
ஒரு இக்கட்டான சூழலில் தாமாக ஒருவர் முடிவெடுப்பதை விட நண்பர்கள் உறவினர்கள் மற்றும் நலம் விரும்பிகளை கலந்து ஆலோசித்து சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து முடிவெடுப்பது நலம். அதிலும் ‘பிறர் ஆலோசனைகளைக் காது கொடுத்து கேளுங்கள். ஆனால் இறுதி முடிவு எடுப்பது நீங்களாகத்தான் இருக்க வேண்டும்’ என்கிறார்கள் அனுபவசாலிகள்.
சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட பிறரின் அபிப்பிராயங்களை சார்ந்தே வாழ்தல் தேவையற்றது. பிறர் மதிப்பில் உயர வேண்டும் என்பதற்காக பெரும்பான்மையான மக்கள் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பிரயாசைப்படுகின்றனர் தன் வாழ்நாள் முழுவதும் என்பது வியப்பூட்டும் விஷயம். தங்களைப் பிறர் தாழ்வாக நினைத்து விடக்கூடாது என்பதற்காக லோன் போட்டு கார் வாங்குவது, விலையுயர்ந்த மொபைல்கள், பிராண்டட் பொருட்களை மட்டும் வாங்குவது, தன் பிள்ளைகளை கடன் பட்டாவது பெரிய சி.பி.எஸ்.சி பள்ளிகளில் படிக்க வைக்கும் ஆண்கள், தேவையில்லாமல் ஆடைகள், ஆபரணங்கள், ஆடம்பரப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் பெண்கள் இருக்கிறார்கள். ‘என் பொருளாதார நிலைமை நன்றாகத்தான் இருக்கிறது. சமூகத்தில் நானும் ஒரு உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறேன்’ என்று காட்டிக்கொள்ள இவ்வாறு எல்லாம் செய்கிறார்கள்
தன்னை மதிப்பு மிக்கவர்களாக காட்டிக்கொள்ள நடுத்தர வர்க்க மக்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கான உதாரணமாக இரண்டு சம்பவங்களை சொல்லலாம். உலகையே அச்சுறுத்திய கொரோனா காலத்தில் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த நேரத்தில் வெளி உலகத்தோடு தொடர்பு சற்றே அற்றுப்போன சூழல் அது. பங்களாதேஷ் நாட்டில் வைரத்தின் விற்பனை அதிகரித்தது. அதை வாங்கியவர்களில் பலர் நடுத்தர வர்க்கத்து மக்கள். நம்மை பிறர் மதிக்க வேண்டுமே என்பதற்காக கடன் வாங்கியாவது வைரங்களை வாங்கத் துணிந்தனர். ஆனால் அவற்றை விற்க முடியாமல் பொருளாதார ரீதியாக அவர்கள் தம் செலவுகளை சமாளிக்க முடியாமல் திண்டாடினர். உலகின் விலை உயர்ந்தவை ஹெர்ப்ஸ் (Herbes) கைப்பைகள். அதன் குறைந்தபட்ச விலையே ஒரு லட்சத்திலிருந்து தான் ஆரம்பிக்கிறது. கொரோனா காலத்தில் இந்தியாவில் அதிகமான நடுத்தரவர்க்க மக்கள் இத்தகைய கைப்பைகளை வாங்கினர் என்கிற செய்தி ஆச்சர்யமளிக்கிறது. அவர்களின் தாழ்வு மனப்பான்மையும், பிறர் தம்மைப் புகழ வேண்டுமே என்ற எண்ணமுமே அவர்களை இப்படி செய்யத் தூண்டுகிறது என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள்.
குறைந்த சம்பளம் வாங்கும் பலர் விலை உயர்ந்த செல்ஃபோன்களையும், பைக்குகளையும் வாங்குகின்றனர். அவர்கள் கவர நினைப்பது தன்னைப்போல சமநிலையில் இருக்கும் மற்றொரு நபரையே. ‘உன்னை விட நான் பெரிய ஆள் பார்’ என்று காட்டிக் கொள்ளவே இவ்வாறு செய்கின்றனர். எனக்குத் தெரிந்த பெண் ஒருவர் தன் வீட்டில் பணிப்பெண் வைத்திருப்பதே அக்கம்பக்கத்து வீட்டினர் தன்னை மதிக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்றார். இன்னொரு பெண்மணியோ தன் வீட்டை எப்போதும் மிகவும் சுத்தமாக வைத்துக்கொள்ள மிகுந்த பிரயாசைப்படுவார்.
தூய்மை எண்ணம் தவறில்லை. ஆனால் பிறர் பாராட்டவேண்டும் என்பதற்காக மெனக்கெட வேண்டுமென்பதில்லையே.
பிறருக்கு எப்போதும் நம்மை நிரூபித்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற எண்ணம் எளிதில் நம்மை சோர்வடையச் செய்யும். நம்முடைய வாழ்க்கை நமக்கானது. அதை ஆனந்தமாக அனுபவித்து வாழ்வோமே.