
நெருங்கிய சொந்தம் அல்லது உறவுகள் இல்லாதவர் களுக்கு அது ஒரு மிகப்பெரிய பின்னடைவுகளை சந்திக்க வேண்டிய நிலை என நாம் நினைக்கிறோம். குடும்பம் என்பது, அக்குடும்பத்தின் தனி நபர் ஒருவருக்கு கஷ்டமான சூழ்நிலை ஏற்படும்போது இயற்கையாக ஆதரவுக்கரம் நீட்டக்கூடிய ஓர் அமைப்பு. அவ்வாறு ஆதரவு அளிக்க அந்தக் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் மறுத்து ஒதுங்கும்போது கஷ்டத்திலிருக்கும் அந்த நபர் தனிமைப்படுத்தப் படுகிறார்.
அந்தத் தனிமையே பிற்காலத்தில் அவருக்குள் அதீதமான தைரியத்தையும் சக்தியையும் உண்டு பண்ணிக்கொள்ள உற்ற துணையாகிவிடுகிறது.
அவர்களுக்குள் உருவாகும் நம்ப முடியாத வகையிலான 7 வித சக்திகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1.தற்சார்பு வாழ்க்கைக்குப் பழகிக்கொள்வது: தோள் கொடுக்க ஒரு துணையும் இல்லாதபோது தன்னையே ஒரு சக்தி வாய்ந்த துணையாக எண்ணிக்கொள்ள விரைவிலேயே அவர்கள் கற்றுக்கொள்கின்றனர். அவர்களுக்கு வேறு நட்போ, உதவிக்கரம் நீட்டுபவரோ இல்லை என்று இதற்கு அர்த்தமில்லை. எந்த ஒரு விஷயத்திற்கும் பிறரிடம் கலந்தாலோசிக்கத் தேவையின்றி சுதந்திரமாக அவர்களே முடிவெடுப்பர். மற்றவர்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் சவால்களை சந்திக்கவும் அவர்களுக்கு முடியும்.
2.பிரச்னைகளைத் தீர்க்கும் திறன்: எதிர்பாராத பிரச்னை தலையெடுக்கும்போது, பயப்படாமல், அமைதியுடன் யோசித்து அதற்கு தீர்வு கண்டு வெற்றியுடன் அப் பிரச்னையிலிருந்து வெளிவரவும் அவர்கள் தங்களுக்குள் திறமையை வளர்த்துக்கொள்வார்கள்.
3.உணர்ச்சிவசப்பட்டு உடைந்து போகையில் மீண்டு வருவது: சில கடினமான சூழ்நிலைகளில் மனமுடைந்துபோய் நிற்கையில், "உனக்காக நானிருக்கிறேன்" என்று கூற எவருமில்லையே என்ற ஆதங்கமும் கூட சேர்ந்து அவர்களின் உணர்ச்சிகளை வாட்டியெடுக்கும். அப்போது, அதிலிருந்து மீண்டு வருவது அவ்வளவு சுலபமானதாக இல்லாத போதும், 'எனக்காக நான் இருக்கிறேன்' என்று மனதிற்குள்ளேயே கூறிக்கொண்டு படிப்படியாக சகஜ நிலைக்குத் திரும்பிவிடுவர். அப்போது மனதளவில் அவர்கள் மேலும் பலமுள்ளவராக ஆகிவிடுவர்.
4.நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுடன் நெருங்கிப் பழகி தொடர்பை உண்டுபண்ணிக் கொள்ளுதல்: தானாக முன்வந்து அன்புடன் பழகுபவர்களுடன் தானும் அன்பைக் கொடுத்து நாளடைவில் ஒரே குடும்பத்தினர் போலிருக்க ஆரம்பிப்பது, இரத்த சம்பந்தமுடைய குடும்பத்தார் தரும் பலத்தை விட அவர்களுக்கு அதிக பலம் தரும்.
5.தனிமையே இனிமை என்ற மனப்பாங்கை வளர்த்துக் கொள்ளுதல்: தனிமையில் இருப்பவர்கள் எப்பவும் பல விதமான போராட்டங்களை சந்தித்துக்கொண்டே இருப்பர். தேவையில்லாத மன சஞ்சலங்களைத் தவிர்க்க அவர்கள் சோசியல் மீடியாவிலும் ஃபோன் கால்களிலும் தன்னை இருத்தி ஒவ்வொரு நிமிஷத்தையும் கழிக்க வேண்டியிருக்கும். குடும்பத்தாருடன் தொடர்பற்றுப் போனபின் தனிமையை மனமுவந்து ஏற்றுக்கொண்டு வாழ்வைத் தொடர அவர்களுக்குள் ஒரு தனி சக்தி பிறக்கும்.
6.படைப்பாற்றலும் சுய விழிப்புணர்வும் கொண்டிருத்தல்: தனிமையை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள் அதிகளவு படைப்பாற்றலும் விழிப்புணர்வும் கொண்டிருப்பர். அவர்கள் தங்களையே ஒரு அருமையான துணையாக எண்ணி அமைதியுடன் வாழப்பழகிவிடுவார்கள். அது ஒரு மதிப்பு மிக்க மற்றும் தனித்துவம் கொண்ட பலமாகும்.
7.மற்றவர்களுக்காக பச்சாதாபப்படுதல்.
தனக்காக இரக்கம் காட்ட ஒரு குடும்பமோ குடும்ப நபரோ இல்லாதபோது, கஷ்டத்திலிருக்கும் பிற நபர் மீது அவர்கள் தம் பச்சாதாபத்தைக் காட்டி கஷ்டப்படுபவர்களுக்கு உதவி புரிய தாமாக முன் வருவார்கள்.
காலப்போக்கில், தனிமையில் இருப்பவர்கள் தங்களால் ஏமாற்றங்களை தாங்கவும், மனஉளைச்சலை வெல்லவும், தனிமையில் இனிமை காணவும், நெருக்கடியான சூழலில் முடிவெடுக்கவும், வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கவும், பிரச்னைகளுக்குத் தகுந்த முறையில் தீர்வு காணவும் முடியும் என்ற நம்பிக்கையுடன் வாழ்க்கையை நகர்த்தத் தேவையான சக்தியைப் பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே நிஜம்.