விமான நிலைய சக்கர நாற்காலி சேவை!

விமான நிலைய சக்கர நாற்காலி சேவை!

மேலை நாடு செல்லும் மூத்த குடிமக்களில் பெரும்பாலான வர்கள் விமான நிறுவனம் அளிக்கும் “வீல் சேர் அசிஸ்டன்ஸ்” என்ற சக்கர நாற்காலி சேவைகளைக் கோரிப் பெறுவதுண்டு. இதனைப் பொதுவாக இந்தியர்கள் மற்றும் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது என்னுடைய கணிப்பு.

மேலை நாடு செல்வோர், தாங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைய ஓரிரண்டு விமான நிலையங்களில் இறங்கி, வேறொரு விமானத்தில் ஏற வேண்டியிருக்கும். சர்வதேச விமான நிலையங்களில் பல முனையங்கள் (டெர்மினல்ஸ்), எண்ணிலடங்கா வாயில்கள் (கேட்ஸ்) இருக்கின்றன. உங்கள் விமானம் தரையிறங்கிய வாயிலிலிருந்து, நீங்கள் ஏறப்போகும் விமானம் அதே முனையத்தின் மற்றுமொரு வாயிலிலோ அல்லது வேறொரு முனையத்திலோ இருக்கலாம். சர்வதேச விமான நிலையங்கள் மிகப் பெரியவை. ஆகவே அடுத்த வாயிலை அடைய நீங்கள் வெகுதூரம் நடந்தோ, விமான நிலையத்தின் உள்ளே இருக்கும் ரயில் சேவை அல்லது வெளியில் உள்ள பேருந்து சேவையைப் பிடித்தோ செல்ல வேண்டும்.

தனியே நீங்கள் விசாரித்துச் செல்வதை விட, சக்கர நாற்காலி உதவியுடன் சென்றால் இடம் தேடி அலைய வேண்டிய சிரமமில்லை. “பெரிசு” கள் விமான நிலையத்தில் வெகு தூரம் நடப்பதையும் தவிர்க்கலாம். பாதுகாப்புச் சோதனை செய்யுமிடத்தில், சக்கர நாற்காலி பயணிகளுக்கு சில விமான நிலையங்களில் வரிசையைத் தாண்டிச் செல்ல அனுமதி அளிக்கிறார்கள். அவ்வளவாக ஆங்கிலம் பேசத் தெரியாத மூத்த குடிமக்களுக்கு இந்த சேவை பெருதும் உதவுகிறது.. 

ஆனால், இந்த சேவையால் நாங்கள் பயணத்தைத் தவற விட நேர்ந்தது.

சமீபத்தில் நானும், என் துணைவியாரும் கனடாவிலிருந்து சென்னை திரும்பினோம். எங்களுடைய விமானப் பயணம் டொராண்டோவிலிருந்து பாரிஸ் வழியாகச் சென்னை என்று பதிவு செய்யப்பட்டது. பாரிஸ் விமான நிலையத்தில் கனடாவிலிருந்து வந்த விமானத்திலிருந்து இறங்கி, சென்னை செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு இரண்டு மணி நேர இடைவெளி இருந்தது. மூத்த குடிமக்கள் என்ற காரணத்தால் “சக்கர நாற்காலி” உதவி கோரியிருந்தோம்.

டொராண்டோவிலிருந்து விமானம் தாமதமாகக் கிளம்பியது. பாரிஸில் விமானம் நிறுத்த இடம் கிடைக்காததால், விமானம் ஓடுபாதையில் சற்று நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை. விமானத்திலிருந்து இறங்கிய பயணிகளில் ஒன்பது மூத்த குடிமக்கள் “சக்கர நாற்காலி” உதவி கேட்டிருந்தார்கள். அதில் ஏழு பயணிகள் சென்னை விமானத்தில் ஏற வேண்டும். சக்கர நாற்காலியில்லை, அதனை தள்ளிச் செல்ல பணியாட்கள் யாருமில்லை என்று நாங்கள் காக்க வைக்கப்பட்டோம். நாங்கள் நடந்து செல்கிறோம், வழியைச் சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, “இல்லை, தொலை தூரம் செல்ல வேண்டும். நீங்கள் தனியாகச் சென்றால் விமானத்தைத் தவறவிடும் வாய்ப்புகள் அதிகம்” என்றனர்.

சக்கர நாற்காலி கிடைத்து, பாதுகாப்புச் சோதனைக்குச் சென்றால் நீண்ட வரிசை. சக்கர நாற்காலி பயணிகளுக்கு முன்னுரிமை இல்லை என்றார்கள். விளைவு – தொடர் தாமதத்தால் சென்னை செல்லும் விமானம் எங்களுக்கு “டாடா” காட்டி விட்டுச் சென்று விட்டது.”

ஏர்ப்ரான்ஸ் நிறுவனத்தினர், மாலத்தீவு, கொலாம்போ வழியாக சென்னைக்குத் திரும்ப பயணச் சீட்டு செய்து கொடுத்தனர். அதற்காக ஏழு மணி நேரம் காத்திருக்க நேர்ந்தது. காலை உணவிற்கு ஏற்பாடு செய்து தரவில்லை. எங்களுடன் விமானத்தைத் தவறவிட்ட சிலர் காலையில் உணவுடன் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக தொலை தூர விமானப் பயணம் மேற்கொள்ளும்போது நானும் என் துணைவியாரும் சப்பாத்தி, பிஸ்கட் கொண்டு செல்லும் வழக்கம் உண்டு. ஆகவே இவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். மதியம் இரண்டு மணிக்கு மேல் உணவிற்கு “வவுச்சர்” கொடுத்தார்கள். கொலாம்போ விமான நிலையத்தில் இறங்கிய நாங்கள் சக்கர நாற்காலி உதவிக்குக் காத்திராமல் சென்னை செல்லும் விமானம் இருந்த வாயிலை அடைந்தோம். பன்னிரண்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு  சென்னை வந்தடைந்தோம்.

தொலை தூர விமானப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வேண்டுகோள் ;

1. நடுவழியில் விமானம் மாற வேண்டிய பயணம் என்றால், குறைந்தது மூன்று மணி நேர இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவும் நீங்கள் சக்கர நாற்காலி உதவி கோரும் மூத்தக் குடிமக்கள் என்றால், நான்கு மணி நேர இடைவெளி இருப்பது நல்லது.

2.  நடுவழியில் சாப்பிடுவதற்கு உணவு மற்றும் பிஸ்கட் எடுத்துச் செல்ல மறக்காதீர்கள். எதிர்பாராத விதமாக ஏற்படும் தாமதத்திற்கு இது சமயசஞ்சீவியாக இருக்கும்.

3.  அன்னியச் செலாவணி, முக்கியமாக அமெரிக்கன் டாலர், கொஞ்சமாவது கைவசம் வைத்திருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com