

ஒவ்வொருவருக்கும் வீடு என்பது சொர்க்கம் ஆகும். அவரவர் வீட்டில் எந்த இடத்தில் தூங்குகிறோமோ அந்த இடத்தில் தூங்கினால்தான் பலருக்கு நிம்மதியான தூக்கம் வரும். அதைவிட சௌகரியமான இடமாக இருந்தாலும் புதிய இடத்தில் தூக்கத்தை தொலைத்து விடுவர். அதேபோல் படுக்கையறையில் சில பொருட்கள் இருந்தால் தூக்கத்தில் சிறுசிறு தொந்தரவுகள் ஏற்படும். அந்த வகையில் நிம்மதியான, அமைதியான தூக்கத்திற்கு படுக்கை அறையில் இருந்து பரிசீலனை செய்து அகற்ற வேண்டிய பொருட்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.
படுக்கையறையில் நிம்மதியான தூக்கம் கெடாமல் இருக்க தவிர்க்க வேண்டியவை
1. அதிகப்படியான அலங்காரம் பொருட்கள்:
படுக்கையறையை அலங்கரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அழகாக இருக்கும் பல பொருட்களை வாங்கி அடுக்கி வைத்து விடுவோம். இது ஒரு கட்டத்தில் அதிக அலங்காரப் பொருட்கள் கொண்ட ஒழுங்கற்ற படுக்கை அறையாக நமக்கு காட்சியளிக்கும். சில நேரங்களில் கண்களை உறுத்துவதோடு நெரிசலான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.
ஆகவே படுக்கை அறை தூய்மையாகவும், சமச்சீரான தோற்றத்தை வழங்கவும் தேவையற்ற அலங்காரப் பொருட்களை அகற்றிவிட்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் கிடைத்துவிடும்.
2. தூக்கத்தைக் கெடுக்கும் துணிக் குவியல்கள்:
படுக்கை அறையில் இருக்கும் நாற்காலிகள், பெஞ்சுகள், படுக்கையின் மீது அடுக்கி வைக்கப்படாமல் இருக்கும் துணிகள் படுக்கை அறையை உடனடியாக ஒழுங்கற்றதாக காட்டிவிடும். ஆகவே மடித்து வைக்கப்படாமல் இருக்கும் துணிகளை முறையாக சேமிப்பதோடு, தேவைப்படாத துணிகளை அவ்வப்போது அகற்றி விட்டால் படுக்கையறை ஒழுங்காகி தூய்மையாக இருப்பதால் அமைதியான தூக்கம் கிடைத்துவிடும்.
3. பயன்படுத்தாத தளபாடங்கள்:
படுக்கை அறையில் எதற்கும் பயன்படாத நாற்காலிகள், சேமிப்புப் பெட்டிகள், மேசைகள் போன்றவை நெரிசலான உணர்வை ஏற்படுத்தும் என்பதால் அத்தகைய தளபாடங்களை அகற்றிவிட வேண்டும். இதனால் படுக்கையறை விசாலமாக தோன்றி, அமைதியான உணர்வை ஏற்படுத்தி நிம்மதியா தூக்கத்தை வடிவமைக்கும்.
4. தெரியும் கேபிள்கள் மற்றும் சார்ஜர்கள்:
படுக்கையறையில் குழப்பமான தோற்றத்தை சிக்கலான கம்பிகளும், சார்ஜிங் கேபிள்களும் ஏற்படுத்துகின்றன. ஆகவே கேபிள் ஆர்கனைசர்களை பயன்படுத்தினால் படுக்கையறை ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் காட்சி தரும். இதனால் சீரான பார்வை ஏற்பட்டு தடையற்ற தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
5. வேலை தொடர்பான விஷயங்கள்:
தூக்கம் மனதிற்கும், உடலுக்கும் ஓய்வழிக்கும். படுக்கை அறையில் வேலை தொடர்பான காகிதங்கள் மடிக்கணினிகள் அலுவலகப் பொருட்கள் போன்றவற்றை வைக்கும்போது வேலையைப் பற்றியே மனம் சிந்தித்துக் கொண்டு ஓய்வெடுப்பதை கடினமாக்கும். ஆகவே நிம்மதியான தூக்கத்திற்கு வேலை தொடர்பான விஷயங்களை படுக்கையறையை விட்டு வெளியில் வைப்பதே சிறந்தது.
6. உடைந்த மற்றும் பயன்படுத்தப்படாத பொருட்கள்:
மதிப்பு மிக்க அறையாக இருக்கும் படுக்கையறையில் உடைந்த அல்லது பழைய அலங்கார பொருட்கள், சேதமடைந்த தளபாடங்கள், பயன்படுத்தாத பொருட்கள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இதனால் அறை வெளிச்சமாகவும் புத்துணர்ச்சியாகவும் ஒழுங்காகவும் காட்சி தந்து நிம்மதியான தூக்கத்திற்கான சூழலை ஏற்படுத்திவிடும்.
எட்டு மணி நேர தூக்கம் ஒவ்வொரு மனிதரையும் புத்துணர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றிக்காட்டும் அதிசய கருவி என்பதால் நாம் தூங்கும் படுக்கை அறையை ஒழுங்காக பராமரித்து தூங்கும் சூழலை எளிதாக்குங்கள்.
இந்த எளிய படுக்கையறை மாற்றங்களை நீங்கள் பின்பற்றுவதன் மூலம், படுக்கைக்குச் சென்ற சில நிமிடங்களிலேயே தேவையற்ற சிந்தனைகள் இன்றி அமைதியான, ஆழமான உறக்கத்தைப் பெற முடியும். இது உங்கள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியாக்கி, அடுத்த நாள் காலையை அதிக ஆற்றலுடனும் மகிழ்ச்சியுடனும் தொடங்க வழிவகுக்கும்.