நண்பர்கள், உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவதில் தவறில்லை. ஆனால், சில விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் தனக்குத்தானே ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். சில தனிப்பட்ட எல்லைகளை ஒருவர் வகுத்துக்கொள்ள வேண்டும். பிறரிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாத ஒன்பது விஷயங்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. இலக்கு மற்றும் லட்சியங்கள்: ஒருவரது லட்சியம் அவரது வாழ்வில் மிக முக்கியமான பகுதியாகும். அவற்றை ஒருவர் தனக்குள்ளேயே ரகசியமாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம். அப்போதுதான் அதை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். தன்னுடைய இலக்கு அல்லது லட்சியம் பற்றி வெளியே பேசும்போது, அதைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பிறர் சொல்லலாம். இதனால் அதை நிறைவேற்றுவதில் ஆர்வம் குறையக்கூடும்.
2. தனிப்பட்ட நம்பிக்கைகள்: தனிப்பட்ட நம்பிக்கைகள் பிறருக்கு கேலிக்குரியதாக இருக்கலாம். எனவே, அதை பிறரிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. மனதோடு வைத்துக் கொள்ளவும்.
3. கடந்த கால மனக்கசப்புகள்: மனக்கசப்புகள் மற்றும் அவமானங்கள் எல்லோருக்கும் இருக்கும். கடந்த கால நிகழ்வுகளை நினைத்து மனதை வருத்திக்கொள்வது ஆரோக்கியக் கேட்டை உண்டாக்கும். அதைப் பற்றி பிறரிடம் சொல்வதால் யாருக்கும் எந்த நன்மையும் நிகழப் போவதில்லை. எனவே, இதைப் பற்றி வெளியில் சொல்லாமல் விட்டு விட வேண்டும்.
4. நல்ல செயல்கள்: பொதுவாக, தான தர்மம் செய்யும்போது, வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் தர வேண்டும் என்று சொல்வார்கள். அதுபோல பிறருக்கு உண்மையான அக்கறையின்பேரில் உதவி செய்யும்போது அதைப் பற்றி பிறரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தன்னைப் பற்றி பிறர் பெருமையாக நினைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இதைப் பற்றி எல்லாம் பேசக்கூடாது. உண்மையான கருணைக்கு பார்வையாளர்கள் தேவையில்லை.
5. குடும்பப் பிரச்னைகள்: குடும்பப் பிரச்னைகள் சவால்களும் சிக்கல்களும் நிறைந்ததாக இருக்கலாம். இவை ஒருவருடைய தனிப்பட்ட விஷயங்கள். இவற்றைப் பற்றி பிறரிடம் விவாதிப்பது தேவையற்ற ஆலோசனைகள் மற்றும் தலையீடுகளுக்கு வழிவகுக்கும்.
6. பயம்: சிலருக்கு சில விஷயங்கள் குறித்து பயம் இருக்கலாம். அதை வெளியில் சொல்லக் கூடாது. ஏனென்றால், அது ஒருவரை பலவீனப்படுத்தும். பிறர் அதை வைத்து மிரட்டவோ அல்லது கிண்டல் கேலி செய்து மனதை காயப்படுத்தவோ கூடும். பயம் அதிகமாக இருந்தால் தகுந்த நிபுணரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
7. உடற்பயிற்சி முறைகள்: ஆரோக்கியத்தை பேணுவதற்கு உடற்பயிற்சி செய்வது அவசியம். ஒருவருடைய ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி முறைகள் பிறருக்கு பயனளிக்காது. தனிப்பட்ட முறையில் அர்ப்பணிப்பு உணர்வோடு உடற்பயிற்சி செய்வதைப் பற்றி பிறரிடம் பகிர வேண்டிய அவசியம் இல்லை.
8. நிதி நிலைமை: ஒருவர் செல்வந்தராக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் தன்னுடைய நிதி நிலைமையை பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்வது சிக்கல்களுக்கு வழிவகுக்கின்றன. பணக்காராக இருந்தால், தன் நிதிநிலைமை பற்றி வெளியில் சொல்லும்போது பிறர் பொறாமைப்படக்கூடும். நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கடன் கேட்கலாம். அதேபோல பண வசதி இல்லை என்று தெரிய வரும்போது இழிவாக நடத்தக்கூடும். நிதி நிலைமை என்பது தனிப்பட்ட விஷயம். இது விவேகத்துடன் நிர்வகிக்க வேண்டிய ஒரு விஷயம்.
9. முக்கியமான முடிவுகள்: வாழ்க்கையில் எடுக்கப்போகும் முக்கியமான முடிவுகளைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்வது தேவையில்லாத விஷயம். வாழ்க்கையில் எதுவும் இலகுவாக கிடைப்பதில்லை. ஒவ்வொன்றையும் சிரமப்பட்டுத்தான் பெற்றாக வேண்டும். வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவுகளைப் பற்றி பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.