உறவுகள் மேம்பட ஆறுதலான ஒரு வார்த்தை போதும்!

உறவுகள் மேம்பட ஆறுதலான ஒரு வார்த்தை போதும்!

நாம் பேசும் வார்த்தைகள் பிறரை வாழ்த்துவதாக அமைய வேண்டும். பதறிய உள்ளங்களை சாந்தப்படுத்த வேண்டும். அன்பான வார்த்தைகள் தன்னம்பிக்கையைத்  தரும். கனிவான வார்த்தைகள் உயிரைக் காக்கும். கருணையான வார்த்தைகள் துன்பத்தை தவிர்க்கும். நகைச்சுவை வார்த்தைகள் மன இறுக்கத்தைப் போக்கும்.

இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாய் ஒரு நாள் மாஸ்கோ நகர வீதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அவருக்கு எதிரே வந்தார் ஒரு பிச்சைக்காரர். அவர், “ஐயா, ஏதாவது உதவி செய்யுங்கள். உணவு சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டது'' என்று கூறினார்.

ஆனால், டால்ஸ்டாயிடம் அப்போது சோதனையாக ஒரு காசு கூட இல்லை. உடனே அவரைப் பார்த்து மிகவும் கனிவான குரலில், “அன்புச் சகோதரனே, உனக்கு உதவி செய்வதற்கு என்னிடம் பணம் எதுவும் இப்போது இல்லையே” என்றார்.

அவரது வார்த்தையைக் கேட்ட அந்தப் பிச்சைக்காரர் அவர் மேல் கோபம் கொள்ளவும் இல்லை. தன் நிலையை எண்ணி நொந்து கொள்ளவும் இல்லை. அதற்கு மாறாக முக மலர்ச்சியோடு, “நன்றி ஐயா, தாங்கள் போய் வாருங்கள்” என்றார்.

அவரது முகப் பூரிப்பைப் பார்த்த டால்ஸ்டாய், "நான் உங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால், நீங்கள் மகிழ்ச்சியோடு எனக்கு நன்றி செலுத்துகிறீர்களே? எதற்காக?” என்று அவரிடம் வியப்பாகக் கேட்டார்.

“ஐயா, இதுநாள் வரையில் என்னை எல்லோரும் வெறும் பிச்சைக்காரனாக நினைத்து விரட்டியே இருக்கிறார்கள். நீங்கள் ஒருவர்தான் என்னை பாசத்தோடு, ‘சகோதரனே’ என்று சொல்லி அன்போடு அழைத்து பரிவாகப் பேசி இருக்கிறீர்கள். அந்த அன்பு ஒன்றே போதும். நீங்கள் என் மீது காட்டிய இரக்கம் ஒன்றே போதும். வேறு எந்த உதவிகளும் எனக்குத் தேவையில்லை ஐயா” என்று மனம் உருகி சொன்னார்.

வார்த்தைகளை உபயோகிக்கும்போது மிகவும் யோசித்துப் பேசுவது நல்லது. அன்பான வார்த்தைகள் உறவின் இடைவெளியைக் குறைக்கின்றன. உறவுகளிடையே நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com