
அரசியல் கூட்டங்கள் தொடங்கி, போக்குவரத்து நெரிசல்கள் வரை, சிக்கித் தவிக்கும் ஆம்புலன்ஸ் காட்சிகளும் செய்திகளும் இன்று பல்வேறு கோணங்களில் பேச்சுப்பொருளாக உலாவிக் கொண்டிருக்கிறது. அதற்கு மக்கள் கூட்டம் ஒரு காரணமாக இருந்தாலும், இதற்கான தீர்வுதான் என்ன?
வெளிநாட்டிலும், நம் நாட்டிலும் எந்த அளவில் இதன் தாக்கம் இருக்கிறது? இந்தியாவில் நகர சாலைகளில் ஆம்புலன்ஸ்களுக்குத் தற்போது பிரத்யேக பாதைகள் அல்லது அதற்கென்று முன்னுரிமை தர வேண்டிய வழித்தடங்கள் என்று இல்லை. பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல், இது போன்ற அவசர கால நடவடிக்கைகளில் தாமதங்களுக்கு வழிவகுக்கிறது.
மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் குறியீடு (AIS-125)படி ஆம்புலன்ஸ்களுக்கு சரியான பாதையைத் தர கட்டாயப்படுத்தினாலும்; இதை அமல்படுத்த சற்று கடினமாகத்தான் உள்ளது. இப்போதுள்ள நகர்ப்புற உள்கட்டமைப்பு அவசரக்கால வாகனங்களுக்கு என பிரத்தியேகப் பாதைகளைத் தர அனுமதிப்பதும் இல்லை;
மற்ற வாகன ஓட்டிகளுக்கும் சில பிரச்னைகளையும் தருகிறது. இதை ஈடுகட்ட GPS அடிப்படையிலான அந்தந்தப் போக்குவரத்து சிக்னலுக்கான முன்னுரிமை தரக்கூடிய வசதி இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது.
உலகளவில் பல நாடுகள் ஆம்புலன்ஸ்களின் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்வதற்கான நெறிமுறைகளை உருவாக்கி முன்னோடியாகக் திகழ்கின்றன.
அமெரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் அவசர வாகன முன்னெச்சரிக்கை (Emergency Vehicle Preemption) போன்ற அமைப்புகள் ஆம்புலன்ஸ்களே போக்குவரத்து சிக்னல்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கின்றன. அவை சாலை சந்திப்புகளை நெருங்கும்போது தங்கள் வசதிகேற்றாற்போல் பச்சை நிறமாக மாற்ற வழிவகுக்கின்றன.
சிங்கப்பூரும், இஸ்ரேலும் பிற வாகனங்களை மறு வழிப்படுத்தவும், அதற்கேற்ற அவரவர்களின் பாதைகள் மாறும்போது அதை தெளிவுபடுத்த AI, IoT ஐப் பயன்படுத்தி ஸ்மார்ட் போக்குவரத்து மேலாண்மையைச் செயல்படுத்தியுள்ளன.
ஸ்வீடனின் 'ப்ளூ லைட்' (Blue Light) வழித்தடங்கள், ஜெர்மனியின் 'ரெட்டங்ஸ்காஸ்' (rescue lane) சட்டம் போக்குவரத்து நெரிசல்களின்போது ஓட்டுநர்கள் அவசரப் பாதைகளை உருவாக்க வேண்டும் என்று கோருகின்றன. இவற்றையெல்லாம் ஒரு பொதுக் கல்வி மற்றும் கடுமையான விதிமுறைகளாக இந்த நாடுகள் பின்பற்றுகின்றன.
இந்தியாவில் என்ன செய்யலாம்?
இந்தியா முழுக்க தடையற்ற ஆம்புலன்ஸ் இயக்கத்தை அடைய ஒரு பன்முக உத்தி அவசியம்.
முதலாவதாக ஆம்புலன்ஸ்களுக்கு முன்னுரிமை அளிக்கும் AI-இயங்கும் போக்குவரத்து சிக்னல் கட்டுப்பாட்டு அமைப்புகளை ஒருங்கிணைப்பது தாமதங்களை வெகுவாகக் குறைக்கும்.
இரண்டாவதாக அவசர வாகனங்களுக்கு ‘அனைவரும் மதிப்பளிப்பது’ குறித்து பொது விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஓட்டுநர்களுக்கு ஒவ்வொரு நாளும் செய்திகள் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்ச்சியாகத் தெரிவிக்க வேண்டும்.
மூன்றாவதாக மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் நகர்ப்புறத் திட்டமிடலின்போது அதிக வாகனங்கள் கொண்ட மண்டலங்களில் பிரத்யேக அவசரப் பாதைகள்(emergency lanes) சேர்க்கப்பட வேண்டும். இதோடு நிகழ்நேர வாகன கண்காணிப்பு (real-time vehicle tracking), geofencing, Centralized Dispatch Systems போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆம்புலன்ஸ்களின் பாதைகளை மேம்படுத்தலாம்.
பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற நகரங்களில் பைலட் திட்டங்கள் (Pilot projects) என்ற ஆம்புலன்ஸ்களுக்கான ஸ்மார்ட் போக்குவரத்து தீர்வுகளை ஆராயத் தொடங்கியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.