நாய் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகளும் பிரச்னைகளும்!

Pet
Doghttps://www.mundoperros.es

ந்த ஒரு செயலிலும் நல்லது இருப்பது போலவே, சில சரிவராத விஷயங்களும் இருக்கத்தான் செய்யும். நாய் வளர்ப்பதிலும் அப்படித்தான். அதனைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இன்று அதிகமானவர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதை பார்க்கலாம். முன்பெல்லாம் சாதாரண நாட்டு நாய்களைத்தான் கிராமங்களில் வளர்ப்பார்கள். அதனால் பெரிய சிக்கல் எதுவும் ஏற்படாது. அதன் வேலையை அதுவே முடித்துக்கொள்ளும். மற்றவர்களுக்கு வேலை வைக்காது. இன்னும் சொல்லப்போனால் நாம் போடும் சாப்பாட்டை சாப்பிட்டு விட்டு நமக்கு நல்ல பாதுகாப்பாக இருக்கும்.  அதற்கான சிறப்பு சாப்பாடு எல்லாம் யாரும் செய்து போடுவதில்லை. வீட்டில் மீந்ததைத்தான் போடுவோம். அதுவே அதற்கு போதுமானதாக இருக்கும். வெளியில் எங்கு சென்றாலும் காவலனாக ஓடிவரும். வேலி ஓரங்களில் பாம்பு மற்ற பூச்சிகள் வித்தியாசமாக ஏதாவது இருந்தால் அதை சத்தம் போட்டு வீட்டாருக்குத் தெரிவிக்கும். வித்தியாசமான மனிதர்களை கண்டால் தொடர்ந்து குரைக்கும். நாம் ஊர் பயணம் எங்காவது சென்று விட்டால் வீட்டை பத்திரமாக பாதுகாக்கும்.

அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளையும் பார்த்துக்கொள்ளும் சிறந்த காவலாளியாக நாய் இருந்தது. நாய்க்காக நாம் எதையும் சமைத்து வைத்துவிட்டு ஊர் பயணம் செல்வதில்லை. அக்கம் பக்கத்தினரே அவரவர் சாப்பிட்டு விட்டு  ஆளுக்கு ஒரு கைப்பிடி சாதம் வைத்தால் அதை சாப்பிட்டுவிட்டு வீட்டை காக்கும். அதுவே அதுக்கு போதுமானதாகவும் இருக்கும். இந்த நாய் வெளியில்தான் இருக்கும். வீட்டிற்குள் வராது.

ஆனால், இன்றைக்கு நகர்புறங்களில் வளர்க்கும் நாய் மிகவும் வித்தியாசமாக செயல்பட வைக்கிறது. நாய் வளர்ப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டி இருந்தால், அதற்காக சமைத்து சாப்பாடு வைத்து, அதை பார்த்துக் கொள்வதற்காக ஒரு ஆளை அமர்த்தி அல்லது நாயை கவனித்துக் கொள்ளும் காப்பகத்தில் விட்டுவிட்டு செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் அதை குளிக்க வைக்க தனி சோப்பு இத்யாதிகள் தேவைப்படுகிறது. அதற்கான சமையலுக்கு தனி பாத்திரங்கள் வைத்து சமைத்து போடுகிறார்கள். அதன் கழிவுகளை வெளியேற்ற அவ்வப்பொழுது வீட்டில் இருப்பவர்கள் வெளியில் அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். அப்படி செல்லும்பொழுது வழியில் அசுத்தம் செய்து விட்டால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் முகம் சுழித்து ஏதாவது பேசுவதையும் பொறுத்துக்கொள்ள வேண்டி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அது படுப்பதற்கு தனி படுக்கை மெத்தை என்று ஏற்பாடு செய்து வைத்திருக்கிறார்கள். அதையும் அவ்வப்பொழுது சுத்தம் செய்து போட வேண்டியிருக்கிறது.

கொஞ்சம் அசுத்தமாக இருந்தாலும் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் சங்கடப்படுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் நாய் வளர்ப்பவர்கள் வீட்டிற்கு பெற்றோர்களே போய் வர விருப்பப்படுவதில்லை. அதிலும் மழைக்காலம் வந்து விட்டால் வீட்டிற்குள்ளேயே அதற்கு படுக்கையறை வேறு இருப்பதால் சாப்பிடவும் தண்ணீர் அருந்தவும் மிகவும் சங்கடப்படுகிறார்கள் வீட்டிற்கு வரும் பெரியவர்கள்.

இதனால் வீட்டிலும் சில சண்டை சச்சரவுகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. வீட்டில் பெரியவர்களாகிய எங்கள் உடல்நிலை சரியில்லை என்றால் வந்து பார்ப்பதில்லை. நாய்க்கு என்றால் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ஆஸ்பத்திரி வரை அழைத்துச் சென்று எல்லாம் செய்வதற்கு மட்டும் நேரம் இருக்கிறது. எங்களை கவனிக்க நேரமில்லையா? என்றும் மன வருத்தப்படுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
வாதம், மோதலை தவிர்க்கும் 7 விஷயங்களும் தீர்வுகளும்!
Pet

இன்னும் சில வீடுகளில் படித்து முடித்து வேலைக்குச் சென்று வெளியூரில் வேலை பார்க்கும் பிள்ளைகள் வீட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கு நாயை வாங்கி கவனிக்கும்படி விட்டுவிட்டுச் சென்று விடுகிறார்கள். அதை கவனிப்பதற்கு அவர்களுக்குப் பிடிப்பதில்லை. பிள்ளை வாங்கிவிட்டானே என்று வளர்க்கிறார்கள். இது தேவையில்லாத சுமை. நாங்கள் பணிபுரிந்து ஓய்வில் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்றால், இந்த நாயினால் பெரிய அல்லல்பட வேண்டி இருக்கிறது என்று கஷ்டமாக சொல்வதையும் கேள்விப்பட முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அதை கவனித்து எல்லாம் செய்துவிட்டு எங்களுக்கு சாப்பிடக்கூட பிடிக்கவில்லை என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.

இன்னும் ஒருசிலர் பர்த்டே வெட்டிங் டே என்று வரும்பொழுது நாய்க்குட்டியை அன்பளிப்பாகக் கொடுத்து அவர்களின் அன்பினை வெளிப்படுத்துகிறார்கள். இதனாலும் சில பிரச்னைகள் எழுகிறது. இங்கு எப்பொழுதும் நாய் வீட்டிற்குள்ளேதான் வாசம் செய்கிறது. வெளியில் விட்டால் யாராவது பிடித்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம். சில நாய்கள் குறைப்பது கூட இல்லை. யாராவது வந்தாலும் சென்றாலும் வேடிக்கை பார்க்கிறது. அப்பொழுதுதான் இந்த எண்ணம் தோன்றுகிறது நாய்க்கு நாம் காவலா? நாய் நமக்கு காவலா? என்று. ஆக, ஒரு குழந்தையை வளர்ப்பதற்கும் மேலான செலவுகளையும் கவனிப்பையும் ஒரு நாய்க்கு கொடுக்க வேண்டி இருப்பதை இங்கு கவனிக்க முடிகிறது.

இதற்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் பிளளைகள் சொல்வது என்னவென்றால் செல்லப்பிராணிகளை வளர்ப்பது, குறிப்பாக நாய் வளர்ப்பது அதனுடன் நேரம் செலவிடுவது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. மன அழுத்த ஹார்மோன்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. தனிமை உணர்வை குறைக்கிறது. மகிழ்ச்சி உணர்வுகளை அதிகரிக்கச் செய்கிறது. நாயுடன் கொஞ்சுவது, விளையாடுவது, வெளியில் கூட்டிச் செல்வது போன்றவற்றால் நல்ல உடற்பயிற்சி கிடைக்கிறது. இதனால் உற்சாகம் மேலிடுகிறது. உட்கார்ந்தே வேலை பார்ப்பதில் சலிப்பு தட்டுவதில்லை. ஏனென்றால் அவ்வப்பொழுது எழுந்து நாய்க்கு வேண்டிய வேலைகளை செய்யவேண்டி இருப்பதால், அதில் ஒரு மனநிறைவு கிடைக்கிறது என்கிறார்கள்.

நாணயத்தின் இரு பக்கம் போல் எல்லாவற்றிலும் நிறைகுறை, நன்மை, தீமை இருப்பது போல் நாய் வளர்ப்பிலும் இருப்பதை நன்றாகப் பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ள முடிகிறது.

முடிந்தவரை நாய் வளர்ப்பை பிடிக்காத பெற்றோர்களிடம் வளர்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தாமல், அதை பிடித்தவர்களே அருகில் இருந்து வளர்ப்பது பிரச்னைகளைத் தீர்க்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com