
"புதுசா வீடு கட்டி இருக்கேன். ஆனால் வீட்டுக்கு வாங்கனு யாரையும் அழைக்க முடியவில்லை'. "ஏன்?" "வரவங்க சும்மா போக மாட்டாங்க. ஜோரா இருக்குனு கண்ணு வெச்சுட்டு போவாங்க. கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதுனு சொல்வாங்க". "அதுவும் சரிதான்".
இதுபோன்ற உரையாடல்களை எங்கேனும் நிச்சயம் கேட்டிருப்போம். கண் திருஷ்டி என்பது அவ்வளவு பிரச்னை தருமா? அதற்கு நிவாரணம் எதுவும் இல்லையா? ஏன் இல்லை?
நமது முன்னோர்கள் காலத்தில் அதிகம் பயன்பாட்டில் இருந்த… ஆனால் கிடைத்தற்கரிய மூலிகையான அரகஜா இருக்குமிடத்தில் கண் திருஷ்டி எல்லாம் தூசாகப் பறந்துவிடும் என்கிறது ஆன்மிக குறிப்புகள். அரகஜா என்றால் என்ன? எப்படி அதன் மூலம் நன்மை பெறலாம்? வாருங்கள் இங்கு காண்போம்.
அரகஜா எனும் தெய்வீக மூலிகை கோவில் பூஜைகளில் பயன்படுத்தப்படும் ஒரு வாசனை திரவியமாக உள்ளது. இதனுடன் மஞ்சள் மற்றும் குங்குமம் கலந்து கடவுள் சிலைகளில் பூசப்படுவதாக சொல்லப்படுகிறது. செல்வத்தை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு எனவும் நம்புகின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் அரகஜா சுலபமாக நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கின்றது எனினும் அக்காலத்தில் இது அவ்வளவு எளிதில் கிடைக்காத அரிய மூலிகையாக இருந்துள்ளது. இந்த அரகஜாவை அந்த காலத்தில் கடவுளின் கண்களை திறப்பதற்காக மட்டும் பயன்படுத்தி வந்ததாக குறிப்பிடுகின்றனர்.
துளசி, பன்னீர், பச்சைக் கற்பூரம் உள்ளிட்ட தெய்விக மூலிகைப்பொருட்களில் ஒன்றாகக் கருதப்படும் இதன் மணம் குலதெய்வத்தை நம்மிடம் ஈர்க்கவும் இறை சக்தியை நமது மனம் உள்வாங்கவும் பயன்படுகிறது.
குறிப்பாக வெளிப்புற வாழ்வினால் உண்டாகும் கவலைகளை உடைய ஒருவரால் நிச்சயமாக வாழ்க்கையில் தனது குறிக்கோளை அடைந்து முன்னேற்றம் காணமுடியாது. மனதை தெளிவாக்கி நினைத்ததை சாதிக்கும் வலிமையை இந்த மூலிகை சாந்து தருவதாக நம்பிக்கை உண்டு.
இப்போது கண் திருஷ்டிக்கு அரகஜா எப்படி உதவுகிறது என பார்ப்போம்.
பிரபஞ்சத்தின் நாம் அறியாத குறிப்பிட்ட ஒரு மைய புள்ளியை மையமாக கொண்டுதான் எல்லா சக்திகளும் செயல்படுகிறது என்பதை அறிவோம். அப்படி ஒரு மனிதன் மற்றொரு மனிதனையோ அல்லது பொருட்களையோ உற்று பார்க்கும்போது அந்த மனிதனின் கண்ணிலிருந்து வெளிப்படும் காந்த சக்திகள் magnetic vibrations வெளிப்பட்டு காண்பவற்றைத் தாக்கும். இதையே கண் திருஷ்டி என்கிறோம்.
புது வீடு கட்டினால் அவ்வழியே செல்லும் நல்லவர் கெட்டவர் ஆஹா என அந்த வீட்டை உற்று பார்த்து செல்வது வழக்கமும். அவர்களில் நல்ல எண்ணங்கள் கொண்டவர் எனில் எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் பொறாமையுடன் தீயஎண்ணம் கொண்டவர் பார்க்கும்போது அந்த எதிர்மறை அதிர்வுகள் (vibrations) அந்த வீட்டை தாக்கும் அல்லது அந்த வீட்டின் உரிமையாளர்களின் உடல் நலத்தை பாதிக்கு வாய்ப்பு உண்டு. இதுவும் ஒரு எண்ண சக்தியின் வெளிப்பாடே.
இதைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டதுதான் புதிய கட்டிடத்தின் மேல் வைக்கும் ஆள் உயர வைக்கோல் மனித பொம்மை. கட்டிடம் கட்டி முடித்ததும் அந்த பொம்மையை தீயில் எரித்துவிடுவதால் தீயசக்திகள் மற்றும் கண் திருஷ்டி கழியும் என்ற கருத்து உண்டு.
இதே நிலை இறைவன் திருவுருவங்களுக்கும் நேர்கிறது என்கிறது ஆன்மிகம். கோவிலில் உற்சவம்போது ஸ்வாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்துவிட்டு இறுதியில் ஸ்வாமியின் கன்னத்தில் ஒரு சிறிய கருப்பு நிற பொட்டு வைப்பார்கள். சாமியின் அலங்காரத்தை கெடாமலும் சாமிக்கு கண்தீருஷ்டி ஏற்படாமல் காக்கவுமே இப்படி ஒரு மரபு கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல் திருமண அலங்காரத்தில் மணமகன் மணமகள் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைப்பார்கள்.
இதற்கெல்லாம் தீர்வாகத்தான் உள்ளது அரகஜா எனும் அற்புத தெய்வீக மூலிகை. ஒருவரின் நல்வாழ்வு மேம்படவும் கண்திருஷ்டி தோஷம் இல்லாமல் வாழவும். இறைவழிபாடுபோது இறை சக்தியை முழுவதும் பெற இந்த அரகஜா உதவும்.
மேலும் இறை சக்தியை நாம் பெற பெண்கள் கண் புருவத்திலும், ஆண்கள் சுழி மற்றும் நெற்றியில் அரகஜா வைத்துக்கொண்டு பிரார்த்தனை செய்தால் வேண்டுதல் விரைவாக நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொடர்ந்து 27 நாட்கள் இந்த அரகஜா பயன்படுத்தி வந்தால் நமக்கு ஏற்படும் சிறு சிறு பிரச்னைகள், கண்திருஷ்டி, காரியதடை, வியாபாரத்தடை, திருமணத் தடை, திருமணம் தள்ளிப் போகுதல் என அனைத்தும் கைகூடும் என்கிறது ஆன்மிகக் குறிப்புகள்.
நாமும் இதை நாட்டு மருந்து கடைகளில் வாங்கி நம்பிக்கையுடன். தினமும் நெற்றியில் வைத்து எல்லாவிதமான நன்மைகளையும் பெறுவோம்.