தொகுப்பு: ஜி.எஸ்.எஸ்.
தத்தெடுத்த பெற்றோருக்கென்று தனிப்பட்ட பிரச்னைகள் என்னவாக இருக்கும்?
* குழந்தைகளைத் தத்தெடுக்கும்போது இருதரப்பிலுமே சில வகைப் பிரச்னைகள் உண்டாகலாம். பெற்றோரில் ஒருவர் முழுமனதுடனும் மற்றொருவர் அரைகுறை மனதுடனும் தத்தெடுத்திருந்தால் அது பிரச்னைக்கு வழிவகுக்கும். எனவே, கணவன் - மனைவி இருவருக்கும் முழுமையான பக்குவம் வந்த பிறகு தத்தெடுத்துக் கொள்வதுதான் நல்லது.
* குழந்தைக்கு மூன்று மாதங்கள் நிரம்பிய பிறகு தத்தெடுத்துக் கொள்ளலாம் என்கிறது தற்போதைய இந்திய சட்டம். சற்றே வளர்ந்த குழந்தைகளை (அதாவது நான்கு வயதுக்கு மேற்பட்ட என்று வைத்துக் கொள்ளலாம்) தத்தெடுக்கும்போது அந்தக் குழந்தையின் மனதில் ஒருவித பயம் தோன்ற வாய்ப்பு உண்டு. வளர்ந்த (சிறுவர் காப்பகம், அனாதைகள் விடுதி போன்றவை) சூழலில் இருந்து மாற்றம் கிடைக்கும்போது அந்தக் குழந்தைகள் தங்களை சமாளித்துக் கொள்ள கொஞ்ச கால அவகாசம் தேவை. அதுவரை பொறுமையாகக் காத்திருங்கள். குழந்தையின் இயல்பினைப் புரிந்துகொள்ளுங்கள்.
* தங்கள் ஒரே குழந்தையை ஏதோ விபத்தில் பறிகொடுத்துத் தவிக்கும் பெற்றோர்கள் அந்த ‘வெற்றிடத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக’ உடனே ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். இது ஒரு வகையான சுயநலம் என்றும் கொள்ளலாம். இது மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தை, இறந்த தனது குழந்தை போலவே நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்க்கும்போது சிக்கல்கள் எழலாம். எனவே, முதலில் உங்கள் சோகத்திலிருந்து வெளியே வாருங்கள். அதற்குப் பிறகு தத்தெடுத்துக் கொள்ளலாமா என்பதைப் பற்றி யோசியுங்கள்”.
தத்தெடுத்தோம் என்பதை குழந்தையிடம் எப்போது சொல்லலாம்?
* ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ திரைப்படத்தில் எட்டு வயது நிரம்பிய தன் மகளை கடற்கரைக்கு அழைத்துச் சென்று “நீ எங்களுக்குப் பிறந்தவள் இல்லை” என்று அந்த திரைப்படத்தில் வரும் தந்தை மாதிரி சொல்லாதீர்கள். மிகவும் இளம் வயதிலேயே இந்த உண்மையைக் கூறிவிட வேண்டும்.
* பாட்டு, கதை போன்றவற்றின் மூலம் மிகச் சிறு வயதிலேயே உண்மையை வெளிப்படுத்தலாம். உதாரணத்துக்கு, ஏதாவது பறவையைக் காட்டும்போது ‘இந்த மாதிரி ஒரு பறவைதான் உன்னைக் கொண்டு வந்து என்னிடம் போட்டது’ என்று கூறலாம்.
இப்படித் தொடங்கி, கதைகள் மற்றும் நிகழ்வுகள் வாயிலாக மெதுவாக, படிப்படியாக உணர்த்த வேண்டும். குழந்தை கேள்விகள் கேட்கும் நேரம் வரும். அப்போது பொறுமையாக உண்மையை வெளிபடுத்திவிடலாம்.
உண்மையை வெளிப்படுத்தினால் குழந்தையின் மனம் வருத்தப்படுமோ என்ற தயக்கமும், பயமும் பெற்றோருக்கு இருப்பது இயல்புதான். அதற்குப் பிறகு தங்களிடம் குழந்தைக்குள்ள நெருக்கம் குறைந்து விடுமோ என்ற கவலை இருக்கும்தான். முக்கியமாக “என்னைப் பெற்ற அம்மா யார்?” என்ற ஆராய்ச்சியில் அவள் இறங்கிவிட்டால் விளைவுகள் எப்படி இருக்கும் என்கிற பயம் ஏற்படும். இப்படியே தயக்கமும், கவலையும், பயமும் கொண்டு வாழ்ந்துகொண்டே இருந்தால், தாய் – சேய் உறவை எவ்வாறு உணர்வது? கொண்டாடுவது? எனவே மனதை திடப்படுத்திக் கொண்டு, கால தாமதமின்றி தத்தெடுத்தத் தகவலை பகிர்ந்து விடுவது உத்தமம்.