
எளிமையான வாழ்க்கை வெற்றியையும் மனநிம்மதியையும் தரும் என்பது மகாத்மாவின் வாழ்க்கை நமக்குக் கற்றுத்தரும் பாடம். நமது தேசப்பிதா மகாத்மா ஒரு கதர்வேட்டி கதர் துண்டு என எளிமையான உடையில் வாழ்ந்தார்.
காந்திஜி ஏன் இப்படி எளிமையான உடையை உடுத்தத் தொடங்கினார் என்பது பலருக்குத் தெரியாத தகவல். அதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.
இந்தியநாட்டின் விடுதலைக்காக காந்திஜி பலமுறை நாடு முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். இதில் தமிழ்நாட்டிற்கும் பலமுறை விஜயம் செய்திருக்கிறார். ஒருமுறை காரைக்குடியிலிருந்து மதுரைக்கு பயணித்துக் கொண்டிருந்தார். அவருடைய கார் திருப்பத்தூர் என்ற இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது அவருடைய பார்வையில் ஒரு காட்சி தென்பட்டது.
கடும் வெயிலில் சில தொழிலாளிகள் பாறைகளை வெட்டி வெட்டி அவற்றை தலையில் சுமந்து சென்று கொண்டிருந்தனர். அந்த தொழிலாளர்களின் உடல் முழுவதும் வியர்வை ஆறாக ஓடிய வண்ணம் இருந்தது. காந்தி உடனே தனது காரை நிறுத்தும்படி சொன்னார். காரிலிருந்து இறங்கி அந்த தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த இடத்திற்குச் சென்றார்.
அவர்கள் கட்டியிருந்த வேட்டி அழுக்கு படிந்து பழுப்பு நிறத்தில் காட்சியளித்தது. அவர்களின் உடலிலிருந்து வேர்வையின் காரணமாக துர்நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.
ஒரு தொழிலாளியை அழைத்து அவரிடம் காந்தி அன்பாய் பேசினார்.
“இப்படி அழுக்கு படிந்த உடையோடு பணி செய்கிறீர்களே. இந்த துணியை தினமும் துவைத்துக் கட்டிக்கொள்ளக் கூடாதா? சுத்தமாய் இருக்கக் கூடாதா ?”
“அய்யா. எங்ககிட்டே இருக்கிறதே ஒரே ஒரு வேட்டிதான். அதை எப்படி தினமும் துவைச்சி கட்டிக்க முடியும். அதனால்தான்யா இப்படி இருக்கோம்”
இந்தியாவில் ஏழைகள் படும் துயரத்தை அவர் அன்று நேரில் கண்டு வேதனை அடைந்தார். மதுரையை நோக்கி பயணம் தொடர்ந்தது. வழியெங்கும் கஷ்டப்படும் ஏழைகளின் முகம் அவர் நினைவில் நிழலாடியது. மதுரையை அடைந்து அன்று இரவு முழுக்க அவர் சிந்தித்தார்.
காலையில் எழுந்தார். தனது எட்டு முழ வேட்டியில் மூன்றரை முழத்தைக் கிழித்து இடுப்பில் சுற்றிக் கொண்டார். மீதமிருந்ததை உடலைச் சுற்றி போர்த்திக் கொண்டார்.
அன்று முதல் இந்த எளிய உடை மகாத்மாவின் அடையாளம் ஆனது. இதே உடையோடு அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டார். “இந்திய ஏழையின் உடையே எனது உடை” என்று கூட்டத்தில் தெரிவித்தார்.
மகாத்மாவின் எளிமையான வலிமையான நேர்மையான வாழ்க்கையை நாமும் பின்பற்றி வாழ்வோம்.