ஒரு உறவுக்கு மத்தியில் ஏதோ ஒரு பிளவு ஏற்பட்டால், அதை அப்படியே விட்டு விடக்கூடாது. முடிந்தவரை அந்த உறவை மீண்டும் புதுப்பிப்பதற்கான முயற்சிகளை நாம் எடுத்தாக வேண்டும். ஏனெனில் உறவுகளுக்கு மத்தியில் சண்டை சச்சரவுகளும் பிரச்சனைகளும் ஏற்படுவது சகஜம். இப்படி அனைத்திற்குமே வேண்டாம் என முடிவெடுத்து பிரிந்து சென்றால், நம்முடன் யாருமே இருக்க மாட்டார்கள். எனவே முடிந்தவரை எந்த உறவாக இருந்தாலும், அதில் பிளவு ஏற்பட்டால் மீண்டும் புதுப்பிக்க முயலுங்கள். இந்த பதிவில் பிரிந்த உறவை புதுப்பிப்பதற்கான 7 வழிகள் பற்றி பார்க்கலாம்.
1. நம்பிக்கையை மீட்டெடுங்கள்: ஒரு உறவில் பிரச்சனை என்றால் அவர்களுக்கு மத்தியில் உள்ள நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டது என அர்த்தம். எனவே முடிந்த உறவை மீட்டெடுக்க மீண்டும் உங்களுடைய நம்பிக்கையை அவர்களுக்கு ஏற்படுத்துங்கள். ஒருவேளை அவர்களுக்கும் உங்களுடன் மீண்டும் இணைய விருப்பம் இருக்கலாம். எனவே பிரிந்த உறவை அப்படியே விட்டு விடாமல், முடிந்தவரை தொடர்பு கொண்டு நம்பிக்கையை மீட்டெடுங்கள்.
2. பிரச்சினைகளை ஒன்றாக பேசுங்கள்: உங்களுக்குள் ஏற்பட்ட பிரிவுக்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிந்து இருவரும் பரஸ்பரமாக பேசிக் கொள்ளுங்கள். ஒருவேளை அவற்றுக்கு உங்களால் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை இருந்தால், அதன் சாத்தியக்கூறுகளை விவரித்து உறவை மேம்படுத்தும் முயற்சியில் இறங்குங்கள். உறவுகளுக்குள் ஏற்படும் பெரும்பாலான பிரச்சினைகள் இருவரும் பொறுமையாக பேசிக் கொள்வதால் தீர்ந்துவிடுகிறது.
3. உங்கள் தவறுகளை ஒப்புக் கொள்ளுங்கள்: ஒருவேளை உங்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினைக்கு நீங்கள் தான் காரணம் என்றால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுவிடுங்கள். சிலர் என்னதான் அவர்கள் மீது தவறு இருந்தாலும், கர்வமாக இருப்பதால், உறவுகளுக்குள் பாதிப்பு மேலும் அதிகமாகும். எனவே முடிந்தவரை உறவை பலப்படுத்த மன்னிப்பு கேட்பது தவறில்லை.
4. உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள்: உறவுகளுக்கு மத்தியில் பிரச்சினை என்பது ஒருவரது மனநிலையை முற்றிலும் மோசமாக மாற்றிவிடும். எனவே அத்தகைய குற்ற உணர்விலிருந்து வெளிவந்து முதலில் உங்களை நீங்கள் சரி செய்து கொள்ளுங்கள். தேவையில்லாத குற்ற உணர்வு உறவை மேலும் மோசமாக்கும்.
5. உங்கள் தவறுகளை சரி செய்யுங்கள்: உங்கள் உறவு பிரிந்ததற்கு காரணத்தைக் கண்டறிந்து, அந்த தவறை உடனடியாக சரி செய்ய முயலுங்கள். அல்லது இந்த தவறை நீங்கள் திருத்திக் கொள்வதாக உங்கள் துணையோ, நண்பரோ அல்லது உறவினரிடமோ வெளிப்படையாக சொல்லுங்கள். இது நிச்சயம் உங்களுக்குள் ஒரு பிணைப்பை ஏற்படுத்தும்.
6. உதவி செய்யுங்கள்: உங்களை விட்டு பிரிந்த நபருக்கு ஏதோ ஒரு உதவி தேவை என்றால், உடனடியாக எதைப் பற்றியும் சிந்திக்காமல் போய் உதவுங்கள். இது உங்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வழிசெய்யும்.
7. புது வாழ்க்கையை தொடங்குங்கள்: நீங்கள் மோசமான உறவில் இருக்கும்போது எப்படி நடந்து கொண்டீர்களோ அதிலிருந்து கொஞ்சம் மாற்றி புதிதாக ஏதாவது செய்யுங்கள். புதுப்புது விஷயங்களை மாற்றி செய்யும்போது, அது உறவுக்கு மத்தியில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தி, மீண்டும் ஒரு புதிய தொடக்கத்திற்கு வழிவகுக்கும்.
இப்படி உடைந்த உறவை ஒட்ட வைக்க நீங்கள் ஏதாவது முயற்சி செய்தால் மட்டுமே அது மீண்டும் சேருமே தவிர, ஏதும் செய்யாமல் நீங்களும் திமிராக இருந்தால், எதுவுமே மாறாது. சில காலத்திற்குப் பிறகு அந்த உறவு உங்களை விட்டு முழுமையாக சென்றதும், புலம்பிக் கொண்டிருப்பீர்கள். எனவே இப்போதே களத்தில் இறங்கி உறவை மேம்படுத்தும் செயலில் இறங்குங்கள்.