நார்ஸிச மனப்பான்மை கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள 9 வேறுபாடுகள்!

narcissist men and women
narcissist men and women

‘நார்ஸிசம்’ என்பது ஒரு ஆளுமைப் பண்பாகும். தனது சுய தேவைகளுக்காக பிறரை பயன்படுத்திக் கொள்ளுதலும், பிறர் மேல் பச்சாதாபம் காட்டாத மனிதர்களின் இயல்புகளையும் குறிக்கிறது. இந்தப் பதிவில் ஒரு நார்ஸிச ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் பற்றி பார்க்கலாம்.

1. வெளிப்படைத்தன்மை: ஆண்கள் பெரும்பாலும் வெளிப்படையான நார்ஸிசத்தை வெளிப்படுத்துவார்கள். ஆணவம் மிக்கவர்களாகவும் தற்பெருமை கொண்டவர்களாகவும் ஆதிக்கம் செலுத்துபவர்களாகவும் இருப்பார்கள். இவற்றை அப்படியே பொதுவெளியில் வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள். இது அவர்களுடைய உடல் மொழியிலும் தோற்றத்திலும் வெளிப்படும். பெண்கள் ரகசியமாக நார்ஸிசத்தை வெளிப்படுத்துவார்கள். தனது அழகு, வசீகரம் மற்றும் சமூக அந்தஸ்தில் கவனம் செலுத்துவார்கள். இவர்களது நார்ஸிசம் மிகவும் நுட்பமானது. பிறரை மிகவும் தந்திரமாக கையாளுவார்கள். ஆண்கள் அதிகாரத்தின் மூலமும், பெண்கள் உணர்ச்சிகள் மூலமும் பிறரைக் கட்டுப்படுத்துவார்கள்.

2. அங்கீகாரம்: ஆண்கள் தங்களது சாதனைகள் மற்றும் செயல்பாடுகளுக்காக வெளிப்படையான பாராட்டுக்களையும் அங்கீகாரத்தையும் எதிர்பார்ப்பார்கள். பெண்கள் தங்களது வசீகரமான தோற்றம் மற்றும் சமூகத் தொடர்புகள் மூலம் பாராட்டுதலைத் தேடலாம். பிறரது கவனத்தை ஈர்க்க அவர்களது சிறந்த நண்பர்களாக தங்களைக் காட்டிக் கொள்வார்கள்.

3. ஆக்கிரமிப்புத் தன்மை: ஆண்கள் தாம் விரும்பியதை அடைய நேரடியான மோதல் மற்றும் ஆக்கிரமிப்பை கடைப்பிடிப்பார்கள். பெண்கள் தங்கள் இலக்குகளை அடைய பிறரை பற்றிய வதந்திகள் மற்றும் புரளியை கிளப்பி விடுவார்கள்.

4. விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றுதல்: ஆண்கள் தங்களைப் பற்றிய விமர்சனத்திற்கு கோபமாக அல்லது தங்களை தற்காத்துக்கொள்ளும் விதமாக பதில் அளிப்பார்கள். விமர்சனங்கள் தங்கள் ஈகோவை காயப்படுத்தியதாக நினைத்து அவற்றை எதிர்ப்பார்கள். பெண்கள் தங்களை விமர்சிப்பவரை குறைத்து மதிப்பிடுவார்கள்.

5. நடித்தல்: ஆண்கள் தங்களை அதிகாரம், கட்டுப்பாடு மற்றும் வெற்றிக்கு உரியவர்களாக நினைத்து, தாங்கள் சிறப்பான ஆண்கள் என்று கருதுவார்கள். பெண்கள் தங்களது தனிப்பட்ட தேவைகள் மற்றும் சமூக தேவைகளை பிறர் பூர்த்தி செய்வார்கள் என்று எதிர்பார்ப்பார்கள். உறவு, நட்பு வட்டத்தில் தாம் மிகுந்த பாசமும் அன்பும் வைத்திருப்பது போல காட்டிக் கொள்வார்கள்.

6. பச்சாதாபம்: ஆண்கள் பிறர் மேல் பச்சாதாப உணர்வை கட்ட மாட்டார்கள். பிறரை அலட்சியமாக நடத்துவார்கள். தங்களது சொந்த இலக்குகளை அடைய மக்களை கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். பெண்கள் தங்களது இலக்குகளை அடைவதற்கு பிறருடைய உணர்ச்சிகளை மிக நுணுக்கமான, நுட்பமான முறையில் பயன்படுத்திக்கொள்வார்கள். தங்கள் மேல் பச்சாதாபம் ஏற்படுமாறு நடந்து கொள்வார்கள்.

இதையும் படியுங்கள்:
மெட்டபாலிஸ ரேட் உயரவும் ஒபிசிட்டி குறையவும் உதவும் 4 பானங்கள்!
narcissist men and women

7. பெற்றோராக: ஆண்கள் தங்களை பிரதிபலிக்கும் பிம்பமாக தங்கள் பிள்ளைகள் இருக்க வேண்டும். வெற்றி பெற வேண்டும் என்று அவர்களை வற்புறுத்தி அடக்கி ஆள்வார்கள். பெண்கள் தங்கள் பிள்ளைகளை தங்களைப் போலவே அழகாகவும், செல்வாக்கு மிக்கவர்களாக ஆக வேண்டும் என்று அவரது வாழ்க்கையை கட்டுப்படுத்த முயல்வார்கள். தான் ஒரு சிறந்த தாய், நல்ல மனைவி என்பது போல காட்டிக்கொண்டு பிறருடைய பாராட்டுக்களை எதிர்பார்ப்பார்கள்.

8. நட்பும் உறவும்: ஆண்கள் பிறருடன் பழகும்போது அவர்களால் என்ன ஆதாயம், நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே பழகுவார்கள். சுய லாப அடிப்படையில் தங்களுக்கான நெட்வொர்க்களை உருவாக்குவார்கள். பெண்கள் தங்களை பிறர் போற்றுகிறார்களா? புகழ்கிறார்களா மற்றும் தனக்கு அவர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறதா என்று பார்த்து அவர்களது நட்பையும் உறவையும் நாடுவார்கள்.

9. மதிப்பீடு: ஆண்கள் தங்களது திறமைகளை மிகைப்படுத்தி மதிப்பீடு செய்து கொள்வார்கள். பெண்கள் சுய உருவத்தில் கவனம் செலுத்துவார்கள். தாம் மிக அழகாக இருப்பது போன்ற ஒரு பாவணையை ஏற்படுத்தி தனது தோற்றத்தில் அழகு, வசீகரம் வருவது போல மேக்கப் செய்து கொள்வார்கள்.

நார்ஸிசத்தால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிஹேவியரல் தெரப்பி மூலம் கவுன்சிலிங் கொடுத்து அவர்களை மாற்றலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com