பெரும்பாலானோர் வீடுகளில் பொழுதுபோக்கிற்காகவும், மனநிலையை உற்சாகப்படுத்துவதற்கும் செல்லப்பிராணிகளை வளர்ப்பதுண்டு. சிலருக்கு பறவைகளை வளர்ப்பது பிடிக்கும். சிலருக்கு நாய், பூனை போன்ற விலங்குகளை வளர்ப்பது பிடிக்கும். மீன்களை வளர்ப்பது சிக்கலான செயல் என்றாலும் ஒரு சிலருக்கு அவற்றை வளர்ப்பதும் பிடிக்கும். வீடுகளில் நீண்ட நாட்கள் வளர்க்கக்கூடிய 8 பெஸ்ட் மீன்வகைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாமா.?
கோல்டு பிஷ்:
பெரும்பாலான வீடுகளில் வளர்க்கப்படும், பிரபலமான வீட்டு மீன் வகைகளுள் ஒன்று கோல்டு பிஷ். நன்கு சுத்தமான தண்ணீர், வளருவதற்கு ஏற்ற விலாசமான தொட்டி, சத்தான உணவு போன்ற கவனிப்புகளுடன் வளர்த்து வந்தால் இந்த வகை மீன்கள் 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடும்.
கோய் மீன் (koi fish):
இந்த வகை மீன்கள் பெரும்பாலும் வெளிப்புறத்தில் உள்ள குளங்களில் வைத்து வளர்க்கப்படுன்றன. போதுமான அளவு இடவசதி, நல்ல பராமரிப்பு, சுத்தமான தண்ணீர் மற்றும் உணவுடன், கோய் மீன்களை வீடுகளிலே பெரிய அக்வேரியம் மாதிரி அமைத்து வளர்க்கலாம்.
ஆஸ்கார் மீன்:
ஆஸ்கார் மீன்கள் சிசிலிட் குடும்பத்தைச் சேர்ந்த புத்திசாலி மீன்கள். இவை தன் உரிமையாளரிடம் எளிதாக பழகும், தொடர்பு கொள்ளும் திறன் உடையவை. நன்கு பராமரித்தால் இவ்வகை மீன்கள் 10 முதல் 15 வருடங்கள் வரை உயிர் வாழக் கூடியவை.
ஏன்ஜெல் மீன்கள்:
பெயருக்கேற்ற அழகும், நேர்த்தியான, கவரக்கூடிய வடிவமும் அமைந்துள்ள மீன்கள். சுத்தமான தண்ணீர் மற்றும் நல்ல சத்தான உணவு மட்டும் இருந்தால் ஏன்ஜெல் மீன்கள் 15 வருடங்கள் வரை உயிர்வாழும்.
ப்ளெகோஸ்டோமஸ் மீன்கள் (Plecostomus):
இவ்வகை மீன்கள் ப்ளெகோஸ் (Plecos) என்று அழைக்கப்படுகின்றன. பாசிகளை தங்கள் உணவாக எடுத்துக்கொள்ளும் இம்மீன்களை 10 முதல்15 ஆண்டுகள் வரை முறையான கவனிப்புடன் வளர்க்க முடியும்.
பீட்டா மீன்கள்:
பீட்டா மீன்களை நன்கு சுத்திகரிக்கப்பட்ட பெரிய தொட்டிகளில் வளர்க்க வேண்டும். இவை 5 முதல் 6 ஆண்டுகள் வரை உயிர் வாழ்பவை. இவைகளில் ஒரு சில மீன் வகைகள் மட்டும் அரிதாக 10 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. பீட்டா மீன்கள் தங்கள் அழகிய உடலமைப்பால் பார்க்கும் அனைவரையும் கவரக் கூடிய வகையில் அமைந்திருக்கும். இதன் அகலமான வால் பல வண்ணங்களிலும், வடிவங்களிலும் காணப்படும்.
நியான் டெட்ரா மீன்:
நியான் மீன்கள் அளவில் சிறியவை. பளபளப்பான நீலநிறமும் சிவப்புநிறமும் கலந்த தோற்றத்தில் காணப்படும். நன்னீரில் வாழக்கூடியவை இம்மீன்கள் 10 ஆண்டுகள் வரை உயிர்வாழக்கூடியவை.
கௌரமி மீன்கள்:
கௌரமி மீன்கள் அளவில் சிறியவை. நியான் மீன்களை போல நன்னீரில் வாழக்கூடிய மீன்கள். இவை வளரும் சூழ்நிலையைப் பொறுத்து 10 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை. கௌரமி மீன்கள் வளர்வதற்கு கொஞ்சம் விலாசமான இடம் தேவை. மற்ற மீன்களுடன் இதை வளர்க்கும் போது, 5 மீன்கள் சேர்ந்த ஒரு குழுவாக மட்டுமே வளர்க்க வேண்டும்.