ஒருவரின் வாழ்வில் முக்கியப் பங்கு வகிப்பது அவருடைய கடந்த காலங்கள். கடந்த கால நினைவுகளை அசை போடாமல் யாராலும் இருக்க முடியாது. சிலருக்கு கசப்பான நிகழ்வுகள் கடந்த காலத்தில் நிகழ்ந்திருக்கலாம். சிலருடைய வாழ்க்கை இனிப்பானதாக இருந்திருக்கலாம். ரோஸி ரெட்ராஸ்பெக் ஷன் (Rosy Retrospection) என்பது கடந்த கால நிகழ்வுகளை நேர்மறையாக நினைத்துப் பார்க்கும் நிகழ்வுக்குப் பெயர். இதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
குதூகலமான குழந்தைப் பருவ வாழ்க்கை பற்றிய நினைவுகள் எளிதில் மறக்க முடியாமல் இருக்கும். அன்பான பெற்றோர், பாசத்தை அள்ளிக் கொட்டும் தாத்தா பாட்டி, உற்றார், உறவினர் மற்றும் சிறு வயது நண்பர்கள் எல்லோரும் நினைவில் வந்து போவார்கள். சிறு குழந்தையாய் இருக்கும்போது செல்லமும் அதிகமாக இருக்கும். தூக்கி வைத்து கொஞ்சி இருப்பார்கள். கேட்டதெல்லாம் வாங்கித் தந்திருப்பார்கள். இனிமையான குழந்தைப் பருவ நினைவுகளை அசைபோடுவது ஒரு ஜாலியான விஷயமாக நிறைய பேருக்கு இருக்கும்.
ஆனால், சிலரின் குழந்தைப் பருவம் விதிவிலக்காக மோசமானதாக இருந்திருக்கலாம். நல்ல பெற்றோர் இல்லாமல் மாற்றான் தாய் அல்லது உறவினர் வளர்ப்பில் வளர்ந்த குழந்தைகளின் குழந்தைப் பருவம் கசப்பானதாக இருக்கலாம். சரியான உணவு கூட கிடைக்காமல் அடிப்படை அன்புக்குக் கூட ஏங்கி இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய 30 வயதிற்கு மேல் சிறு வயது நினைவுகளை ஞாபகப்படுத்திப் பார்த்தால் அதில் 80 சதவீதத்திற்கும் மேல் கசப்பான நினைவுகள் நிறைந்திருக்கும். அவற்றை அடிக்கடி நினைத்துப் பார்க்கும்போது தற்போதைய வாழ்க்கையையும் அது பாதிக்கும். ஏக்கமும் விரத்தியும் குடிகொண்டு சில இளைஞர்கள் பாதை மாறிப்போய் தீயவர்களாகவே மாறி விடுகிறார்கள்.
வாழ்வின் போக்கை மாற்றும் ரோஸி ரெட்ராஸ்பெக் ஷன்: ரெட்ராஸ்பெக் ஷன் என்பது கடந்த காலத்தை நினைத்துப் பார்ப்பது. ரோஸி என்பது இனிய நினைவுகளை தருவது. ஒருவர் தனது குழந்தைப் பருவத்தில் அல்லது இளமைப் பருவத்தில் அல்லது நடுத்தர வயதில் மிகுந்த துன்பங்களை அனுபவித்திருந்தால் கூட ரோஸி ரெட்ராஸ்பெக் ஷன் என்கிற இந்த உத்தியை பயன்படுத்தி கடந்த காலத்தில் அவர்கள் அனுபவித்த மிக இனிமையான காலத்தை மட்டும் நினைவு கூறுவது மிகுந்த பலன் தரும். அந்த உத்தியை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
1. நல்ல காலங்களை நினைவு கூர்தல்: கடந்த கால அனுபவங்களை நினைவுபடுத்தும்போது, கெட்டவற்றை விட நல்ல பகுதிகளை அடிக்கடி நினைவுபடுத்திப் பார்த்தல்.
2. நேர்மறைகளை முன்னிலைப்படுத்துதல்: வேடிக்கையான தருணங்கள் அல்லது சாதனைகள் போன்ற கடந்தகால நிகழ்வுகளின் நேர்மறையான அம்சங்களில் மனதை கவனம் செலுத்த வைத்தல்.
3. எதிர்மறைகளை வடிகட்டுதல்: சவால்கள் அல்லது சிரமங்கள் போன்ற கடந்த கால அனுபவங்களின் எதிர்மறை அம்சங்களை நினைவில் இருந்து அகற்றிவிட்டு அல்லது குறைவாக நினைக்க வேண்டும்.
4. உணர்ச்சிப் பூர்வமான நிகழ்வுகள்: கடந்த காலத்தில் நடந்த மகிழ்ச்சியூட்டும் உணர்ச்சி பூர்வமான நிகழ்வுகளை ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும். அது மனதிற்கு மிகுந்த தெம்பையும் ஆறுதலையும் ஒருவிதமான சக்தியையும் அளிக்கும்.
5. ஏக்கம்: கடந்த கால நினைவுகள் எப்போதும் ஏக்கத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. சிறு வயதில் ஆசைப்பட்ட பொருள் கிடைக்காமல் போய் இருக்கலாம் அல்லது நினைத்தது நடக்காமல் போய் இருக்கலாம். பிரியமானவர்கள் அன்பு கிடைக்காமல் போயிருக்கலாம். அந்த ஏக்கங்களை நேர்மறையாக நினைத்துப் பார்ப்பது நிகழ்காலத்தில் நன்மை தரும். அதைப் பற்றி விரத்தியுடனோ வேதனையுடனோ நினைக்காமல் ஆனந்தமாக நினைக்க வேண்டும். அப்படி செய்வதால் என்ன பலன் கிடைக்கும்? சிறுவயதில் ஆசைப்பட்ட அத்தனை விஷயங்களும் விரைவில் அல்லது வருங்காலத்தில் கிடைத்தே தீரும்.
6. தேர்ந்தெடுக்கப்பட்ட நினைவகம்: நமது தற்போதைய மனநிலை அல்லது மனநிலைக்கு பொருந்தக்கூடிய கடந்த கால பகுதிகளைத் தேர்ந்தெடுத்து நினைவில் கொள்கிறோம்.
7. ஒப்பீட்டு மதிப்பீடு: கடந்த கால அனுபவங்களை நமது தற்போதைய சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது, ரோஜா நிற கண்ணாடிகள் மூலம் கடந்த காலத்தை நாம் பார்க்க முடியும். அதாவது உண்மையில் அது மோசமான சம்பவங்களை கூட நமது மனக்கண்ணில் நல்ல விதமாக நினைத்துப் பார்க்க வேண்டும். அது தற்போதைய மனநிலைக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து நமக்கு ஒரு உற்சாகத்தையும் அளிக்கும்.
8. முடிவெடுப்பதற்கு உதவும்: கடந்த கால அனுபவங்களை வாழ்க்கைப் பாடங்களாக எடுத்துக்கொண்டு இனிவரும் காலங்களிலும் நிகழ்காலத்திலும் அவற்றை நமது வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக கடந்த காலத்தில் பணம் கொடுத்து அல்லது வேறு ஏதாவது விஷயத்தில் ஏமாந்திருந்தால் யாராலோ நாம் காயப்பட்டு இருந்தால் மறுபடியும் அந்த நிகழ்வுகள் நடக்காதவாறு நாம் மாற்றிக் கொள்ள முடியும். அந்த நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும்போது அவற்றை நாம் நேர்மறையாக நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் உண்மையில் ஏமாறவில்லை என்று கற்பனை செய்து கொண்டு மனக்கண்ணில் பார்த்தால், வருங்காலத்தில் அது போல நடக்காமல் இருக்கும். சிக்கலான சூழ்நிலைகளில் நல்ல முடிவு எடுப்பதற்கு கடந்த கால அனுபவங்கள் பயனுள்ளதாக இருக்கும்.
மொத்தத்தில் ரோஸி ரெட்ராஸ்பெக் ஷன் உத்தியின் மூலம் நமது கடந்த காலம் சரியானதாக இல்லாவிட்டால் கூட நேர்மறையாக சித்தரிக்கும் போக்கை நமது மனதிற்கு கற்பிக்க முடியும்.