
வாழ்நாள் முழுவதும் நம்மை ஊக்குவிப்பது என்பது நாம் தொடர்ந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளவும், திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், குறிக்கோள்களை அடையவும் உந்துதல் அளிக்கும் ஒரு நிலையாகும். வாழ்வில் நம்மை ஊக்குவிக்கும் பல விஷயங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமான 6 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
1. தொடர்ச்சியான கற்றல்: வாழ்நாள் முழுவதும் நம்மை ஊக்குவிப்பதற்கான முக்கியமான விஷயம் கற்றலாகும். கற்பது என்பது ஒருவருடைய அறிவுத்திறனை மேம்படுத்த உதவும். இது ஒரு நபருக்கு நல்ல வேலை வாய்ப்பை பெற்றுத் தரும். வாழ்க்கையில் நற்பெயரையும், மதிப்பையும் பெற உதவும். புதிய திறன்களையும், அறிவையும் தொடர்ந்து பெறுவதற்கு கற்றல் முக்கியமான பங்கு வகிக்கிறது. புதிது புதிதாக விஷயங்களை கற்றுக்கொள்வது, அதனை வாழ்க்கையில் பயன்படுத்துவது நம்மை சுறுசுறுப்பாக்கும் மற்றும் விஷய ஞானம் பெறவும் உதவும்.
2. சமூக நடவடிக்கைகள்: சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து மற்றவர்களுக்கு உதவுவதும், தன்னார்வ தொண்டு செய்வதும் வாழ்வின் அர்த்தத்தை உணர்த்தும். மற்றவர்களுடன் ஈடுபடுவதும், நல்ல உறவுகளை வளர்த்துக் கொள்வதும், சமூகத்தில் ஒரு அங்கமாக இருப்பதும் நம் மனநிலையை மேம்படுத்தி, வாழ்நாள் முழுவதும் நம்மை ஊக்குவிக்கும். சமூகத்தில் மற்றவர்களுடன் இணைந்து செயல்படும்பொழுது அவர்களின் அனுபவங்கள், அறிவு, கருத்துக்கள் மூலம் நாம் நிறைய கற்றுக்கொள்ள முடிகிறது. இது நமக்கு வாழ்க்கையை பற்றிய புதிய பார்வையைத் தருகிறது.
3. சுய விழிப்புணர்வு: நம் உணர்வுகளை புரிந்துகொள்வதும், அதை சரியான முறையில் வெளிப்படுத்துவதும், அத்துடன் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் அது எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அறிவது மிகவும் அவசியம். சுய விழிப்புணர்வு நம்மை ஊக்குவித்து முன்னேற்றம் அடையச் செய்யும். அதிக திறன்கள் கொண்டு நம்மை அதிக போட்டித் தன்மையை கொண்டவர்களாக மாற்றி வெற்றியை நோக்கி செலுத்தும். நாம் நிர்ணயித்துக் கொள்ளும் குறிக்கோள்களை அடைவதற்காக தொடர்ந்து முயற்சி செய்யத் தூண்டும்.
4. அங்கீகாரம்: நம்மை அங்கீகரிப்பது என்பது ஒரு வலுவான உந்துதலாகும். ஒரு தனி நபரிடம் இருந்தோ, சக ஊழியரிடமிருந்தோ அல்லது நம் முதலாளியிடமிருந்தோ அங்கீகாரம் பெறுவது நம்மை பெருமளவில் ஊக்குவிக்கும். நம்மை விட அதிக ஆற்றலுடன் இருப்பவர்களிடமிருந்து பாராட்டு பெறுவது என்பது அங்கீகாரம் சார்ந்த உந்துதலாக இருக்கும். அங்கீகாரம் ஒரு நபருடைய அடையாளத்தை சரிபார்க்க பயன்படுகிறது. நம்மையும், நாம் சொல்வதையும், நம் செயல்களையும் அங்கீகரிப்பது என்ற சமூக அங்கீகாரம் நம்மை ஊக்குவிக்கும்.
5. உயர்ந்த நோக்கம் அல்லது குறிக்கோள்: குறிக்கோள் நம் வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை உருவாக்குகிறது. குறிக்கோளுடன் செயல்படும்பொழுது ஆரோக்கியமாக உணர்வோம். தனிமை குறைவாகவும், மகிழ்ச்சி நிறைவாகவும் இருக்கும். குறிக்கோள் நம்மை கடினமான காரியங்கள் செய்வதை மிகவும் எளிதாக்கும். உயர்ந்த நோக்கம் நம்மை அதை நோக்கி இழுத்துச் செல்வதால் அதனை அடைவதற்காக போராடுவதும், வெற்றி பெறுவதுமாக இருப்போம். இது நமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன், வாழ்நாள் முழுவதும் நம்மை ஊக்குவிக்கும் சிறந்த ஊக்கியாக செயல்படும்.
6. அதிகாரமும் புகழும்: வாழ்நாள் முழுவதும் நம்மை அதிகாரமும் புகழும் ஊக்குவிக்கும். அதிகாரம் ஒருவருடைய சமூக செல்வாக்கை உருவாக்கும். அதேபோல் புகழ் என்பது ஒருவருடைய தனிப்பட்ட அடையாளத்தை பலப்படுத்த உதவும். ஒருவர் புகழ் பெறுவதால் அதிகாரத்தை மேலும் வலுவடைய வைக்க முடியும். அதேபோல், அதிகாரம் ஒருவருடைய புகழை பரவச் செய்யும். அதிகாரத்தை வைத்து ஒருவர் சமூகத்தில் முக்கிய நிலையைப் பெற முடியும். அதிகாரம் நம்மை பொறுப்புள்ள மனிதராக்கி வெற்றி பெறுவதற்கு முழு அர்ப்பணிப்பையும், ஆர்வத்தையும் கொண்டு செயல்படத் தூண்டும்.