நண்பர்களால் ஆன உலகம்!

நண்பர்களால் ஆன உலகம்!
Published on

ள்ளி ஆசிரியையான காயத்ரிக்கு பெரும் அதிர்ச்சி. ஸ்டாஃப் ரூமில் இருக்கும்போது அங்கு வந்த ஒன்பதாம் வகுப்பு மாணவியான வர்னிகாடம் அதே வகுப்பில் படிக்கும் ஐஸ்வர்யாவை அழைத்து வரும்படி சொல்ல, வர்னிகா அப்படி யாரும் தனக்குத் தெரியாது என்று பதில் அளித்திருக்கிறாள். காயத்ரி ஐஸ்வர்யாவின் அடையாளங்களைச் சொல்லியும் வர்னிகாவுக்கு அவளைத் தெரியவே இல்லை. ‘உன் க்ளாஸ்லதானே அவளும் படிக்கறா, எப்படி உனக்குத் தெரியலைன்னு சொல்றே?” என்று கேட்டதற்கு “என் ப்ரென்ட்ஸ் க்ரூப்பில் அவ இல்லை, அதோட வகுப்பில் இருக்கும் அத்தனை பேரையும் ஞாபகம் வைத்திருக்க வேண்டுமா என்ன?” என்று நறுக்கென்று கேட்டு விட்டுப் போயிருக்கிறாள். “அடக் கொடுமையே இந்தக் காலத்துப் பசங்களை என்ன சொல்ல” என்று வருத்தப்பட மட்டும்தான் காயத்ரியால் முடிந்தது.

‘தனி மரம் தோப்பாகாது’ என்பது பழமொழி. ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குழந்தை என்கிற காலகட்டத்தில் அவர்கள் எல்லோரும் ராஜா, ராணி, தேவதை, தெய்வக் குழந்தைகளாகவே வளர்க்கப்படுகிறார்கள். எதுவொன்றும் கேட்கும் முன் கிடைத்து விடுவதால் அக்குழந்தைகளுக்குப் பொருள்களின் மதிப்பு தெரிவதில்லை. மனிதர்களின் மதிப்பும் தெரிவதில்லை. அன்பு, நட்பு, காதல், பாசம் என்பவை எல்லாம் மெள்ள காணாமல் போகும் சூழல் நிலவுகிறது. கற்றுக் கொடுத்தால்தானே நல்லுணர்வுகள் குழந்தைகளுக்குத் தெரிய வரும்? தேங்க்ஸ், சாரி என்பவை சின்ன வார்த்தைகள்தான், ஆனால் அதில் பொதிந்துள்ள உணர்வுகள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. சின்ன வயதில் அதிகச் செல்லம் கொடுத்து, தாங்கித் தாங்கி அவர்கள் சொல் பேச்செல்லாம் கேட்பதால் வெளி உலகிலும் அவர்கள் அதையே எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் கண்டித்தால் பிடிப்பதில்லை, நண்பர்கள் தவறுகளைச் சுட்டிக் காட்டினால் ஏற்றுக்கொள்வதில்லை. கண்கள் கட்டப்பட்ட‌ குதிரைகள் போல அவர்கள் ஒரே திசையில் செலுத்தப்படுகிறார்கள். பாறையோ பெரும் பள்ளமோ எதிர்பட்டால் அதோ கதிதான். 

உங்கள் மகன் அல்லது மகள் எல்லோருடனும் இயல்பாக அன்பாக பழகினால் அருமையான நட்புகள் கிடைக்கும். செல்லும் வழியெங்கிலும் பூக்களை இறைத்தபடி அவர்களின் வாழ்க்கைப் பயணம் அமையும்.  உங்கள் குழந்தைகள் தங்கள் நட்புகளைப் போற்றி பாதுகாக்க‌ நீங்களும் கூட உதவலாமே!

பேராசிரியர் சாலமன் பாப்பையா ஒரு திரைப்படத்தில் ‘வாங்க பழகிக்கலாம்’ என்று சொல்வார். அதைப் போல உங்கள் குழந்தைகளின் நெருக்கமான நண்பர்கள் யார் என்று  தெரிந்துகொண்டு அவர்களுடன் நீங்களும் அவ்வப்போது பேசிப்பழகுங்கள்.  பள்ளியில் அல்லது வீட்டில் அவர்களைச் சந்தித்து அவர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள். நண்பர்களின் குண நலன்களை அப்படியே சில குழந்தைகள் பின் பற்றுவார்கள். ஆக்கபூர்வமாக நட்பு கிடைத்தால் மகிழ்ச்சி. தீய பழக்கங்களுக்கு இந்த வயதிலேயே அடிமையாகி விட்டால் மீட்பது கடினம். எனவே நம் குழந்தைகளின் நண்பர்களை தோழிகளைத் தெரிந்து வைத்துக் கொண்டிருப்பது நல்லது.  அம்மாவானவள் தன் தோழர்களுடன் நட்பாக‌ இருப்பதை பெரும்பாலான குழந்தைகள் விரும்புகிறார்கள். ஆனால் நண்பர்களிடம் உங்கள் குழந்தைகளைப் பற்றி போட்டு வாங்குவது, உங்களின் ஒற்றர்களாக செயல்படச் செய்வது போன்றவற்றைச் செய்யக் கூடாது. எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவுக்குப் பழகினால் போதும்.

பிறந்த தின வாழ்த்து, நல்ல மார்க் எடுக்கும்போது மனம் திறந்து பாராட்டுதல் போன்றவற்றைத் தவறாமல் அவர்களாகவே செய்ய வேண்டும். படிப்பில் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை, பழி வாங்குதல் போன்ற தீய குணங்கள் அவர்களை அண்டாமல் நாம்தான் நீதிக் கதைகளை இளம் வயதிலேயே சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். முயல், ஆமை கதையில் முயல் ஏன் பின் தங்கிவிட்டது ஓவர் கான்பிடன்ஸ் மட்டுமில்லை, ‘முயலாமை என்பதும் கூடத்தான் என்று வார்த்தை ஜாலத்தில் குட்டிக் குட்டிக் கதைகளைச் சொல்லி வளர்த்தால் அவர்கள் மனதளவில் மிகவும் பலசாலியாக வளர்வார்கள்.

‘ஆர்ட் ஆஃப் கிவிங்’ என்பதும் சந்தோஷத்திலேயே பெரிய சந்தோஷம் அடுத்தவங்களை “சந்தோஷப்படுத்திப் பார்க்கறது”தான்.  நண்பர்களின் விசேஷங்களுக்கு சின்ன சின்ன பரிசுகளை அளிக்கச் சொல்ல வேண்டும். அதே போல் தங்களிடம் இருப்பதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் பழக்க வேண்டும். முன்பு காக்காய் கடி கடித்துக் கூட தோழிகளுக்கு சாக்லேட் தரும் நட்புகளைப் பார்த்திருக்கிறோம். இந்தக் காலத்தில் அதெல்லாம் தேவையில்லை, ஆனால்  கஞ்சத்தனமாக இருக்கும் குழந்தைகளிடம் யாரும் நெருங்க மாட்டார்கள்.

சோஷியல் நெட்வொர்க் பயன்படுத்தாத டீன் ஏஜ் பிள்ளைகளைக் காண்பது அரிது. அவர்களிடம் இதமாகப் பேசி அதன் ப்ளஸ் மற்றும் மைனஸ்களை, ஆபத்துகளைத் தெளிவாக உணர்த்த வேண்டும். நிஜ உலகம் வேறு; அது ஓர் ஆபத்தான உலகம் என்பதை ஆதாரங்களுடன் தெரியப்படுத்த வேண்டும். இதனால் பாதிப் படைந்தவர்கள் பற்றி செய்தித்தாள்களில் படிக்கும் விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள இலேசான பயம் இருந்தாலே போதும், அவர்கள் முன் ஜாக்கிரதையுடன் செயல்படுவார்கள்.

நட்பு என்பது சிறு பிராயத்தில் தொடங்கி, பதின்ம வயதில் வளர்ந்து, பின் வாழ்நாள் முழுக்க செழித்துத் தொடர்ந்துவரும் ஓர்  ஆரோக்கியமான உறவு. இந்தத் தொடர் சங்கிலி எங்கேயும் விட்டுப் போய் விடாமல் அழகான பந்தமாக அமைய நாமும் பொறுப்புதானே? நண்பர்களிடம் காட்டும் பரிவையும் அக்கறையும் சமுதாயத்தின் மீதும், ஒவ்வொரு ஜீவராசியின் மீதும் இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் மீதும், ஒரு குழந்தை காட்ட கற்றுக்கொண்டால் இதை விட பெரிய விஷயம் எதுவாக இருக்க முடியும்? ஒரு தாய் என்ற வகையில் குழந்தையை நல்லவிதமாக வளர்த்திருக்கிறோம் என்ற பெருமை முழுக்க முழுக்க நமக்குத்தானே?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com