலுவலகங்கள் என எல்லா இடங்களிலும் வேலை நேரத்தை தாண்டியும் இருந்து பணி புரிய வேண்டும். ஆண்கள் இப்படி செய்தால், ‘அவர் கடின உழைப்பாளி. நேரம், காலம் பார்க்காமல் வேலை செய்வதால் அவருக்கு சம்பள உயர்வு, பிரமோஷன் என எல்லாமே மற்றவர்களை விட அதிகமாக கிடைக்கிறது. அவர்கள் ஆபீஸில் அவரை சீக்கிரம் வீட்டுக்கு வரவே விடமாட்டார்கள்’ என பெருமையாகச் சொல்லுவார்கள். ஆனால், பெண்களுக்கு இந்த சலுகை கிடைப்பதில்லை. ‘ஆபீஸ் நேரம் முடிந்ததும் வரவேண்டியதுதானே. சீக்கிரம் வீட்டுக்கு வராம அப்படி என்ன வேலை வேண்டி கிடக்கு’ என எதிர்ப்பு கிளம்பும்.

தாய் வீட்டுக்கு அனுமதி: திருமண வாழ்வு இப்போது சுதந்திரம் மிகுந்ததாக கருதப்படுகிறது. ஆனாலும், இப்போதும் திருமணத்துக்குப் பிறகு தனது தாய் வீட்டுக்குச் செல்ல பெரும்பாலான பெண்கள் கணவன் வீட்டில் அனுமதி பெற வேண்டி உள்ளது. தகவல் சொல்வது என்பது கட்டாயம். கணவரிடமோ, மாமியார் மற்றும் மாமனாரிடமோ எங்கு செல்கிறோம் என்பதைச் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்பது முறை. ஆனால், 'நான் போய் வரட்டுமா?' என அனுமதி கேட்கவேண்டிய சூழல் இருப்பதுதான் சரியில்லை. பக்கத்து தெருவிலேயே அம்மா வீடு இருந்தாலும் அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், நினைத்த நேரத்தில் போய் பார்க்க முடியாது என்பது பெரிய மன  நெருக்கடியை கொடுக்கும். தாய் வீட்டு உறவை அப்படி எளிதில் அறுத்துக்கொண்டு வந்துவிட முடியாது என்பதுதான் யதார்த்தம்.

பிறந்த வீட்டுக்கு உதவி: தன்னைப் படிக்க வைத்து ஆளாக்கி லட்சங்களில் சம்பாதிக்கும் அளவுக்கு தகுதியானவனாக உயர்த்தி, வாழ்வில் ஏற்றங்கள் பெற காரணமாக இருந்த  பெற்றோரை கடைசி காலம் வரை தாங்கிப் பிடிப்பது ஒரு மகனின் கடமையாக இருக்கிறது. அதை செய்ய மறந்த அல்லது செய்ய மறுக்கும் மகனை இந்த சமூகம் வசை பாடுகிறது. சட்டப்படி அந்த மகன் மீது நடவடிக்கை எடுக்கவும் இப்போது வழி இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணுக்கான கல்விக்கும் பெற்றோர் இப்படித்தான் செலவழிக்கிறார்கள்; அக்கறை காட்டுகிறார்கள்; அந்தப் பெண் நல்ல தகுதியும், உயர் திறமைகளும் பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கு ஆதார சக்தியாக இருக்கிறார்கள். அவர்களும் முதுமையை நெருங்கும்போது, தங்கள் பெண்ணின் உதவிகளை பெற அவர்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், ஒரு பெண் தனது திருமணம் வரை பெற்றோருக்கு உதவியாக இருக்கலாம். அதன்பின் அந்தப் பெண் சம்பாதிப்பது அவரின் புகுந்த வீட்டுக்கே சேர வேண்டும் என்ற நியதி இருக்கிறது. அவசரத் தேவைக்கு பெற்றோருக்கு ஏதாவது பணம் உதவி செய்வதற்குக் கூட நிறைய பெண்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை.

மாறும் பெயர்: திருமணம் வரை பெண்கள் தங்கள் குடும்பப் பெரையும் தந்தை பெயரையும் அடையாளமாக வைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெயராலேயே அவர்கள் அறியப்படுகிறார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு கணவரின் பெயரில் தங்கள் அடையாளத்தை கரைக்க வேண்டியுள்ளது. இந்த தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பெயர் என்பது பல இடங்களில் ஒருவரின் அடையாளமாக கருதப்படுகிறது. அந்த அடையாளத்தை பெண்கள் இழக்கும்போது, அவர்கள் வேறு நபராகக் கருதப்படும் அபாயம் நேர்கிறது.

மாறுதலை புரிந்து கொண்டால் மாற்றம் நிகழ்ந்து விடும் என்ற நம்பிக்கையில் பெண்கள் தங்கள் தடங்களைப் பதித்து வருகிறார்கள். இதைத் தாண்டும் காலம் மிகத் தொலைவில் இல்லை என்பதே பெண்களை ஊக்குவிக்கும் டானிக்தானே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com