
மழை வரும் அறிகுறியுடன் குளிர்க்காற்று வேகமாக வீச, மழையை ரசிக்கலாம் என பால்கனியில் அமர்ந்தோம். அப்போது லேசாக பெய்த மழை திடீரென வலுக்க, மழையுடன் கூடவே வெண்ணிற முத்துக்களாக ஆலங்கட்டிகள் எங்கள் மாடி எங்கும் விழுந்தது. அந்த மழை இடி சப்தத்துடன் அங்கு நிகழ்த்திய ஒரு நாட்டியத்தை ரசித்து மகிழ்ந்தோம். அதோடு, அந்த ஆலங்கட்டிகளை கைகளில் எடுத்து விளையாடினோம். கைகளில் எடுத்த சிறிது நேரத்தில் அந்த ஆலங்கட்டிகள் கரைந்தது நீராய் வழிந்தது.
இந்த ஆலங்கட்டிக் கற்களின் நீர் பலவிதமான சருமப் பிரச்னைகளை நீக்கும் என்று எனது பாட்டி சொல்லக் கேட்டிருக்கேன். மேலும், இந்த ஆலங்கட்டி நீரை சேமித்து வைத்து தேள் கடி விஷம், வெள்ளை நோய் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம் என்றம் கேள்விப்பட்டுள்ளேன். சிலர் மழை நீரில் நனைவது ஆபத்தானது என அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால், இந்த தூய மழை நீர் உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு பருகவும் ஏற்றதாகவே உள்ளது. பொதுவாக, இடியுடன் பெய்யும் மழையில் ஆலங்கட்டிகளைப் பார்க்கலாம். இடி மேகங்களில் உருவாகி, மிக வெப்பமாக உள்ள மேக மூட்டம் சட்டென்று குளிர்ந்து பனிக்கட்டிகளாக மாறி வீழ்வதுதான் ஆலங்கட்டி மழை எனப்படுகிறது. ஆலம் என்றால் பனி எனப் பொருள்.
உலகில் இந்தியாவைத் தவிர, சைனா, ரஷ்யா, வடக்கு இத்தாலி, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஆலங்கட்டி மழை அதிகளவில் பொழிகிறது. சிறு சிறு முத்துக்களாக விழும்போது ரசிக்க வைக்கும் வெண்நிறப்பனிக் கட்டிகள், பெரும் பனிக்கற்களாகவோ ஒழுங்கற்ற உருண்டைகளாகவோ விழும்போது பயிர் தாவரங்களுக்கும் மனிதர்களின் உடைமைகளுக்கும் பெரும் சேதத்தை விளைவிக்கிறது. இதைத் தவிர்க்க ஒவ்வொரு நாடுகளிலும் வானிலை ஆராய்ச்சி மையங்கள் தகுந்த முன்னெச்சரிக்கைகளையும் அறிவிக்கின்றன.
இதுவரை ஆலங்கட்டி மழையைக் குறித்து அறிந்தோம். இந்த ஆலங்கட்டி மழைக்கும் நமது வாழ்வுக்கும் கூட ஒரு சம்பந்தம் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? உஷ்ண மேகம் எனும் முன்கோபம் வேகமாக வரும்போது, இடி இடிப்பது போல் தேவையற்ற சில வார்த்தைகளை விட்டு விடுகிறோம். அவை சிறிது நேரம் ஆலங்கட்டிகளாக நம் மனதில் நின்று வருந்தச் செய்யும். மேகம் கலைந்ததும் காணாமல் போகும் மழை போல், கோபமும் தீர்ந்த பின்புதான் நமது அவசர புத்தியால் பேசியதை நினைத்து வருந்துவோம். இந்த ஆலங்கட்டிகள், ‘இதுபோன்ற வார்த்தைகளை இனி பேசாதே’ என்று எச்சரிப்பதைத்தான் நான் உணர்ந்தேன். சிறு சிறு ஆலங்கட்டிகளை ரசிக்கலாம்; ஆனால் சேதத்தைத் தரும் பெரும் ஆலங்கட்டிகளை ரசிக்க முடியுமா? அதைப்போல்தான் நமது முன்கோபப் பேச்சும். இனி, சேதம் தரும் ஆலங்கட்டிகளாக வார்த்தைகளைப் பொழியாமல், இதம் தரும் சிறு பனிக்கட்டி தூறலாக இருப்போம்.