ஒருவர் வீட்டுக்கு விருந்துக்குச் செல்லும்போது அவர்களை முகம் சுளிக்க வைக்கும் 9 விஷயங்கள்!

Children's mischief
Children's mischief
Published on

றவினர் அல்லது நண்பர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. 'இது உங்க வீடு மாதிரி' என்று அவர்கள் சொன்னாலும் நாம் அவர்களுக்கு விருந்தினர் என்பதை மறக்கக்கூடாது. நாம் செல்லும் வீட்டினரை முகம் சுளிக்க வைக்கும் ஒன்பது விஷயங்கள் எவை என்பது பற்றி பார்க்கலாம்.

1. தகவல் தெரிவிக்க வேண்டும்: சொல்லாமல் கொள்ளாமல் எந்த வீட்டிற்கும் போகக் கூடாது. வருவதை போன் மூலம் தகவல் தெரிவித்து விட்டுத்தான் செல்ல வேண்டும். அது எவ்வளவு நெருக்கமான உறவினர் அல்லது நண்பராக இருந்தாலும் சரி. அதேபோல, நேரம் கெட்ட நேரத்தில் இரவு வெகு நேரம் கழித்து அல்லது அதிகாலையில் சென்று அவர்கள் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கக் கூடாது.

2. காலணிகள்: ஒருவர் வீட்டுக்குள் நுழையும்போது தாறுமாறாக காலணிகளை கழற்றி விடாமல் பொறுமையாக ஒரு ஓரமாக விட வேண்டும். அவர்கள் காலணி ஸ்டாண்டில் நமது காலணிகளை வைக்கக் கூடாது. சிலர் காலணிகளை கழட்டாமலேயே வீட்டுக்குள் நுழைந்து விடுவார்கள். அது அவர்களுக்கு முகச் சுளிப்பை ஏற்படுத்தும்.

3. தின்பண்டங்கள்: பிறர் வீட்டுக்குச் செல்லும்போது வெறும் கையுடன் போகாமல் அங்கு இருக்கும் குழந்தைகள், பெரியவர்களுக்கு பிடித்த மாதிரி ஏதாவது வாங்கிக் கொண்டு செல்லலாம்.

4. டீயா? காப்பியா?: என்ன சாப்பிடுகிறீர்கள்? டீயா? காப்பியா? என்று கேட்டால் அதில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். 'இல்ல... நான் பால்தான் சாப்பிடுவேன், ஹார்லிக்ஸ் வேணும், கிரீன் டீ வேண்டும்’ என்று அவர்கள் வீட்டில் இல்லாதவற்றைக் கேட்டு அவர்களுக்கு சங்கடத்தை உண்டாக்கக் கூடாது.

5. ஏன் வீணடிக்க வேண்டும்?: அவர்கள் தின்பண்டங்கள், பழங்கள் கொடுத்தால் அது உங்களுக்கு அதிகமாகத் தோன்றினால் இன்னொரு தட்டு கொண்டு வரச் சொல்லி உங்களுக்கு தேவையானதை மட்டும் அந்தத் தட்டில் போட்டு சாப்பிடலாம். மொத்தமாக சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்தால் அதை வேறு யாரும் சாப்பிட முடியாது. குப்பைக்குத்தான் போகும். உணவு பண்டங்களை ஏன் வீணடிக்க வேண்டும்?

6. தேவையில்லாத ஐடியா: வீட்டுக்குள் ஒவ்வொன்றாய் ஆராய்ந்து பார்த்து, 'பூஜை ரூம் ஏன் சின்னதா இருக்கு? ஹால்ல இன்னும் பெரிய சோபா போடலாம். கிச்சன்ல இதை இங்க வைக்கலாம்' என்று தேவையில்லாத ஐடியா கொடுக்கக்கூடாது. அவர்களுடைய வசதி மற்றும் விருப்பத்தின்படிதான் அவர்கள் வீட்டை அமைத்திருக்கிறார்கள் என்பதை மறக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
பிள்ளைகள் முன்பு பெற்றோர்கள் கட்டாயம் செய்யக்கூடாதவை!
Children's mischief

7. அமரக் கூடாது: ஒன் சிட்டர் சோபாக்களில் அமரக்கூடாது. அது அந்த வீட்டினருக்கு உரிய ஸ்பெஷல் ஸோபாவாக இருக்கலாம். அவர்களுடைய பிரைவசியில் நாம் தலையிடக்கூடாது. எனவே, மூன்று பேர் அல்லது நான்கு பேர் அமரக்கூடிய சோபாவில் அமரலாம்.

8. கமெண்ட் அடிக்க வேண்டாம்: அவர்கள் வீட்டில் சாப்பிட நேர்ந்தால், 'இந்த பொரியல் ஏன் இப்படி பண்ணி இருக்கீங்க? நான் வேற மாதிரி பண்ணுவேன்’ என்பது போன்ற அநாகரிகமான கமெண்ட் அடிக்க வேண்டாம். அவர்கள் வீட்டில் அவர்கள் ஸ்டைலில் செய்ததை குறை சொல்லாமல் சாப்பிட வேண்டும். 'வீட்டுக்கு எவ்வளவு வாடகை வருகிறது? வீடு கட்ட எவ்வளவு செலவாச்சு?’ என்பது போன்ற நுணுக்கமான கேள்விகளை துருவி துருவிக் கேட்க வேண்டாம்.

9. சேட்டைகள் கூடாது: குழந்தைகளை உடன் அழைத்துச் சென்றால் அவர்களை அடிக்கடி கண்காணிக்க வேண்டும். சிறிய குழந்தைகள் சோபாவின் மீது ஏறிக் குதிப்பது, அங்கும் இங்கும் ஓடிப் பொருட்களை கலைப்பது, ஃப்ரிட்ஜைத் திறந்து பார்ப்பது, படுக்கையறைக்குள் விளையாடுவது போன்ற அநாகரிகமான செயல்களை செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மொத்தத்தில் ஒருவர் வீட்டுக்குச் சென்று விட்டு கிளம்பும்போது 'அடிக்கடி வாங்க. நீங்க வர்றது எங்க மனசுக்கு சந்தோஷமா இருக்கு‘ என்ற வார்த்தைகளை அவர்கள் சொல்லும்படி நடந்து கொள்ள வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com