சமூகத்தில் உயர்ந்த பதவியில் அல்லது உயர்ந்த நிலையில் இருப்பவர்கள் மற்றும் பணக்காரர்கள் போன்றவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைக்கும். ஆனால் எல்லோரும் பணக்காரராகவும் உயர்ந்த பதவியிலும் இருப்பதில்லை. உளவியலின்படி பணமோ பதவியோ இல்லாமல் ஒருவர் சமூக அந்தஸ்தை பெற முடியும். அதற்கான 6 முக்கியமான வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
1. அனுதாபம்
பிறருடைய உணர்வுகளை புரிந்து கொண்டு அவர்கள் மேல் அனுதாபத்தையும் பச்சாதாபத்தையும் வெளிப்படுத்துவது ஒரு சக்தி வாய்ந்த கருவியாகும். தன்னுடைய கருத்தை பிறர் மீது திணிப்பதற்கு பதிலாக அவர்களுடைய கருத்தை அவர்கள் பார்வையிலேயே புரிந்து கொள்வது என்பதை இது குறிக்கிறது. இதனால் மக்கள் இயல்பாகவே உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அனுதாப உணர்ச்சியை பணத்தாலோ அந்தஸ்தாலோ வாங்க முடியாது என்பது நிச்சயம்.
2. வசீகரம்
வசீகரமாக தோற்றமளிப்பது என்பது பணக்காரர்களுக்கும் அந்தஸ்து உள்ளவர்களுக்கு மட்டுமே ஆன குணம் அல்ல. இது பயிற்சியின் மூலம் வளர்க்கக்கூடிய ஒரு திறமை.
பிறர் மீது உண்மையாக அக்கறை செலுத்துவது, அவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்பது, நகைச்சுவையாக பேசுவது போன்றவை ஒருவருடைய குணத்திற்கு வசீகரத்தை சேர்க்கும். இதனால் பிறரை ஈஸியாக கவர்ந்து விட முடியும். சமூக அந்தஸ்தும் கிடைக்கும்.
3. பணிவு
பணிவு என்பது மதிப்பு மிக்க ஒரு பண்பு. ஆனால் இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது. தன்னைப் பற்றி பெருமை அடித்துக் கொள்ளாமல் பிறருடைய பங்களிப்புகளை நல்ல குணங்களை பாராட்டுவதில் அதிக கவனம் செலுத்துவது பணிவின் வெளிப்பாடாகும். இதை கடைப்பிடிப்பதன் மூலம் பிறரிடம் மரியாதையைப் பெறுவது மட்டுமல்லாமல் சமூக அந்தஸ்தையும் பெறலாம்.
4. நம்பகத்தன்மை
ஒருவருடைய செயல்களிலும் வார்த்தைகளிலும் நம்பகத்தன்மை இருப்பது மிக அவசியம். தான் சொல்லும் சொல்லுக்கு ஏற்ப ஒருவர் நடந்து கொள்வது அவசியம். இதை நடைமுறையில் செயல்படுத்தும் போது பிறருடைய நம்பிக்கையை சம்பாதிக்கலாம். சமூக அந்தஸ்தும் தன்னால் உயரும்.
5. மரியாதை செலுத்துதல்
பிறருக்கு மரியாதை செலுத்தும் போது அது ஒரு நேர்மறையான சூழலை உருவாக்குகிறது. பிறருடைய பாராட்டு பெறுவது மட்டுமல்லாமல், அவர்களுடைய மரியாதையும் பதிலுக்கு பெறலாம். இதனால் தனியான சமூக அந்தஸ்து கிடைப்பது உறுதி.
6. நன்றி உணர்வு
பிறருடைய கருணையை அங்கீகரிப்பதன் மூலமும் மக்கள் இயல்பாகவே நேர்மறையான அதிர்வுகளை ஈர்க்கிறார்கள். நன்றி உணர்வு என்பது ஒரு சமூக உணர்ச்சி. இது தொடர்புகளை வளர்த்து மக்களை மதிப்புள்ளதாக உணர வைக்கிறது. நன்றி உணர்வை பயிற்சி செய்வது பணம் அல்லது சலுகைகள் இல்லாமல் சமூக அந்தஸ்தை உயர்த்துவதற்கான எளிய ஆனால் சக்தி வாய்ந்த வழியாகும்.