

உறவில் பொறாமை இருந்தால் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது இயற்கையான மனித உணர்ச்சியாகும். இதனை அழகாக கையாளத் தெரிந்தால் போதும். பொறாமை என்பது பொதுவாக பாதுகாப்பின்மையின் அறிகுறியாகும். பொதுவாக, நாம் அனைவருமே ஏதாவது ஒரு கட்டத்தில் உணரும் உணர்வுதான் இது. உறவினர்களின் பொறாமையை சமாளிக்க உணர்வுகளை புரிந்து கொள்வது, நேர்மறையான அணுகுமுறையை பின்பற்றுவது போன்ற பல வழிகள் உபயோகமாக இருக்கும்.
1. உணர்வுகளைப் புரிந்து கொள்ளுதல்: பொறாமை உணர்வின் காரணத்தை புரிந்துகொள்வது அதை சமாளிப்பதற்கான முதல் படியாகும். பாதுகாப்பின்மை அல்லது கடந்த கால அதிர்ச்சி போன்ற உணர்வுகளில் இருந்து பொறாமை உருவாகலாம். பிறரின் பொறாமை நம்மை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அதை கையாள வேண்டியது அவசியம்.
2. நேர்மறையான அணுகுமுறையை பின்பற்றுதல்: நம் உறவினர்களிடம் நேர்மறையான அணுகுமுறையை பின்பற்றுவது நல்ல பலனைத் தரும். அவர்களுடன் பேசுவதற்கு பதிலாக, அவர்கள் நம்மை விமர்சிக்காத காரியங்களைப் பற்றி பேசுவது நல்லது. இது அவர்களின் மனநிலையை மாற்ற உதவும். நம் குடும்ப விஷயங்கள் அத்தனையையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. புதிதாக வாங்கிய நகை, வீடு கட்டுவது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.
3. நேரடி உரையாடலை தவிர்த்தல்: ஒருவர் பொறாமைப்படுகிறார் என்பது தெரிந்தும் அதைப் பற்றி பொறாமைப்படுபவர்களிடம் நேரடியாகப் பேசுவது பல நேரங்களில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, முடிந்தவரை இதைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நம்முடைய சம்பளம், தனிப்பட்ட பிரச்னைகள் போன்றவற்றையும் பேசுவதைத் தவிர்ப்பது நல்லது. நம் விஷயங்களில் அதிகம் தலையிடுபவர்களிடம் பட்டும் படாமலும் பேசி, அவர்களை விட்டு சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.
4. எல்லைகளை அமைத்தல்: நம் உணர்வுகளை புறக்கணிக்கும் அல்லது நம்மை சங்கடப்படுத்தும் விஷயங்களைத் தவிர்ப்பதற்கு தெளிவாக எல்லைகளை அமைக்கவும். உறவினர்களிடம் நம் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி அதிகமாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். இது அவர்களை மேலும் பொறாமைப்படாமல் தடுக்க உதவும். அத்துடன் அவர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பது நம் மன அமைதியை கெடுக்காமல் இருக்கும்.
5. நேரத்தை வீணாக்க வேண்டாம்: நம்மை விமர்சிப்பவர்களையும், நம் முன்னேற்றத்தைக் கண்டு பொறாமைப்படுபவர்களையும் நினைத்து நம் நேரத்தை வீணடிக்காமல் நம்முடைய வாழ்க்கை முறையில் கவனம் செலுத்தி நம் கனவுகளையும் லட்சியங்களையும் நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும்.
6. ஒதுங்கி இருத்தல்: வாழ்க்கையை ஒப்பிடுபவர்களிடமிருந்து ஒதுங்கி இருக்கப் பழகுங்கள். சிலர் தங்களுடைய வாழ்க்கையை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பொறாமை கொள்வார்கள். பொறாமை கொள்வதுடன் நிற்காமல் நம் விஷயங்களில் தலையிட்டு குழப்பத்தையும் உண்டு பண்ணுவார்கள். இது நம் இலக்குகளையும் வாழ்க்கையையும் மகிழ்ச்சியுடன் வாழத் தடையாக இருக்கும். எனவே, இப்படிப்பட்டவர்களிடம் இருந்து சற்று ஒதுங்கி இருப்பது நல்லது.