நம் வீட்டில் இருக்கும் இடத்தின் அளவிற்கு ஏற்ப சிறியதாகவும் பெரியதாகவும் முக்கியமாக அழகாகவும் தோட்டம் அமைப்பது அவசியம். அதற்கான 8 சிறந்த வழிகளைப் பார்ப்போம்.
வேலிகளுக்குப் பெயிண்ட் அடித்தல்: காலநிலை மாற்றத்திலிருந்து தாவரங்களைப் பாதுகாக்க, வேலிகளுக்கு பெயிண்ட் செய்வது மிகமிக அவசியம். குறிப்பாக அடர்ந்த நிறம் தேர்ந்தெடுப்பது நல்லது. தாவரங்களுக்கு மத்தியில் இந்த அடர் நிறங்கள் அழகாகத் தெரியும்.
ஈர வைக்கோல் பயன்படுத்துங்கள்: தொட்டிகளில் ஈர வைக்கோல் பயன்படுத்துவது தொட்டியை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்துக்கொள்ள உதவும். மேலும், சரளை, கூழாங்கற்கள், குண்டு கல் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பி, தொட்டியின் அழகை அதிகரிக்கலாம்.
பறவைகளுக்கான தண்ணீர் தொட்டி: பானை மற்றும் மண்தட்டு இருந்தாலே போதும். மண் பானையை தலைகீழாக வைத்து நடுவில் ஒரு சிறு ஓட்டை போட்டு, மண்தட்டை, சரியாக ஓட்டையின் நடுப்பகுதியில் ஒட்டி, உலர்ந்த பின்னர் தட்டில் தண்ணீர் வைத்தால் வீட்டிலேயே பறவைகளுக்கான தண்ணீர் பானை தயார்.
மண் இடைவெளியை நிரப்புங்கள்: சுவருக்கும் தரைக்கும் கீழ் உள்ள இடைவெளியை சதைப் பற்றுள்ள திடமான சிறுசிறு பூக்களால் நிரப்புங்கள். இந்த சதைப் பற்றுள்ள தாவரங்கள் ஆன்லைனிலேயே வாங்கலாம். இதனால் எங்கும் பசுமையாக இருப்பதுபோல் ஓர் உணர்வு ஏற்படும்.
இரவு சோலார் ஒளி பயன்படுத்துங்கள்: மெழுகுவர்த்தி போன்றவை தாவரங்களுக்கு ஆபத்தானவை. ஆகையால் சோலார் லைட் அல்லது ஸ்பாட் லைட் பயன்படுத்தினால் தோட்டம் இரவில் பொலிவாகவும் அழகாகவும் இருக்கும். மேலும், வெளவால்கள், இரவில் வரும் பூச்சிகளிலிருந்து செடிகளைக் காக்கும்.
மறுசுழற்சி தட்டுகள் மற்றும் பாட்டில்கள்: தேவையற்ற பாட்டில்கள் மற்றும் தட்டுகளைத் தூக்கிப் போடாமல் அதனைப் பெயிண்ட் அடித்து ஓவியங்கள் தீட்டிப் பயன்படுத்தலாம். அதில் சிறு சிறு பூச்செடிகள் வைத்து பராமரித்து வரலாம். செயற்கை உரங்களைத் தவிர்க்கவும்.
வண்ணப்பூக்கள்: தோட்டத்தின் சுவரோரப் பகுதிகளில் ஆங்காங்கே வண்ண வண்ணப் பூக்கள் வைக்கலாம்.
மரச்சாமான்கள் பராமரித்தல்: இறுதியாக நாம் அமைதியாக அமர்ந்து புத்தகம் படிக்க, பாடல்கள் கேட்க, தேநீர் அருந்த ஒரு அழகான சுத்தமான பெஞ்ச் இருக்க வேண்டுமல்லவா? உங்கள் தோட்டத்தில் அழகான இடத்தைத் தேர்ந்தெடுத்து பெஞ்ச் போடவும். அழகான தோட்டத்துடன் அதனை அனுபவிப்பதற்கான சூழலும் அமைந்துவிடும்.