மடயன், மடையன் இரண்டும் ஒன்றா?

மடயன், மடையன் இரண்டும் ஒன்றா?
Published on

க்கத்து வீட்டு நண்பர் வேகமாக வந்தார். “எங்க வேலைக்காரன் சரியான மடையன் சார்” என்றார். “அவன் மடயனா அல்லது மடையனா” நன்றாக யோசித்துச் சொல்லுங்கள் என்று சொன்னேன். “என்ன சார், இரண்டும் ஒன்றுதானே” என்றார். “மடத்தனமான காரியங்களைச் செய்பவர்களை மடயன் என்று சொல்லலாம். முட்டாள் என்று பொருள்படும். அந்த காலத்தில் கிராமத்தைக் காப்பாற்ற தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து நீர்நிலைகளின் மடையைத் திறப்பவர்களை மடையர்கள் என்று அழைத்தார்கள்.

மடு என்பது நீர் நிலை. குளம், ஏரி, கண்மாய்  எல்லா வற்றிற்கும் பொருந்தும்.  இந்த நீர்நிலைகளில் நிறைந்து நிற்கும் நீரைப் பாசனத்திற்காகத் திருப்பி விடுவதற்காக ஒரு கதவு பொருத்தப்பட்டிற்கும். இந்தக் கதவு பெரும்பாலும் இரும்பு அல்லது மரத்தால் செய்யப் பட்டிருக்கும். இந்தக் கதவிற்குப் பெயர் மதகு. பாசனத்திற்கு வேண்டிய அளவு திறந்து பின் மூடிவிடும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

நீர் நிலைகளின் அடிப்பாகத்தில் மூங்கில் குழாய்கள் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் கதவின் பெயர் மடை. மழைக் காலத்தில் ஏரி நிரம்பிவிட்டால், ஏரி உடைந்து நீர் ஊருக்குள் நுழையும் அபாயம் ஏற்படும். ஊர் மக்களைக் காப்பாற்ற நீரில் மூழ்கி ஏரியின் அடியில் இருக்கும் மடையைத் திறக்க வேண்டும். மூச்சுப் பிடித்துக் கொண்டு நீரில் மூழ்கி, மடையைத் திறப்பவன் உயிரிழக்கும் அபாயமும் உண்டு. இந்த அபாயகரமான பணியைச் செய்பவர்களை மடையன் என்று அழைப்பர்.

மடை திறக்கச் செல்லும் மடையர்களை, போர் வீரனுக்கு ஒப்பாக மாலையிட்டு, கோவிலில் சிறப்பு பூஜை செய்து அனுப்புவது வழக்கம். இன்றும் கிராமத்தில், ஏரிகளின் அருகில், மடை திறக்கச் சென்று உயிர் நீத்தவர்களின் நடுகல்லைக் காணலாம். ஒரு முறை மடையைத் திறந்த பின், அந்த ஏரியில் உள்ள அனைத்து தண்ணீரும் வெளியேறின பின்புதான், மூட முடியும்.

பிற்காலத்தில், ஊரைக் காப்பாற்றும் நற்பணியில் உயிர் இழந்தவர்களை முட்டாள்களாகச் சித்தரிக்க, மடையர்கள் என்ற பேச்சு வழக்கு வந்தது.

ஒருவன் தங்கு தடையின்றிப் பேசினால் அவனுடைய பேச்சு “மடை திறந்த வெள்ளம் போல” இருந்தது எனக் கூறுவர்.

மடை என்பதற்கு சமையல் என்றும் பொருள் உண்டு. மடையர் என்பவர் சமையல்காரர். சமையலறை “மடைப்பள்ளி” எனப்படும். இன்றும் கோவில்களில் பூஜைக்கு பிரசாதம் செய்கின்ற இடத்தை மடைப்பள்ளி என்பார்கள்.

ஒரு செய்யுளில் வருகின்ற தமிழ் நடை உரைநடைப் பாங்கில் இருந்தால், அதை உரைப்பாட்டு மடை என்பார்கள். சிலப்பதிகாரம் உரைப்பாட்டு மடையில் எழுதப்பட்டது. உதாரணத்திற்கு, சிலப்பதிகாரம்  மதுரைக் காண்டம் “ஊர் சூழ்வரி” பகுதியிலிருந்து சில வரிகள் :

“என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத் தோளீ

நின்றிலன் நின்ற சிலம்பொன்று கையேந்தி

முறையில் அரசன் தன் ஊர் இருந்து வாழும்

நிறைஉடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈது ஒன்று

இந்த உரைப் பாட்டு மடையை நாம் இப்போது வசனக் கவிதை என்று குறிப்பிடுகிறோம்.

நான் படித்த சிலேடை ஒன்று நினைவிற்கு வருகிறது.

இரண்டு மடத்தின் அதிபதிகள் சந்தித்துக் கொண்டனர்.

முதலாமவர் : வாருங்கள் மடத் தலைவரே

மடத்தின் தலைவர், மட (முட்டாள்) தலைவர். இரு பொருள்கள்.

வந்தவர் புத்திசாலி. அவருடைய பதில்.

இரண்டாமவர் : வந்தேன் மடத்தடிகளே

மடத்தின் அடிகள், மட (முட்டாள்) தடிகள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com