

ஒருவர் தேவையின் அடிப்படையில் மட்டுமே நம்மிடம் பழகுகிறார் என்பதை அவர்களின் செயல்கள் மூலமே தெரிந்து கொள்ளலாம். இவர்கள் எப்போதுமே தங்களுக்குத் தேவையானதை மட்டுமே பேசுவதும், நம்மைத் தொடர்பு கொள்ளும்பொழுது உதவி கேட்பதும் என்று சதா தன்னைப் பற்றியே, தனது தேவைகளைப் பற்றியே பேசுபவர்களாக இருப்பார்கள். இவர்களை அடையாளம் கண்டு கொள்வது மிகவும் எளிது.
1. தொடர்பு முறைகள்: பொதுவாக, தொடர்பு கொண்டு பேசுவதோ, பழகுவதோ இல்லாமல் அவர்களுக்குத் தேவை ஏற்படும்பொழுது மட்டும் தொடர்பு கொள்வது ஒரு அடையாளமாக இருக்கும். தானாகவே வலிய வந்து பேசி தங்களுடைய காரியத்தை சாதித்துக்கொள்வதில் முனைப்பு காட்டுவார்கள். மற்ற சமயங்களில் அவர்கள் இருக்கும் இடமே தெரியாது. முக்கியமாக, உங்களிடம் எந்த வாக்குவாதமும் செய்ய மாட்டார்கள். இவர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்.
2. திடீர் அக்கறை காட்டுவார்கள்: இத்தனை நாட்கள் இன்னொருவரிடம் நெருக்கமாக இருந்துவிட்டு, திடீரென்று அவரை விட்டு நம் பக்கம் வந்து இத்தனை நாள் பழகிய அவரைப் பற்றியே நம்மிடம் குறை கூறுவதும், நாம் கூறுவதுதான் சரி என்று ஓவராக அன்பைப் பொழிவதும் என திடீர் அக்கறை காட்டுகிறார்கள் என்றால் அவர்கள் நம்மிடம் தேவைக்காக மட்டுமே பழகுகிறார்கள் என்று எளிதில் புரிந்து கொள்ளலாம். ஓவராக முகஸ்துதி பண்ணுவதும், நாம் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுவதுமாக இருப்பவர்கள் என்றால் சந்தேகமே வேண்டாம், அவர்கள் தேவைக்காகத்தான் பழகுகிறார்கள் என்று அர்த்தம்.
3. சப்பைக்கட்டு கட்டுவார்கள்: நாம் சில சமயம் சில தவறுகளை சூழ்நிலைகளின் காரணமாக தெரியாமல் செய்திருப்போம் அல்லது சில சமயம் தெரிந்தே செய்திருப்போம். அப்படி நாம் தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும், நாம் செய்த தவறுகளை சுட்டிக்காட்டாமல் அதற்கு சப்பைக்கட்டு கட்டி சப்போர்ட் செய்வார்கள். நாமே இது தவறு என்று உணர்ந்தாலும், இல்லை என்று நமக்காக ஓவராக வரிந்து கட்டிக்கொண்டு பேசுவார்கள். தவறை சுட்டிக்காட்டுபவர்கள்தான் எப்பொழுதும் நம்முடன் நமக்காக எல்லா சூழ்நிலைகளிலும் இருப்பார்கள். மற்றவர்கள் அவர்கள் தேவைக்காக மட்டுமே நம்மிடம் பழகுவார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.
4. தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பார்கள்: தேவைக்காக மட்டுமே பழகுபவர்கள் அவர்கள் தேவை முடிந்ததும் காணாமல் போய்விடுவார்கள். நமக்குத் தேவைப்படும்போது ஒரு அவசர ஆபத்திற்கு கால் பண்ணினால் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பார்கள். அவர்களுக்குத் தேவைப்படும் சமயத்தில் தானாகவே வந்து சிரித்து பேசுவார்கள். இவர்களை நம்பி ஏமாந்து விடக் கூடாது. சற்று ஒதுங்கியே இருக்கப் பழக வேண்டும்.
5. ஒரு வழிப் பாதையாக இருக்கும்: தேவைக்காக பழகுபவர்களின் நட்பு எப்போதும் ஒரு வழிப் பாதையாகவே இருக்கும். அவர்களுக்கு நாம் மட்டுமே உதவி பண்ணிக் கொண்டிருப்போம். நம்மிடம் சிரித்துப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்வார்கள். உன்னைப்போல் உண்டா என்று புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால், நமக்குத் தேவைப்படும் நெருக்கடியான சமயங்களில் அவர்கள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்; நமக்கு எதுவும் செய்ய மாட்டார்கள். பாசமாக பேசுவது போல் நிறைய பேசுவார்கள். ஆனால், செயலில் ஒன்றும் இருக்காது. இவர்களிடம் எல்லாமே ஒரு வழிப் பாதையாகத்தான் இருக்கும். இவர்களை ஜாக்கிரதையுடன் கையாள வேண்டியது அவசியம்.
6. விழுந்து விழுந்து நலன் விசாரிப்பார்கள்: அவர்களுக்கு ஏதாவது அவசரமாக காரியம் ஆக வேண்டும் என்றால் திடீரென்று தொடர்பு கொண்டு, 'ரெண்டு நாட்களாக உங்கள் ஞாபகம் வந்து கொண்டே இருக்கிறது. டைம் இல்லை அதான் போன் பண்ண முடியவில்லை!' என்று அக்கறையோடு பேச்சைத் தொடங்குவார்கள். நம் நலனை விழுந்து விழுந்து விசாரிப்பார்கள். என்றோ நாம் அவர்களுக்கு செய்த நல்ல விஷயத்தை நினைவுபடுத்துவார்கள். 'அன்று மட்டும் நீங்கள் எனக்கு உதவவில்லை என்றால் நான் இருந்த இடம் இன்று புல் முளைத்துப் போயிருக்கும்' என்று உச்சி குளிர ஐஸ் வைப்பார்கள். நாம் அதில் மயங்கிக் கொண்டிருக்கும் பொழுது புதிதாக நாலு கோரிக்கைகளை நம்மிடம் இறக்கி வைத்து காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாம் சற்று ஒதுங்கி இருப்பதுதான் நல்லது.